நல்ல காமெடி படங்களுக்கு லாஜிக் மீறல்கள் பெரும் இடையூறுகளாக இருந்ததில்லை. அப்படி வெற்றிபெற்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் காமெடி படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற முயற்சிசெய்து வருகின்றன. அதில் சில முயற்சிகள் வணீக ரீதியாக வெற்றிபெற்றாலும் 'ஆல் டைம் ஃபேவரிட்' கேட்டகிரியை எட்டுவது என்பது தற்கால காமெடி படங்களுக்கு குதிரைக் கொம்பாகவே உள்ளது. 'சிக்ஸர்', முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படம். அது 'ஆல் டைம் ஃபேவரிட்டா' அல்லது கமர்சியல் ஹிட்டா அல்லது நமக்கு ரிவிட்டா? பார்ப்போம்.
'சிக்ஸர்', நீண்ட நாட்களுக்குப் பிறகு மாலைக்கண் நோயை மையமாக வைத்து உருவாகியுள்ள படம். ’சின்ன தம்பி’ படத்தில் மாலைக் கண் என்ற ஒரு குறைபாட்டால் படும் அவதிகளை காலம் தாண்டியும் மறக்க முடியாத காமெடியாக நடித்திருப்பார் கவுண்டமணி. அதே போல இங்கு ஹீரோ வைபவ்விற்கு மாலைக்கண் நோய். மாலை 5.30 மணிக்கெல்லாம் எங்கிருந்தாலும் அடித்துப்பிடித்துக்கொண்டு அரக்கப்பரக்க போய் வீட்டில் தஞ்சம் அடையும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் இளவரசு மற்றும் ஸ்ரீரஞ்சனி முயற்சி செய்கின்றனர். இதற்கிடையே வைபவ், நாயகி பாலக் லால்வானி மேல் காதல் கொள்கிறார். பிறகு தனக்கு இருக்கும் மாலைக்கண் நோயை மறைத்து தகிடுதத்தம் செய்து தன் காதலில் வெற்றிபெறுகிறார். இருவரும் முழுக்க முழுக்க பகலிலேயே காதல் வளர்க்கின்றனர். அப்போது பார்த்து நாயகியின் அப்பா ராதாரவிக்கு வைபவ்வின் மாலைக்கண் நோய் பற்றிய உண்மை தெரியவர, அவரை ஹீரோ வைபவ் எப்படி ஏமாற்றி காதலியின் கரம்பிடித்தார் என்பதே 'சிக்ஸர்' படத்தின் மீதிக்கதை.
ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை எகிரச்செய்து பிறகு மேலோட்டமான காமெடிகள் மூலம் ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளது 'சிக்ஸர்'. நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய 'குறைபாட்டுடன் ஒரு ஹீரோ, அதை மறைத்து காதலில் வெற்றி பெறுவது' என்ற வழக்கமான கதைக்களம், திரைக்கதை, கதாபத்திரங்கள் என பழைய விஷயங்களே அதிகம் தென்பட்டாலும் காமெடியில் சில புதுமைகளை புகுத்தி ஆங்காங்கே கிச்சிக்கிச்சி மூட்டியுள்ளது இந்த 'சிக்ஸர்' படம். ஆனால் முக்கிய கட்டங்களில் வரும் சீரியஸான காட்சிகளுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் அதிலும் காமெடிக்கே முன்னுரிமை அளித்துள்ளது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜெயித்த காமெடி படங்களில் கூட இம்மாதிரியான காட்சியமைப்புகள் இருந்தாலும் அவை நல்ல காமெடிகளால் மறக்கடிக்கப்பட்டதனால் வெற்றிபெற்றுள்ன. காமெடி காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த இயக்குனர் சாச்சி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் சேர்த்துக் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம்.
வைபவ் தனக்குக் கொடுத்த கதாபத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளார். ஆங்காங்கே 'மேயாத மான்' வைபவ்வை நியாபகப்படுத்தினாலும் அதையும் ரசிக்கும்படி செய்து கவனம் ஈர்த்துள்ளார். நாயகி பாலக் லால்வானி சம்பிரதாய கதாநாயகியாக வந்து செல்கிறார். அவருக்கு நடிப்பு வந்து செல்லக்கூட இல்லை. முக்கிய பாத்திரங்களில் வரும் ராதாரவி மற்றும் இளவரசு ஆகியோர் சிறப்பாக நடித்து சுமாரான காட்சிகளையும் ரசிக்கவைத்துள்ளனர். இவர்களைப்போல் விஜய் டிவி ராமர், டி.எஸ்.கே, சதிஷ் ஆகியோர் வரும் காட்சிகளும் கலகலப்பாக உள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். ஆரம்பத்தில் சொன்னதுபோல் காமெடி படங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவை ரசிக்கும்படி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு லாஜிக் மீறல்கள் நம்மை சற்றே சோதித்து விடுகின்றன. அவை படத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு முக்கியம்.
'சிக்ஸர்'கள் ஆக வேண்டியது சில சிங்கிள்களில் முடிகிறது.