'ரசிகனை ரசிக்கும் தலைவன்... மக்கள் செல்வன்' என்ற மாஸ் வரிகளோடும், இதுவரை வந்த விஜய் சேதுபதி படங்களை விட பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் 'ஜுங்கா' எதிர்பார்த்த மாஸ் உணர்வை நமக்கு அளித்ததா?
![vijay sethupathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/DSqKOxSe5IXMm4fKQVozX7rokf13EPonj0l5oXPnKgM/1533347654/sites/default/files/inline-images/junga%202%20-%20Copy%20%282%29.jpg)
விஜய் சேதுபதியின் தாத்தா லிங்காவும், அப்பா ரங்காவும் சென்னையில் பெரிய டான் என்பதோடு, அவர்களுக்கு நிறைய சொத்துக்கள் இருந்ததையும், அதை ஊதாரித்தனமாக செலவு செய்து அழித்ததையும் தனது அம்மா மூலம் தெரிந்துகொள்ளும் விஜய் சேதுபதி, தனது அப்பாவின் சொத்துக்களில் ஒன்றான சினிமா தியேட்டரை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக இவரும் சென்னையில் பெரிய டானாக மாறுகிறார். ஆனால், ஊதாரித்தனம் செய்யாமல், கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து தியேட்டரை மீட்டே தீருவேன் என்று சபதம் எடுக்கிறார். அந்த சபதத்தில் விஜய் சேதுபதி வெற்றிபெற்றாரா இல்லையா என்பதே... இல்லையில்லை வெற்றி பெற்றுவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும், எப்படி வெற்றி பெற்றார் என்பதே ஜுங்கா.
![saranya and paati](http://image.nakkheeran.in/cdn/farfuture/wzaxAxFAliNNfuMGVm8FKPN5Hw24k9_FAUkMJKUNuQ4/1533347654/sites/default/files/inline-images/junga%204.jpg)
வழக்கம்போல் தனது சற்றே மிகைப்படுத்திய நடிப்பால், வசனம் பேசும் ஸ்டைலால் விஜய் சேதுபதி படத்தை தனது தோள் மீது தூக்கி சுமந்துள்ளார். படத்தில் பேசும் பன்ச் வசனங்களிலும் சரி, கஞ்சத்தனம் காட்டும் இடங்களிலும் சரி அலப்பறை செய்து தியேட்டரை அதிர வைத்துள்ளார். படத்தைத் தூக்கி சுமக்கும் விஜய் சேதுபதிக்கு அவ்வப்போது மட்டுமே தோள் கொடுத்து உதவி செய்துள்ளார் யோகி பாபு. அவரிடம் அதிகமாக எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. மெழுகு சிலை போல் இருக்கும் சாயீஷா நடனத்தில் அசத்தி, நடிப்பிலும் ஸ்கோர் பண்ண முயற்சிக்கிறார். மடோனா செபாஸ்டியனும் படத்தில் இருக்கிறார், ஆனால் அவர் இருப்பதற்கான காரணம் பலமாக இல்லை.
விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வன்னன் முதல் முறையாக சென்னை மொழி பேசி நடித்திருப்பது சர்ப்ரைஸ். எப்போதும் போல் தன் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அசத்தியுள்ளார். அவருடன் விஜய் சேதுபதியின் பாட்டியாக நடித்திருக்கும் விஜயா பாட்டி பல இடங்களில் ROFL கொடுத்து ROCK செய்கிறார். அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியில் தியேட்டர் கலகலக்கிறது. மற்றபடி சுரேஷ் மேனன், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
![sayeesha](http://image.nakkheeran.in/cdn/farfuture/7mPkXk6uKRRew2Izhj67apjVRo0hDE2heS49Wr0qb3U/1533347654/sites/default/files/inline-images/junga%205.jpg)
விஜய் சேதுபதிக்கென உருவாகியிருக்கும் ரசிகர்களை முழுக்க முழுக்க நம்பி படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கோகுல். அவரது ஸ்டைல் காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், படம் சீரியஸா இல்லை காமெடியா என்கிற குழப்பம் பல இடங்களில் தெரிகிறது. சில இடங்களில் ரஜினி படங்களின் சாயலை உணர முடிகிறது. விஜய் சேதுபதியை அதிகமாக பேச வைத்திருப்பது சில இடங்களில் சலிப்படையச் செய்கிறது. பாரிஸ் நகரம் படத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமே பயன்பட்டுள்ளதே தவிர அது எந்த விதத்திலும் கதையோட்டத்திற்கு உதவிகரமாக இல்லை.
தனுஷ் மீது இயக்குனருக்கு கோபமா அல்லது விஜய் சேதுபதிக்குக் கோபமா? ஒரு இடத்தில், ஒல்லியாக இருக்கும் ஒருவரை, 'என்ன வேணும்னாலும் எழுதிட்டு பொயட்ட்டுன்னு சொல்லிக்கிவியா?' என்று கேட்கிறார்கள். தாத்தா ரங்கா, அப்பா லிங்கா என்பதால் ரைமிங்க்காக பேரன் ஜுங்கா என காரணம் சொல்வது நல்ல காமெடி. ஒளிப்பதிவாளர் டட்லி பாரிஸ் நகர் அழகை நேர்த்தியுடன் காட்சிப்படுத்த முயன்றுள்ளார். சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சுமார்தான். பின்னணி இசை நன்று.
ஜுங்கா... காமெடி டான்... காமெடியும் முழுதாக இல்லை, டானும் முழுதாக இல்லை.