Skip to main content

இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி! தடம் - விமர்சனம்

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

‘தடையறத் தாக்க’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும் நடிகர் அருண் விஜயும் இணைந்திருக்கும் படம் ‘தடம்’. முழு ஆக்சன் ஹீரோவாக அருண் விஜயின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தடையற தாக்க. அந்த மேஜிக் இந்த படத்திலும் நிகழ்ந்திருக்கிறதா?

 

thadam arun vijay



எழில், கவின் என முதன்முறையாக இரட்டை வேடத்தில் அருண் விஜய். எழில் ஒரு கட்டுமான பொறியாளர். நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகான காதல் என எல்லோரும் விரும்பும் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். கவின் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்துபவர். ஆனால் லாயருக்கே தெரியாத சட்ட ஓட்டைகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு அதிபுத்திசாலி. வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இருவரது பயணமும் ஒரு திருப்பத்தில் இணைகிறது. அது ஏற்படுத்தும் குழப்பங்கள், போடும் முடிச்சுகள், அவை அவிழும் விதங்களை விறுவிறு திரைக்கதையில் சொல்கிறது தடம்.


இரண்டு கதாப்பாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் வாழ்க்கை, காதல் என மெதுவாகவே துவங்குகிறது படம். ஆனால் படத்தின் முக்கிய திருப்பமான அந்த கொலை நடந்தவுடன் தடமெடுக்கும் திரைக்கதையின் வேகம் இறுதிவரை நம்மையும் தொற்றிக்கொண்டு பறக்கிறது. ஒரே மாதிரியான இரட்டையர்கள். இதில் கொலை செய்தது யார் என்கிற முடிச்சை சுற்றி நிகழும் கதை பல திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான். ஆனால் இந்தப் படத்தில் அது பயன்படுத்தப்பட்ட விதமும் களமும் கூடுதல் சுவாரசியத்தை தருகிறது. படத்தின் கதாப்பாத்திரங்கள் குழம்புவது போலவே பார்வையாளர்களும் அந்த குறிப்பிட்ட காட்சியில் குழம்புகின்றனர். அந்தக் குழப்பம் அடுத்தடுத்த காட்சிகளில் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில், கதாப்பாத்திரங்கள் திரையில் பேசிக்கொள்வது போலவே, பார்வையாளர்களும் ‘இவனாதான் இருக்கும்.. அந்த சீன்ல இப்படி நடந்துச்சுல.. அவனாதான் இருக்கும்’ என பேசிக்கொள்வது அடர்த்தியான திரைக்கதையின் வெற்றி. அந்த அளவிற்கு படத்தின் கேள்விகளோடும் முடிச்சுகளோடும் பார்வையாளரை ஒன்றவைத்திருக்கிறார் எழுத்தாளர் மகிழ் திருமேனி.

  thadam heroine



ஸ்னீக் பீக்கில் கொஞ்சம் எட்டிப் பார்த்த எழிலின் அழகான காதல், கவினின் காதலில் வரும் நெகிழ்ச்சியான சில தருணங்கள் என ஆங்காங்கே வசீகரித்தாலும், தேவையில்லாத பாடல், சில காமெடிகள் என முதல் பாதியில் அந்த கொலைக்கு முன்னதான காட்சிகளில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. ஆனால் அதற்கு பின்னான காட்சிகளில் வரும் சின்ன சின்ன திருப்பங்களும் முடிச்சுக்களும்  அதை போக்கடிக்கின்றன. அதுவும் கொலையாளி யார் யார் என்ற கேள்வியை கடைசி காட்சி வரை இழுத்துச்சென்று, அதற்கான விடை கிடைக்கும் விதமும் காரணமும் தியேட்டரில் விசில்களை அள்ளுகின்றன.

அருண் விஜய்யின் பயணத்தில் நிச்சயம் இது மிகமுக்கியமான திரைப்படம். முதன்முறையாக இரட்டை வேடம். ஆனால் பெரிதாக வித்தியாசம் காட்ட தேவையில்லாத பாத்திரப் படைப்பு. அதை நிறைவாகவே செய்திருக்கிறார். அருண் விஜய்யின் திறமைக்கும் உழைப்பிற்கும் எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் தடம் படத்திற்கு பின்பாவது கிடைக்கட்டும். நாயகிகளுக்கு குறைவான நேரமென்றாலும் நிறைவான சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. பெஃப்சி விஜயன், வித்யா ப்ரதீப், யோகி பாபு, போலீசாக வருபவர்கள் என நடிகர்களின் பங்களிப்பில் எந்த குறையும் இல்லை. போலீஸ் ஏட்டாக வருபவரின் நடிப்பு அத்தனை இயல்பு.

 

thadam heroine 2



படத்தின் பதட்டத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு கோபிநாத்தின் ஒளிப்பதிவிற்கும் அருண் ராஜின் இசைக்கும் ஸ்ரீகாந்த்தின்  படத்தொகுப்பிற்கும் உண்டு. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் வரும் நகைச்சுவை படத்தின் இறுக்கத்தை குறைக்கின்றன. ஆனால் வழக்கின் மிகமுக்கியமான தடயம் மறைந்துபோவதையும் காமடியாகவே வைத்திருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. அதேபோல் கவின், எழில் பற்றி அவ்வளவு விசாரிக்கும் காவல்துறைக்கு, இருவரும் யார் என்பது அவர்களே சொல்லும்வரை தெரியாமல் இருப்பதும்  ஆச்சர்யம்.

தடையறத் தாக்க, மீகாமன் திரைப்படங்களில் பார்த்து ரசித்த மகிழ் திருமேனியின் தடம், 'தடம்' முழுவதும் பரவி கிடக்கிறது. எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மீண்டுமொருமுறை முத்திரை பதித்திருக்கிறார் மகிழ் திருமேனி. இது நிஜத்தில் நடந்த கதைகளை  அடிப்படையாகக் கொண்ட படம் என்பது கூடுதல் சுவாரசியம். அந்த நிஜ சம்பவங்கள் அனைத்தும் படத்திலேயே சொல்லப்பட்டும் இருக்கின்றன. ‘சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளே’ என்று படத்தின் ஆரம்பத்திலேயே கார்டு போடுகிறார்கள். ஒரு விசேஷ குணத்தை வைத்து இந்த ஓட்டையை பயன்படுத்தும் நிஜ குற்றப்பிண்ணனியை களமாக எடுத்ததிலும், அதைச் சுற்றி பார்வையாளர்களை கடைசிவரை ஒன்றவைக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்ததிலும் அழுத்தமான தடம் பதித்திருக்கிறது தடம்.

 

 

 

சார்ந்த செய்திகள்