ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் சித்தா. இந்த தடவை பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்த சினிமாவாக கொடுத்திருக்கிறார். அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ரசிக்க வைத்துள்ளது? என்பதை பார்க்கலாம்.
பழனியில் உள்ள கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் பிரிவில் ஆபீஸராக இருக்கும் சித்தார்த் தனது அண்ணி அஞ்சலி நாயர் மற்றும் மறைந்த அவர் அண்ணன் மகள் சிறுமி சஹஸ்ராஶ்ரீ உடன் வசித்து வருகிறார். அவரது அண்ணன் மகள் சித்தார்த் மீது மிகுந்த பாசமாக இருக்கிறது. இதனால் அவர் சித்தப்பா என்பதால் அவரை சித்தா என்று அழைக்கிறது. இருவரும் தந்தை மகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் போலீஸ் நண்பனின் அக்கா மகள் சிறுமி திடீரென காணாமல் போய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதற்கு முதலில் சித்தார்த் தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டு பின்னர் அதற்கு வேறு ஒருவர் தான் காரணம் என கண்டுபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சித்தார்த்தின் அண்ணன் மகளும் திடீரென மாயமாகிறார். அவளையும் பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒருவன் கடத்தி விடுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்த அந்த சிறுமியை காப்பாற்றினார்களா, இல்லையா? சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசாமி என்னவானார்? என்பதே சித்தா படத்தின் மீதி கதை.
கொஞ்சம் பிசகுனாலும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அரதப்பழசான ஒரு கமர்சியல் பாலியல் வன்கொடுமை கதையை பார்த்தது போல், உணரும் வகையில் அமைந்திருக்கும் இந்த படத்தை, எதார்த்தமான உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள் மூலம் கவனிக்கத்தக்க ஒரு படமாக கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார் சேதுபதி புகழ் எஸ் யு அருண்குமார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் சமரசம் செய்யாமல் எதார்த்த சினிமாவை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு அதன்படி திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிரூட்டி பார்ப்பவர்களுக்குள் அதை கடத்தும் படியான திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ் யு அருண்குமார். பழனியில் வசிக்கும் ஒரு எதார்த்த இளைஞனை அப்படியே நம் கண் முன் நிறுத்தி அவர்கள் வாழ்வில் நடக்கும் எதார்த்த விஷயங்களை மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும்படியும் கொடுத்து லைவ்வான ஒரு படமாக கலக்கத்துடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த படம் மூலம் உணர்த்தி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் எதார்த்தமான காட்சி அமைப்புகள் மூலம் வேகமாக நகரும் படம் இரண்டாம் பாதியில் உணர்ச்சி பூர்வமான காட்சி அமைப்புகளால் சற்றே அயற்சி ஏற்படும் படி அமைந்து பின்னர் கிளைமாக்ஸில் வேகம் எடுத்து நிறைவாக முடிந்து இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இன்றைக்கு நடக்கும் எதார்த்தத்தை டிவிஸ்ட் ஆக வைத்து இதுபோல் பாலியல் வன்கொடுமைகள் செய்யும் நபர்களிடமிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதையும் எதார்த்தமாக கூறி கைத்தட்டலும் பெற்றிருக்கிறார். படத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகளில் மட்டும் சற்று தெளிவான திரைக்கதை அமைத்து ஒரே இடத்தில் சுற்றி கொண்டு இருக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
எப்பொழுதும் ஒரு மெடுக்கான நாயகனாகவே நடித்து இருக்கும் சித்தார்த் இந்த படம் மூலம் இன்றைய சூழலில் வளம் வரும் யதார்த்த இளைஞனாக நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவருக்கும் அவரது அண்ணன் மகளுக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர். குறிப்பாக அண்ணன் மகளை இழந்து வாடும் சித்தப்பா கதாபாத்திரத்தையும், அவருடைய தவிப்பையும் மிக எதார்த்தமாக வெளிப்படுத்தி விருதுகள் வாங்கும் அளவுக்கான நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார் சித்தார்த். இந்தப் படம் அவரது நடிப்பில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. அவருக்கு விருதுகள் நிச்சயம்.
அதேபோல் இவருக்கு சரிசம போட்டியாளராக நடித்திருக்கிறார் சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீ. இவ்வளவு சிறிய வயதில் நேர்த்தியாக முகபாவனைகளிலும் வசன உச்சரிப்புகளிலும் மிக எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கும் விருதுகள் நிச்சயம். நாயகியாக வரும் நிமிஷா சஜயன் ஆரம்பத்தில் அமைதி காத்து கிளைமாக்ஸில் வெகுண்டு எழுந்திருக்கிறார். இவரின் எதார்த்தம் அடிப்பு படத்தோடு ஒன்றி இருக்கிறது. சித்தார்த்தின் அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயரும் அவரது பங்குக்கு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பாலியல் வன்கொடுமை செய்யும் வில்லனாக வரும் துணை நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவரைப் பார்க்கும் பொழுது நமக்கே பயம் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். மற்றபடி இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.
திபுநினன் தாமஸ் இசையில் சித்தார்த் நிமிஷா சஜயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி கேட்கும் ரகம். வன்கொடுமை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறுமி சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிகச் சிறப்பான ஒலி அமைப்பை கொடுத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு அழுத்தமான கதையை மிக எதார்த்தமான திரைக்கதையோடு இன்றைய சூழலை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி ஒரு சமூகத்துக்கு தேவையான படமாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்கள் சித்தா பட குழுவினர்கள்.
சித்தா - விழிப்புணர்வு!