
பேன் இந்தியா படமான கேஜிஎப் படங்களின் வெற்றிக்குப் பிறகு உண்மையான கேஜிஎப் கதையைத் தான் உருவாக்க உள்ளதாக பா ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி அவரும் விக்ரமும் இணைந்து தங்கலான் என்ற படத்தை கே.ஜி.எஃப்.-ஐ மையமாக வைத்து உருவாக்கினர். இந்தக் கூட்டணி உறுதியானதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகி ரிலீசாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா?.
17 ஆம் நூற்றாண்டில் வட ஆற்காட்டைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பூர்வ குடி இனத்தில் விக்ரம், பார்வதி ஆகியோர் குழந்தைகளுடன் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். அந்தப் பகுதியின் ஜமீன்தாரால் இவர்கள் நிலம் பிடுங்கப்பட்டு விக்ரம் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த ஜமீன்தாரிடம் இருந்து தங்கள் நிலத்தை மீட்க வெள்ளைக்காரத்துரை டேனியுடன் சேர்ந்து கோலாரில் இருக்கும் தங்கத்தை எடுக்க விக்ரம் மற்றும் குழுவினர் அங்கு செல்கின்றனர். போன இடத்தில் பல ஆண்டு காலங்களாக அங்கு காவல் தெய்வமாக இருக்கும் மாளவிகா மோகனின் இனக்குழுவினர் தங்கம் எடுக்க வருபவர்களை எடுக்க விடாமல் பல்வேறு இடையூறுகளைக் கொடுத்து அடித்துத் துரத்தி விடுகின்றனர். இதைத்தொடர்ந்து மாளவிகா மோகனை மீறி பூர்வகுடி மக்களுடன் விக்ரம் மற்றும் வெள்ளைக்காரத்துரை குழுவினர் தங்கத்தைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா? அந்தத் தங்கம் விக்ரம் குழுவினர் கையில் கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
கோலார் தங்கவயல் எப்படி உருவானது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். அந்த தங்க வயலை கண்டுபிடிக்கத் தலித் பூர்வ குடிமக்கள் எந்த அளவு தங்கள் ரத்தத்தையும், வேர்வையும் சிந்தி உழைப்பைக் கொட்டி உள்ளனர் என்பதை மிக விரிவாகவும் அதே சமயம் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாகவும் உணர்வுப்பூர்வமாகக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். இந்தப் படத்தில் தன்னுடைய வழக்கமான டெம்ப்ளேட்டான சாதிய அரசியல், நில அரசியல் எனத் தனது பிரம்மாஸ்திரங்களைக் கையில் எடுத்த பா. ரஞ்சித் அதை நேர்த்தியாகப் படம் பிடித்து மீண்டும் பலரின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி பூர்வக்குடி மக்களின் வலியையும், வேதனையையும் கலந்த வாழ்க்கை முறையை மிக ஜனரஞ்சகமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்து ரசிக்க வைத்த இயக்குநர் இரண்டாம் பாதியில் தங்க வேட்டையை முழுமையாகக் காண்பித்து இருக்கிறார். முதல் பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து இரண்டாம் பாதியில் தங்க வேட்டைக்கு நடுவே வரும் புனைவு கதைகள், இல்யூஷன் கலந்த மாய மந்திர விஷயங்கள் ஆகியவை படத்தை ஒரே இடத்தில் திரும்பத் திரும்பச் சுழற்றி பார்ப்பவர்களுக்குக் குழப்பத்தையும், அயற்சியையும் கொடுத்துப் பிடிப்பில்லாமல் முடிகிறது.
குறிப்பாகத் தங்க வேட்டைக்குக் கிளம்பும் முன்பு வரை திரைக்கதையில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் தங்க வேட்டைக்கு கிளம்பிய பிறகு பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்து இருக்கிறது. அதேபோல் வசன உச்சரிப்புகளும் ஆங்காங்கே பல இடங்களில் கைத்தட்டல்களைப் பெற்றுக் கொடுத்தாலும் சில இடங்களில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாமல் இருப்பதும் சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தின் மேக்கிங் இவை அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து படத்திற்கு சல்யூட் போட வைத்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலித்து அந்த இடத்திற்கே நம்மைக் கொண்டு சென்று விட்டது போல் போன்ற உணர்வை இப்படம் மூலம் கடத்தி இருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.
படத்தின் நாயகன் விக்ரம் நடிப்பில் ஆஸ்கார் வாங்கிய நடிகர்களை எல்லாம் மிஞ்சும் படியான ஒரு நடிப்பைக் கொடுத்து மிரட்டி இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பு அசாத்தியமான ஒரு உழைப்பு. வழக்கமாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் அர்ப்பணிப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு உழைப்பு தேவையோ அந்த அளவு உழைப்பைப் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்து யாரும் செய்யாத விஷயங்களைக் கூட தைரியமாகச் செய்து கதாபாத்திரத்திற்கான உயிரைக் கொடுத்துக் கைதட்டல் பெறுவதில் விக்ரம் வல்லவர். ஆனால் இந்தப் படத்திலோ அதை எல்லாம் தாண்டி பல படிகள் மேலே போய் இவர் செய்த விஷயம் சொல்லில் அடங்காதவை. அந்த அளவு தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இந்த கேரக்டருக்காக கொடுத்துப் படத்தை தன் ஒற்றைக் கையால் தாங்கிப் பிடித்து உலக நடிகர்களுக்குச் சவால் விடும் படியான நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி கைத்தட்டல்களால் தியேட்டரை அதிரச் செய்திருக்கிறார். விக்ரமுக்கு மீண்டும் ஒருமுறை விருதுகள் நிச்சயம்.
விக்ரத்துக்குச் சரிசமப் போட்டியாளராக நடிப்பில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பார்வதி. எந்த ஒரு இடத்திலும் குறைச்சல் இல்லாமல் தன் உடல் பொருள் ஆவியான அனைத்தையும் கொடுத்து விக்ரமுக்கு ஈக்குவலான நடிப்பைப் பல இடங்களில் கொடுத்து அதேபோல் சில இடங்களில் அவரையும் தாண்டிய ஒரு நடிப்பையும் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியும் படம் நெடுக தனது கதாபாத்திரத்தின் மூலம் சிரிக்கவும், கலங்கவும் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இவர் படபடவென்று பேசும் வசன உச்சரிப்பு பல இடங்களில் நம்மைக் கலகலப்பாக்கி விடுகின்றது. அதேபோல் கலங்கடிக்கும்படியான நேரத்தில் தனது நடிப்பின் மூலம் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறார்.
விக்ரமுடன் சேர்ந்து பார்வதி மற்றும் பசுபதிக்கும் விருதுகள் நிச்சயம். காவல் தெய்வமாக நடித்திருக்கும் மாளவிகா மோகனின் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார். மாய மந்திர விஷயங்களுடன் சேர்ந்து வரும் இவரின் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். இப்படத்திற்காக பல்வேறு ஸ்டண்ட்களை கற்றுக்கொண்டு அதைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி வெள்ளைக்கார துரையாக நடித்திருக்கும் நடிகர் டேனி, மற்றும் மிராசுதார், உடன் நடித்த மற்ற அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை மிக மிகச் சிறப்பாகச் செய்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் இசை பிரம்மாண்டம். தனது இசை மூலம் இப்படத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்று ஹாலிவுட் தரத்தில் கொடுத்திருக்கிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் தங்க வயல் சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்துமே மிக மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது ஒளிப்பதிவில் படம் மிகவும் தரமாக அமைந்து ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. மூர்த்தியின் கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார். படத்தின் டெக்னீசியன்கள் அனைவருமே தனது அர்ப்பணிப்பான உழைப்பைக் கொடுத்திருப்பதால் இந்த படம் மிக மிக ஹாலிவுட் தரத்தில் மேக்கிங்கில் தரமாக இருக்கின்றது.
தனது ட்ரேட் மார்க் திரைக்கதை மூலம் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் பா. ரஞ்சித் முதல் பாதியில் கொடுத்த வேகத்தையும், விறுவிறுப்பையும் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருக்கலாம். அதேபோல் படத்தில் வரும் அமானுஷ்ய பிக்சன் கதையைத் தவிர்த்துவிட்டு இன்னமும் உண்மைக்கு நெருக்கமான விஷயங்களைத் திரைக்கதையோடு பின்னிப் பார்ப்பவர்களுக்கு வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு படமாக இப்படத்தைக் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் நன்றாகப் பேசப்பட்டு இருக்கும். தங்க வேட்டைக்கு முன் இருந்த சுவாரசியம் தங்க வேட்டைக்குப் பின் குறைவாக இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக இருந்தாலும் இறுதிக் கட்ட காட்சிகளில் மீண்டும் விறுவிறுப்பைக் கூட்டிப் பார்ப்பவர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வைக் கொடுத்திருக்கிறது.
தங்கலான் - தங்க மகன்!.