
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அடல்ட் ஒன்லி காமெடி திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கிறது. விரசமான கதைக்களத்தை வைத்துக்கொண்டு 18 + ஆடியன்ஸை மட்டும் குறி வைத்து உருவாகி இருக்கும் இத்திரைப்படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறதா, அல்லது சிரிப்பு மழையில் நனைய வைக்கிறதா என்பதை பார்ப்போம்...
நாயகன் வைபவ் மற்றும் சுனில் ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அவருடைய தந்தை அந்த கிராமத்தில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நபராக வாழ்ந்து வருகிறார். அவர் திடீரென மரணம் அடைகிறார். இதைக் கண்ட அந்த குடும்பம் மிகுந்த அதிர்ச்சி அடைகிறது. அவர் இறப்பதற்கு முன் அவரது பிறப்புறுப்பு விரைப்படைந்தது அப்படியே இறந்த பின்பும் தொடர்கிறது. இதைக் கண்ட அந்த குடும்பம் ஊர் மக்களுக்கு இது தெரிந்தால் அவர்கள் மானம் கப்பலேறிவிடும் என நினைத்து அதை மறைத்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய முயற்சி செய்கிறது. ஊர்க்காரர்கள் முன் மானம் போகாமல் அவர்கள் இந்த இறுதி சடங்கை நடத்தி முடித்தார்களா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை இதுவரை வந்ததே இல்லை. அப்படி ஒரு புதுமையான முகம் சுளிக்கும்படியான ஒரு கதையை வைத்துக்கொண்டு படம் முழுவதும் எந்த ஒரு இடத்திலும் விரசமில்லாமல் முழுக்க முழுக்க குடும்பமாக சென்று பார்த்து சிரித்து விட்டு வரும் காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களையும் ரசிக்க வைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் முகம் சுளிக்காத படி விரசமான காட்சி அமைப்புகளோ அல்லது விரசமான வசன அமைப்புகளோ எதுவும் இல்லாமல் குறிப்பாக டபுள் மீனிங் வசனங்களும் பெரிதாக இல்லாமல் கிரேசி மோகன் படத்தில் வரும் வசனங்கள் போல் காமெடி வசனங்களை உருவாக்கி, அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கின்றனர். குறிப்பாக முதல் பாதி நன்றாக கலகலப்பாக நகர்ந்து இரண்டாம் பாதியில் சற்று வேகத்தடைகள் நிறைந்து காணப்பட்டாலும் இறுதி கட்ட காட்சிகள் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து மிகவும் ஒரு கலகலப்பான படமாக அமைந்திருக்கிறது.
இப்படி ஒரு கதையை வைத்துக் கொண்டு எந்த ஒரு இடத்தில் மிஸ் ஆனாலும் அது முழுக்க முழுக்க அடல்ட் படமாக மாற நிறைய சான்ஸ் இருந்தும் படத்தை நேர்த்தியாக கையாண்டு பார்ப்பவர்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் ஏற்படாதவாறு குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இந்த படத்தைக் கொடுத்திருக்கின்றனர். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை தவிர்த்து மற்றபடி குடும்பத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை சென்று திரையரங்கில் காணும்படி படத்தை உருவாக்கி அதில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்கள்.

படத்தில் சுனில், சாந்தினி மற்றும் வைபவ், நிஹாரிக்க ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிகர்கள் நிரம்பி வழிகின்றனர். போதை ஆசாமியாக நடித்திருக்கும் வைபவ் அந்த கதாபாத்திரமாகவே மாறி கலகலப்பு கூட்ட முயற்சி செய்திருக்கிறார். இவருக்கு அண்ணனாக வரும் சுனில் அவருக்கு என்ன வருமோ அதை கொடுத்திருக்கிறார். நிஹாரிக்கா, சாந்தினி ஆகியோர் வழக்கமான நாயகிகளாக வந்து செல்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களாக வரும் பால சரவணன், சுவாமிநாதன், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், தீபா, ரமா உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக கொடுத்து படத்தை தாங்கி பிடித்துள்ளனர்.
சத்யா திலகம் ஒளிப்பதிவில் இறப்பு வீடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு கதை ஓட்டத்திற்கு நன்றாக பயன்பட்டிருக்கிறது. அருண் ராஜ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அடல்ட்டான கதையை குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாக்கியதற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள். அதை என்டர்டைன்மென்ட்டாக கலகலப்பாக கொடுத்து இருப்பது படத்திற்கு இன்னொரு சிறப்பாக அமைந்திருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குடும்பத்துடன் சென்று கண்டிப்பாக இந்த படத்தை கண்டு களிக்கலாம்.
பெருசு - மூர்த்தியும் பெருசு கீர்த்தியும் பெருசு!