Skip to main content

பார்த்திபனின் புதிய முயற்சி கை கொடுத்ததா? இல்லையா? - டீன்ஸ் விமர்சனம்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Teenz movie Review

வழக்கமாக எப்பொழுதும் வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இந்த முறையும் அதேபோல் ஒரு புதிய முயற்சியை டீன்ஸ் படம் மூலம் கொடுத்து இருக்கிறார். 13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அப்படி என்ன புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் பார்த்திபன் என்பதை பார்ப்போம்.

பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், வெளிநாடுகளைப் போல் நம் நாட்டிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை நாமே கையில் எடுக்க வேண்டும் என எண்ணும் அந்தச் சிறுவர்கள் அவர்களுக்குள் உள்ள ஒரு பெண்ணின் சொந்த கிராமத்திற்கு ஸ்கூலை கட் அடித்து விட்டு செல்கின்றனர். அந்த ஊரில் ஒரு பேய் இருப்பதாக அந்தப் பெண் சொல்ல அந்தப் பேயை பார்த்து விட வேண்டும் என முடிவெடுத்த 13 சிறுவர்கள் பாதை மாறி ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். போன இடத்தில் ஒவ்வொரு சிறுவர்களாக தானாகவே அமானுஷ்யமாக காணாமல் போகின்றனர். இதனால் மற்ற சிறுவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியும், பதற்றமும் ஆகி அலறுகின்றனர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் தப்பி ஓடுகின்றனர். வழியில் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக அமானுஷ்ய முறையில் காணாமல் செல்ல இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். இதையடுத்து அமானுஷ்யமாக காணாமல் போன சிறுவர்கள் எப்படி மாயமானார்கள்? அவர்கள் கிடைத்தார்களா, இல்லையா? இவர்களை பார்த்திபன் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

எப்பொழுதும் புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தையும் ஒரு புதுவித கதை கருவை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு புதுவிதமான திரைக்கதை அமைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இந்தக் கால ஜென் ஆல்ஃபாவான 13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் ஹைடெக்காண பேச்சுகளும், அதற்கேற்ற அவர்களின் உடல் மொழிகளையும் வைத்துக்கொண்டு அதன் மூலம் தன் திரைக்கதையையும் வித்தியாசமாக அமைத்து அதன் மூலம் புதுவித அனுபவத்தை இந்த டீன்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே நேர்கோட்டில் படம் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் அமானுஷ்யம் கலந்த திகிலான காட்சிகளாக படம் நகர்ந்து போக போக இரண்டாம் பாதியில் படம் வேறு ஒரு பாதையில் பயணித்து முடிவில் விஞ்ஞான ரீதியாக இதற்கு தீர்வு காண்பித்து படம் முடிந்திருக்கிறது. முதல் பாதியில் படம் ஆரம்பிக்கும் பொழுது ஏதோ ஒரு புதுமையான விஷயத்தை இப்படம் கொடுக்கப் போகிறது என்ற உணர்வு பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது. அது போக போக அயற்சியை கொடுத்து காட்சிகளில் பெரிதாக எங்கும் திருப்பங்கள் இல்லாமல் ஒரே பிளாட்டாக நகர்ந்து அதே சமயம் கதையிலும் தெளிவில்லாமல் குழப்பமாக நகர்ந்து பார்ப்பவர்களை சற்றே சோதிக்கவும் வைத்திருக்கிறது. பார்த்திபனின் இந்தப் புதிய முயற்சியையும் கண்டிப்பாக பாராட்டலாம் ஆனால், இந்தப் புதிய முயற்சிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை சற்றே திரைக்கதையிலும் கொடுத்திருந்தால் இந்தப் படமும் அவரது பட வரிசையில் இன்னொரு மைல் கல்லாக அமைந்திருக்கும். 

Teenz movie Review

படத்தை தயாரித்து இயக்கியது மட்டுமல்லாமல் வழக்கம்போல் படத்திலும் நடித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இந்தப் படத்தில் ஆபத் பாண்தவனாக வரும் அவர், படத்தில் இருக்கும் ஃப்லாசை ஒரு வழியாக போக்கி இறுதிக்கட்டத்தில் காண்ஃபிலிட்டுக்கான சொல்யூஷனையும் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார். இவருடன் நடித்த 13 சிறுவர் சிறுமிகளும் மிக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேர்ந்த நடிகர்கள் போல் நடித்து கைதட்டல் பெற்று இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவருக்கு கொடுத்த கதை பாத்திரத்தை மிக சிறப்பாக செய்து தாங்கள் ஒரு தேர்ந்த நடிகர்கள் என்பது போல் நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். பல்வேறு காட்சிகளில் மிக மிக சிறப்பாக எதார்த்தமான வசன உச்சரிப்புகளை சிறப்பாக கையாண்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். கடமைக்கு சில காட்சிகளில் வந்து செல்கின்றார் யோகி பாபு. ஏதோ போற போக்கில் வரும் யோகி பாபு, லேசாக கிச்சு கிச்சு மூட்ட முயற்சி செய்திருக்கிறார். வழக்கமான போலீஸ் அதிகாரியாக வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் நடிகை சுபிக்ஷா. மற்றபடி உடனடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

கௌமிக் ஆரி ஒளிப்பதிவில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி இமான் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே. பொதுவாக டி.இமானின் இசை என்றாலே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இமான் இந்தப் படத்தில் பூர்த்தி செய்ய சற்று தவறி இருக்கிறார். 

புதிய முயற்சியாக இப்படத்தை கொடுத்து இருக்கும் பார்த்திபன், இப்படிப்பட்ட கதைக்கு இந்த மாதிரியும் ஒரு ஆங்கில் இருக்கின்றது என்ற புதிய கோணத்தில் கதையைக் காட்டிய விதத்தை நாம் பாராட்டினாலும் அதற்கான திரைக்கதையில் ஏனோ அவர் சற்று தடுமாறி இருப்பதை மட்டும் ரீ கன்சிடர் செய்திருக்கலாம்.

 

டீன்ஸ் - முயற்சி ஓகே! எழுச்சி குறைவு!!

சார்ந்த செய்திகள்