ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோ படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியிருக்கும் சூப்பர் ஹீரோ படமான வீரன் எந்த அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது?
ஹிப் ஹாப் ஆதி சிறு வயதாக இருக்கும் பொழுது அவர் தலை மேல் இடி விழுந்து சுயநினைவை இழக்கின்றார். மின்னல் தாக்கியதால் ஹிப் ஹாப் ஆதிக்கு சில சூப்பர் பவர்கள் கிடைக்கின்றன. இதற்கிடையே அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால் தான் அவர் ஊரின் காவல் தெய்வமான வீரன் அவரை தண்டித்துவிட்டார் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இதை அடுத்து சுயநினைவு திரும்பிய ஹிப் ஹாப் தமிழா ஆதி சிங்கப்பூருக்கு சென்று விடுகிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே வருடங்கள் பல கடந்து தற்போது அதே கிராமத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பூமிக்கு அடியில் மிக நீள வயர் அமைத்து மின்சாரத்தை கடத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் வீரன் கோயிலை இடிக்க முடிவெடுக்கின்றனர். இதை அறிந்து கொண்ட ஹிப் ஹாப் ஆதி அந்த கிராமத்திற்கு மீண்டும் வந்து இந்த மின்சாரத் திட்டத்தால் அந்த ஊர் அழிவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் ஆதிக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கும் மோதல் ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள்? கிராமத்துக்கு ஏற்படப்போகும் பேரழிவிலிருந்து சூப்பர் ஹீரோ வீரன் ஆதி தன் சூப்பர் பவரால் கிராம மக்களை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே வீரன் படத்தின் மீதி கதை.
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் கலகலப்பாகவும், மேக்கிங்கில் பிரம்மாண்டமாகவும், குழந்தைகளை கவரும் வகையில் அமைந்து அனைவரையும் ரசிக்க வைக்கும். ஆனால் இந்தப் படமோ இதுபோல் எதுவுமே இல்லாமல் மிகவும் பிளாட்டாக அமைந்து ரசிக்க வைக்க முயற்சி மட்டுமே செய்துள்ளது. பொதுவாக ஹிப் ஹாப் ஆதி படங்கள் என்றாலே நாயகன் துருதுரு என்று இருப்பார். திரைக் கதையும் துருதுருவென்று இருக்கும். பின்னணி இசை பாடல்கள் என அனைத்தும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்து அந்த படங்கள் வெற்றி பெறும் ஆனால் இந்தப் படத்திலோ இது எதுவுமே இல்லாமல் திரைக்கதையும் ஆங்காங்கே பல ஸ்பீடு பிரேக்கர்களிடையே பயணித்து அதில் நடித்துள்ள நடிகர்களும் சோர்வாக நடிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக மேக்கிங்கில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒரு ஊர் ஒரு கிராமம் என்று வரும் பட்சத்தில் மொத்தமே அந்த கிராமத்தில் விரல் விட்டு எண்ணினால் கூட 50 பேர் கூட தாண்டவில்லை. அவர்களையே படம் முழுவதும் காட்டி இதுதான் ஊர் என்றால் அது நம்பும்படியாக இல்லை. இது போல் படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே தென்பட்டு அயர்ச்சியை தருகிறது. இருந்தும் ஹிப் ஹாப் ஆதியின் டிரேட் மார்க் விஷயங்களான சில பல டைமிங் காமெடிகள் மற்றும் சிலிர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள் ஆங்காங்கே படத்தில் சில சில இடங்களில் மட்டும் இடம் பெற்று படத்தை கரை சேர்க்க உதவி செய்துள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.கே. சர்வன் திரைக்கதையில் இன்னமும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஏனோ இந்த படத்தில் ஏதோ ஒன்றை இழந்தது போலவே நடித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் கலகலப்பாக இல்லாமல் அமைதியாக நடித்திருப்பது படத்திற்கு பல இடங்களில் செட் ஆகவில்லை. அவ்வப்போது வரும் சில காமெடி காட்சிகளில் மட்டும் பழைய ஹிப் ஹாப் ஆதியை பார்க்க முடிகிறது. அதுவும் குறைந்த நேரமே என்பதால் மனதில் ஒட்ட மறுக்கிறது. அதேபோல் சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட அவரின் நடிப்பில் ஆக்ரோஷமும் குறைவாக இருப்பதும் சற்று மைனஸ் ஆக இருக்கிறது.
வழக்கமான கதாநாயகியாக வந்து செல்கிறார் நடிகை ஆதிரா ராஜ். இவருக்கு ஹிப் ஹாப் ஆதியை காதலிப்பதை தவிர படத்தில் வேறு அதிகமான வேலை இல்லை. அதை மட்டுமே செவ்வனே செய்திருக்கிறார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் பல இடங்களில் சோதிக்கவும் சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கின்றனர். இவர்கள் வரும் காட்சி படத்தில் பெரிதாக இம்பாக்ட் கிரியேட் செய்யவில்லை. ஆதியின் நண்பனாக வரும் சசி கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்து கவனம் பெற்றுள்ளது. இவரின் நடிப்பு படத்தை பல இடங்களில் வேகமாக கடத்திச் செல்ல உதவி செய்துள்ளது. கார்ப்பரேட் வில்லனாக வரும் வினை, வழக்கம் போல் என்ன செய்வாரோ அதையே இப்படத்திலும் செய்து விட்டு சென்று இருக்கிறார். அவருக்கும் படத்தில் பெரிதாக வேலை இல்லை. நாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக நடித்திருக்கும் முருகானந்தம் சிறப்பாக நடித்து பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஊர் பெரியவராக தாத்தா கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் தனக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது. தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், மின்னல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படத்தில் வரும் கதையும் கதாபாத்திரங்களும் ஒரு தெளிவில்லாமல் இருப்பதும், பல இடங்களில் வரும் லாஜிக் மீறல்களும், குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நடக்கும் கதையாக இதை சித்தரித்துவிட்டு படத்தில் வரும் பெரும்பாலானோர் அந்த ஊர்களின் வட்டார வழக்கை பேசத் தவறி இருக்கின்றனர். அதுவே இப்படத்தில் இருந்து நம்மை சற்றே விலக்கி வைத்திருக்கிறது. இந்த மாதிரியான பாதகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி என்ற ஒற்றை மனிதனை மட்டுமே நான் ரசிப்பேன் என்று சொல்பவர்களுக்கு இந்த படம் சற்று ஆறுதலாக இருக்கும்.
வீரன் - வீரியம் குறைவு!