Skip to main content

விஜய், அஜித் செய்ததை விஜய் ஆண்டனி செய்யலாமா? திமிரு புடிச்சவன் - விமர்சனம் 

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

நான், சலீம், பிச்சைக்காரன் என்று நல்ல படங்களால், நடிகராக மாறியவுடன் தன்னைக் கிண்டல் செய்தவர்களையும் வியந்து பார்க்க வைத்தவர் விஜய் ஆண்டனி. சைத்தான், எமன் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையென்றாலும் கதையாகப் பார்க்கும்போது சுவாரசியமான முயற்சிகள்தான். பிறகு, சற்றே திசை மாறி மாஸ் ஆடியன்ஸை கவரும் முயற்சியில் சமீபமாக இறங்கியுள்ள விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' அந்த வேலையை சரியாகச் செய்துள்ளதா?

 

vijay antony



சாலையில் சாக்கடை ஓடினால் இறங்கி அடைப்பை நீக்குகிறார், அட்வைஸ் பண்ணியே குற்றவாளிகளைத் திருத்துகிறார், பொது மக்களிடம் மிக மரியாதையாகவும் அன்பாகவும் நடந்துகொள்கிறார், க்ளைமாக்சில் வில்லனை அதிரடியாக அடித்து நொறுக்குகிறார்... இன்ஸ்பெக்டர் முருகவேல். விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சென்னைக்கு மாற்றப்படுகிறார். தவறான பாதைக்குச் சென்று, விஜய் ஆண்டனியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் முன்பே சென்னைக்கு ஓடிப்போன தம்பியை 'மீசை பத்மா' என்ற ரௌடியிடம் வேலை செய்யும் அடியாளாகச் சந்திக்கிறார். பாதை மாறிப் போன தம்பியை என்ன செய்தார், தம்பி போலவே பல சிறுவர்களைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் பத்மாவை இன்ஸ்பெக்டர் முருகவேல் என்ன செய்தார் என்பதே இயக்குனர் கணேஷாவின் 'திமிரு புடிச்சவன்'.

'இளம் குற்றவாளிகள்' என்ற காலத்துக்கு ஏற்ற, தேவையான, சுவாரசியமான ஒரு அடித்தளத்தை எடுத்துக்கொண்ட இயக்குனர் கணேஷா, அதற்கு மேல் உருவாக்கிய திரைக்கதை மிகப் பழையதாக இருக்கிறது. பொதுமக்களை 'முதலாளி' என்று அழைப்பது, 'உங்க வீட்டுல பக்கெட் காணாமப் போனால் கூட எங்க கிட்ட கம்ப்ளயின்ட் பண்ணுங்க' என்று அழைப்பது, போலீஸ் வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிக்கொடுக்க கடைகளில் வேலைபார்ப்பது என இந்தப் போலீஸ் திமிரில்லாத போலீஸ் நல்ல போலீஸ்தான். 'நடந்தா நல்லாத்தான் இருக்கும்' என்று தோன்றினாலும் மிகவும் செயற்கையாக இருப்பதால் காமெடியாகவே முடிகிறது. விஜய் ஆண்டனியின் போலீஸ் புதுமைகளால் முதல் பாதியில் கடந்து போகும் படம், இடைவேளைக்குப் பிறகு அங்கும் இங்கும் அலைபாய்கிறது. திருநங்கை போலீஸ், இளம் குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதம் என சில புதிய விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடிக்க செய்யும் அளவுக்கு பழைய விஷயங்கள் அதிகம்.

 

nivetha pethuraj



விஜய் ஆண்டனி, தன் நடிப்பின் அளவை நன்கு அறிந்தவர். பல உணர்ச்சிகளுக்கு ஒரே முகபாவத்தைக் காட்டி அவரது மொழிக்கு ஓரளவு நம்மை பழக்கப்படுத்தியிருப்பவர். ஆனாலும் படத்துக்குப்படம் படிப்படியாக தன் எல்லைகளை விரிவுபடுத்தி வருபவர். இந்தப் படத்தில், இன்னும் கான்ஃபிடன்ட்டாக ஆக்ஷன், பன்ச், 'ஏய்...' என்று சத்தமாக வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இவையெல்லாம் பலமான கதை, திரைக்கதைக்கு மேலே அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால்...? நிவேதா பெத்துராஜ், காக்கிச் சட்டையுடன் சென்னை மொழி பேசியிருக்கிறார். உருவத்துக்கும் பேச்சுக்கும் இருக்கும் முரண் முதலில் அதிர்ச்சியளித்தாலும் போகப் போகப் பிடிக்கிறது. ஒரே காவல் நிலையத்தில் நாயகன் இன்ஸ்பெக்டர், கூடவே நாயகியாக இருக்கிறார். படத்தின், நல்ல காமெடி அவர்தான். வில்லன் பத்மாவாக சாய் தீனா தன் வழக்கமான நடிப்பை குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். அவரது மீசை மட்டும் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இளம் குற்றவாளிகளாக வரும் அந்த சிறுவர்கள் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார்கள்.

 

sai dheena



இசையுடன் இந்த முறை படத்தொகுப்பையும் சேர்த்து கையில் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நடிக்க வந்த பின், இசையில் சற்று சறுக்கல் தெரிந்தது. இப்போது எடிட்டிங்கும் செய்திருக்கிறார். மூன்றும்  சுமாராகவே இருக்கிறது. படத்தை இன்னும் சீராக, சில காட்சிகளை சரியாக வெட்டித் தொகுத்திருக்கலாம். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் ஒரு மசாலா படத்திற்கான அளவில் வேலையை செய்திருக்கிறது. இயக்குனர் கணேஷா தமிழ் சினிமா பல படிகள் மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். பேரரசு ஸ்டைல் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி விஜய், அஜித் பயணித்த பாதையில் விஜய் ஆண்டனியும் செல்லலாமா என்றால் கண்டிப்பாக செல்லலாம். அதற்கேற்ற பலமான கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தையும் கொண்டு செல்லலாம்.

விஜய் ஆண்டனியின் நடிப்பு குறித்து ரசிகர்கள் அறிந்தே இருக்கின்றனர். இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதையில் ஏதோ ஒரு வித்தியாசம், சுவாரசியம் இருக்கும் என்று நம்பியே அவரது படங்களுக்கு வரவேற்பளித்தனர். அதுதான் விஜய் ஆண்டனியின் பலம். அதை அவர் இழக்கக்கூடாது. மற்றபடி 'திமிரு புடிச்சவன்', எதுவும் யோசிக்காமல் ஒரு படத்துக்குப் போலாம் என்று செல்பவர்களுக்குக் கொஞ்சம் பிடித்தவன்.                          

 

 

                      

சார்ந்த செய்திகள்