டாடா வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்ததாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் ஸ்டார். தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி சில படங்கள் வெற்றியும் பல படங்கள் தோல்வியும் பெற்றுள்ள இந்தச் சூழலில் இதே கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஸ்டார் திரைப்படம் இதில் எந்த பட்டியலில் இணைந்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.
போட்டோகிராபராக இருக்கும் லால், சினிமா மீது இருக்கும் அதீத காதலால் தனது மகன் கவினை சினிமாவில் மிகப் பெரிய ஸ்டார் ஆக மாற்ற சிறுவயதில் இருந்து அவருக்கு சினிமா ஆர்வத்தை ஊட்டி வளர்க்கிறார். கவினும் சிறு வயது முதலே சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்கிறார். மிகப்பெரிய கனவுகளோடு தன் வாழ்க்கையை பள்ளிக்காலம் முதல் காலேஜ் காலம் வரை ஜாலியாக கடத்தும் கவின் அதன் பிறகு சினிமாவின் உண்மையான கோர முகத்தை காண்கிறார். நிஜ வாழ்க்கைக்கும் நினைத்த வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணரும் தருணம் வரும் வேளையில் வாழ்க்கையில் பல அடிகளை வாங்குகிறார். இதன்பின் அவருடைய காதலி அவரை விட்டு செல்கிறார், அவருக்கு விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் ஏற்படுகிறது, பிறகு அவருக்கு வேறு நாயகியுடன் திருமணம் ஆகிறது, இதற்கிடையே சினிமாவில் நடிகராக பல்வேறு போராட்டம் என நகரும் படம் போகப் போக உணர்ச்சிபூர்வமான காட்சிகளால் நிரம்பி சில இடங்களில் கண்கலங்க வைக்கும். பல இடங்களில் இழுவையாக தொடர்ந்து செல்லும் திரைப்படத்தில் கடைசியில் தான் கண்ட கனவில் கவின் ஜெயித்து ஸ்டார் ஆக மாறினாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஒரு நடுத்தர வயது இளைஞன் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக மாற எந்த அளவு போராட வேண்டி இருக்கும் என்பதை மிக மிக எதார்த்தமாகவும், உயிர்ப்புடன் இருக்கும் காட்சி அமைப்புகளாக கொடுத்து இன்ஸ்பைரிங் பீல் குட் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் பியார் பிரேமா காதல் புகழ் இயக்குநர் இளன். முதல் பாதி பள்ளிப் பருவம், காலேஜ் பருவம் முதல் காதல் துள்ளலான பாடல்கள் என மிகவும் பாசிட்டிவ் வைப்பில் ஜெனரஞ்சகமாக நகரும் திரைப்படம், ஒரு மிகப்பெரிய விபத்திற்கு பிறகு இரண்டாம் பாதியில் வாழ்க்கையின் நிதர்சன முகம், திருமண வாழ்க்கை அதனுடன் நடக்கும் பேஷனுக்கான போராட்டம் என நெகிழ்ச்சியான திரைப்படமாக நகர்ந்து முடிவில் சிறப்பான காட்சி அமைப்போடு படம் நிறைவடைகிறது. முதல் பாதி கொடுத்த கூஸ்பம்ப் மோமன்ட்ஸ்கள் இரண்டாம் பாதியில் இல்லாதது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் கதை ஒரு நேர்கோட்டை விட்டு வேறு வேறு நேர்கோட்டில் பயணித்து குழப்பமாக சுற்றி சுற்றி வேறு வேறு கதைகளில் பயணம் செய்து முடிவில் வந்த இடத்திற்கே வந்து முடிவது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. இருந்தும் நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய ஒரு கதையாக இருந்தாலும் மிகவும் பிரஷ்ஷான காட்சிகள், ஜனரஞ்சகமான குடும்ப காட்சிகள், இன்ஸ்பயரிங்கான காட்சிகள், அதற்கு ஏற்ற சிறந்த நடிப்பு எனப் படம் இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் யுவனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் பழைய பாடல் ஒன்று படத்தை வேறு ஒரு லெவலில் பூஸ்ட் செய்து படத்தை கரை சேர்த்திருக்கிறது.
நடிகர் கவின் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்து தன்னுடைய கெரியரில் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறார். நடிப்பில் பல இடங்களில் நன்றாக மெனக்கிட்டு நடித்து எந்தெந்த காட்சிகளை என்ஹான்ஸ் செய்து காட்ட வேண்டுமோ அந்தந்த காட்சிகளை தன் நடிப்பின் மூலம் சிறப்பாக காட்டி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறார். இருந்தும் சற்றே அடக்கி வாசிக்கும்படியான காட்சிகளில் தன் வழக்கமான நடிப்பை கொடுத்த கவின் இன்னும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கலாம்
கவினின் காதலியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் சில இடங்களில் கவினையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் சிறப்பாக நடித்திருக்கும் இவர் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்திருக்கிறார். எந்தெந்த இடங்களில் எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். கவினின் தாயாக வரும் கீதா கைலாசம் சிறப்பான கதாபாத்திரத்தேர்வு. இவரின் இயல்பான நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படத்தின் இரண்டாவது நாயகியாக வரும் அதித்தி வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். வழக்கமாக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் லொள்ளு சபா மாறன் இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து மிளிர்கிறார். சில காட்சிகளே வந்தாலும் காதல் சுகுமார் உட்பட பலர் அவரவர் வேலையைச் சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
இந்த ஸ்டார் படத்தின் ஆக்சுவல் நாயகன் யார் என்றால் அது யுவன் தான். இளம் கூட்டணி என்றாலே குஷி ஆகிவிடுவார் என்பது போல் பாடல்களிலும், பின்னணி இசையிலும் வாசித்து தள்ளி மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மீண்டும். முதல் பாதியில் வரும் காலேஜ் பாடலும், காதல் பாடலும் வேற லெவல் ஹிட். அதேபோல் பின்னணிசையிலும் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக படத்தில் சர்ப்ரைஸாக வரும் இவரின் பழைய பிளாக்பஸ்டர் பாடல் ஒன்று படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று ஹிட்டடிக்க உதவி இருக்கிறது. எழில் அரசுவின் ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகளும் சமகால காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
முதல் பாதி கொடுத்த பூரிப்பை இரண்டாம் பாதியிலும் சற்று சிறப்பாக கொடுத்திருந்தால் இந்தப் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். அதேபோல் படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம். இருந்தும் கவினின் இளமையான நடிப்பும், யுவனின் துள்ளலான இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்து இப்படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
ஸ்டார் - இன்ஸ்பிரேஷன்!