விஜய் சேதுபதி... இருபத்தி ஐந்து படங்களில் நடித்துவிட்டார். பெரும்பாலான படங்களில் பாத்திரத்தைத் தாண்டி விஜய் சேதுபதிதான் நம் மனதில் நின்றார், நிற்கிறார். ஒரு நடிகனாக இது குறைபோலத் தெரிந்தாலும், அத்தனை பாத்திரங்களில் தெரிந்த விஜய் சேதுபதியும் நம்மை ரசிக்க வைத்ததுதான் அவரின் தனித்தன்மை. தன் 25ஆவது படமான 'சீதக்காதி'யில், தான் தெரியாமல் 'அய்யா ஆதிமூலம்' மட்டும் தெரியச்செய்திருப்பது (குரல் தவிர்த்து) பெரிய வெற்றி. ஓரளவு வளர்ச்சி பெற்ற நடிகர்கள் தங்கள் 25ஆவது படம் மிகப்பெரிய மாஸ் பாடமாகவோ, அல்லது படம் முழுவதும் நடிப்பில் பிரளயமாக மாறும் படமாகவோ அமைவதை விரும்புவார்கள். ஆனால், விஜய் சேதுபதி இப்படி ஒரு படத்தை கொடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சிதான். ஆனால், சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியம்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி... என்பதுதான் தலைப்பின் உள்ளே ஒளிந்திருக்கும் கதையின் ரகசியம். 'அய்யா ஆதிமூலம்'... நடிப்பை உயிராய் கருதும், நடிப்பு என்பது பார்வையாளர்கள் முன் உயிராக நடித்து உடனே எதிர்வினையைப் பெற வேண்டிய ஒன்று என்று கருதும் ஒரு தலைசிறந்த நாடக நடிகர். அரங்கு நிறைந்த கூட்டத்தின் முன் நடிக்கத் தொடங்கி அரங்கு வாடகை அளவுக்குக் கூட கூட்டம் வராத காலம் வரை வந்த சினிமா வாய்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு நாடகத்தைக் காதலித்து வாழ்ந்தவர், அந்தக் கலையின் வீழ்ச்சியைப் பார்த்துக் கலங்கி, தன் குடும்பத்தின் தேவையையும் கூட பூர்த்தி செய்ய முடியாதவராக நடித்துக்கொண்டிருக்கும்போதே உயிரிழக்கிறார். ஆனால், உண்மையான கலைஞனுக்கு மரணமில்லைதானே? அய்யாவின் மரணத்துக்குப் பின்னும் அவர் நடிக்கிறார், நாடே அவரது நடிப்பைக் கொண்டாடுகிறது. எப்படி? இதுதான், 'கலை நிரந்தரமானது, அதற்கு மரணமில்லை' என்று சொல்லும் பாலாஜி தரணீதரனின் 'சீதக்காதி'.
விஜய் சேதுபதி, மிகக் குறைவான நேரத்தில் அய்யா ஆதிமூலத்தை நம் மனதில் பதியவைக்கிறார். அதன் பின்னர் அவர் இல்லாத போதும் அவரது இருப்பு படத்தில் நிகழ்வது இயக்குனர் பாலாஜி தரணீதரனின் வெற்றி. படம் தொடங்கி ஏறக்குறைய அரை மணிநேரம் மிகவும் மெதுவாக நகர்கிறது. பார்வையாளரின் அதீத பொறுமையை கோரும் அந்தப் பகுதி, பொறுமையுடன் ரசித்தால் பல விஷயங்களை நமக்குக் கடத்துகிறது. லவகுசா தொடங்கி அவுரங்கசீப் வரை அய்யா ஆதிமூலம் நடிக்கும் ஒவ்வொரு நாடகமும் கால ஓட்டத்தை மிக அழகாகப் பிரதிபலிக்கின்றன. அந்தக் காட்சிகள் நம்மையும் ஒரு நாடகம் காணும் உணர்வு கொள்ள வைத்தது இயக்குனர், ஒளிப்பதிவாளரின் வெற்றி. அதன் பின் சற்றே வேகமெடுக்கும் படம், அதே மித வேகத்தில் இறுதிவரை நகர்கிறது.
நடிப்பு வராமல் தவிக்கும் நடிகராக ராஜ்குமாரும், நடிப்பை வாங்கப் பாடுபடும் இயக்குனராக பக்ஸும் அரங்கை சிரிப்பால் நிரப்பும் அந்தக் காட்சி பாலாஜி தரணீதரனின் நகைச்சுவை திறனுக்கு ஒரு சாம்பிள். அதே போன்ற காட்சி மீண்டும் ஒருமுறை வந்து மீண்டும் சிரிக்கவைத்தாலும் ரிப்பீட் ஆகும் உணர்வை தவிர்க்க இயலவில்லை. திரைப்படங்களில் அய்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்வதையும் அவார்டுகள் வாங்குவதையும் தாண்டி தமிழ்நாடே அவரது நடிப்பைக் கொண்டாடுவது, இளைஞர்கள் அவரது படம் போட்ட டீ-ஷர்ட் அணிந்து வருவதையெல்லாம் ஃபேண்டஸியின் பக்கம் நின்று முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் யதார்த்தத்தின் பக்கம் நின்று முழுமையாக ஒதுக்கவும் முடியாமல் கலவையான உணர்வோடு கடக்கவேண்டியிருக்கிறது. நடிகர்கள், ரசிகர்கள், ஊடகவியலாளர்கள், நீதிமன்றம் சார்ந்தவர்கள் என படம் முழுவதும் கூட்டம். படத்தில் மிகச் சில பாத்திரங்கள் மட்டுமே நம் மனதில் இடம் பெற, மற்றவையெல்லாம் காட்சிகளோடு நகர்ந்துவிடுகின்றன.
அய்யாவின் மனைவியாக அர்ச்சனா, அமைதியாக, சோகமாக பாத்திரத்தை வாழ்ந்திருக்கிறார். அவ்வளவுதான் அவருக்கு எழுதப்பட்டிருக்கிறது. மௌலி, தன் விரிந்த கண்களாலேயே அய்யாவின் வருகையை அறிவிக்கிறார். பரிவையும் கறார்தன்மையையும் சரியாக வெளிப்படுத்துகிறார். ராஜ்குமார், பக்ஸ், சுனில் மூவரின் காமெடி படத்தின் முக்கிய பகுதியாக வருகிறது. பார்வையாளர்களை அயர்ச்சி கொள்ளச் செய்யாமல் கொண்டுசெல்கிறது. சுனிலின் உதவியாளராக வரும் குண்டு மனிதர், நல்ல காமெடி கண்டுபிடிப்பு. இயக்குனர் மகேந்திரன் நீதிபதியாக பக்குவமாக நடித்திருக்கிறார், முடித்து வைக்கிறார்.
'96' படத்திற்குப் பிறகு 'சீதக்காதி'யிலும் கோவிந்த் வஸந்தாவின் இசை உயிரோட்டமாக வாழ்கிறது. 'அவன் நிழல்' பாடலில் மதன் கார்க்கியின் வரிகளும் சேர்ந்து படத்தை அழகாகப் பாடுகின்றன. நாடகக் காட்சிகளில் நம்மையும் நாடகம் பார்க்கவைத்தது, அய்யா இறுதி ஊர்வலக் காட்சிகளின் ஃப்ரேம்கள் என சரஸ்காந்த்தின் ஒளிப்பதிவு சிறந்த அனுபவம். அய்யாவை நமக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக அறிமுகம் செய்திருக்கலாம், மீண்டும் மீண்டும் வரும் சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம் போன்ற சில குறைகளைத் தாண்டி ஒரு நல்ல கலை வீழ்வதன் துயரையும் பிற வடிவங்களிலும் அந்தக் கலை நீண்டு வாழும் சாத்தியத்தையும், ஒரு கலைஞனுக்கு கலையின் மேல் உள்ள தீரா காதலையும் ஒரு புதிய களத்தை அமைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.
சீதக்காதி... பொறுமை இருந்தால் சில அருமையான அனுபவங்களைப் பெறலாம்.