Skip to main content

ஹாட்ரிக் வெற்றி கொடுத்தாரா சூரி? - ‘கொட்டுக்காளி’ விமர்சனம்!

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
sivakarthikeyan Kottukkaali review

கூழாங்கல் படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பி.எஸ். வினோத் ராஜ், அடுத்ததாக வெளியாகி இருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்திருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா, இல்லையா?

ஏழ்மையில் இருக்கும் அனா பெண்ணை பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடனேயே கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார் அவருடைய முறை மாமன் சூரி. கல்லூரிக்கு போன இடத்தில் ஒரு இளைஞருடன் காதல் வயப்படுகிறார் அனா பென். இது சூரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் வீட்டிலும் எப்படியாவது அனா பென் மனதை மாற்றி சூரிக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனா பென்னோ மிகவும் அடம்பிடிக்கிறார். இதனால் அவருக்கு பேய் பிடித்து விட்டது என எண்ணி சூரி குடும்பம் முழுவதும் அனா பென்னை ஒரு சாமியாரிடம் அழைத்து செல்கின்றனர். போன இடத்தில் அவருக்கு உண்மையிலேயே பேய் பிடித்திருக்கிறதா, அல்லது அவருக்கு வசிய மருந்து யாரேனும் கொடுத்திருக்கிறார்களா என கண்டுபிடிக்க முயல்கின்றனர். இதையடுத்து அவளுக்கு பேய் ஓட்டினார்களா, இல்லையா? உண்மையில் அவரின் நிலை என்ன? சூரி இறுதியில் என்ன செய்தார்? என்பதே கொட்டுக்காளி படத்தின் மீதி கதை.

sivakarthikeyan Kottukkaali review

கூழாங்கல் போலவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை குவிக்கும்படியான மற்றொரு படமாக கொட்டுக்காளியை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பி எஸ் வினோத். அதேபோல் முதல் படமான கூழாங்கல் படம் ஒரு நடை பயணம் படமாக கொடுத்த இயக்குநர் வினோத், இந்த படத்தை ஆட்டோ பயணமான படமாக கொடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க எந்த ஒரு மியூசிக்-கும் இல்லாமல் லைவ் சவுண்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன்மூலம் கதை மாந்தர்களின் உணர்ச்சிகளை வெகுவாக வெளிப்படுத்தி அதை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக உலக சினிமாக்கள் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குநர்,  கதை மாந்தர்கள் நடப்பதும், நிற்பதும், திரும்புவதும், பேசுவதும் போன்ற உணர்ச்சிகளை முழுவதுமாக காட்டி அதை வைத்தே ஒன்றரை மணி நேரம் படத்தை முடித்து இருக்கிறார். இந்த படம் பார்ப்பதற்கு பொறுமை மிக மிக அவசியம் இருந்தும் அதையும் தாண்டி ரசிக்கும்படியான நிறைய விஷயங்கள் படத்தில் இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் இன்றளவும் ஒரு பெண் காதலித்து விட்டாலோ, அல்லது தன்னிச்சையாக ஏதேனும் முடிவு எடுத்து விட்டாலோ அவளுக்கு பேய் பிடித்ததாக எண்ணி சாமியாரிடம் கொண்டு செல்வதும், அவளுக்கு யாரேனும் உணவில் மருந்து கலந்து கொடுத்து விட்டு, அதனால் தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள் என எண்ணி அதையும் போலீசாமியார்களிடம் கொண்டு சென்று எடுப்பது போன்ற விஷயங்கள் இன்றளவும் கிராமங்களில் நடப்பது வாடிக்கையாக இருக்கின்றது. அதை வெட்ட வெளிச்சம் போட்டு அப்படியே மிக எதார்த்தமாக காட்டி இருக்கும் இயக்குநர் அதை சிறப்பாகவும் காட்சிப்படுத்தி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார். உலக சினிமாக்கள் பிடித்தவர்களுக்கு கொட்டுக்காளி கண்டிப்பாக பிடிக்கும்.

sivakarthikeyan Kottukkaali review

நாயகன் சூரி எப்பொழுது நாயகனாக அவதாரம் எடுத்தாரோ அது முதல் இப்படம் வரை படத்துக்கு படம் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு நடித்திருக்கும் சூரி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார். தொண்டை கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் அதை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக வண்டியில் இருக்கும் நபர்களை பின்னி பெடல் எடுக்கும் காட்சியில் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். படம் முழுவதும் ஒரு வசனம் கூட இல்லாமல் கிளைமாக்ஸ் இல் மட்டும் ஒரே ஒரு வசனம் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனா பென் தனது கண் பார்வை, உடல் அசைவுகள் மூலமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை உண்மையில் பேய் அடித்த ஒரு நபர் எப்படி இருப்பாரோ அதேபோல் சிலை மாதிரியே இருந்து படம் முழுவதும் நடித்து கைதட்டல் பெறுகிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே ஊர்காரர்களாக இருப்பதால் அனைவருமே புது முகங்கள். அவர்கள் மிக சிறப்பாக நடித்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றனர்.

sivakarthikeyan Kottukkaali review

ஒளிப்பதிவாளர் சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாதமாக இருக்கிறது. படத்தில் இசை இல்லை ஆனால் படத்தின் சவுண்ட் டிசைனர் லைவான சவுண்டுகளை மிக சிறப்பாக காட்டி படத்திற்கு வேறு ஒரு பிளேவரை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட காட்சியில் வரும் சாமியாரின் லீலைகள் படத்தின் மொத்த கதை கருவையும் தாங்கி நிற்கிறது. அந்த ஒரு காட்சி மட்டுமே மொத்த படத்தின் அம்சங்களையும் வெளி கொண்டு வந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மெசேஜையும் கொடுத்து அதேசமயம் ரசிக்கவும் வைத்திருக்கிறது. அதற்காகவே இந்த கொட்டுக்காளியை ரசிக்கலாம்.

கொட்டுக்காளி - உலக சினிமா!

சார்ந்த செய்திகள்