விவசாயம் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பது சரியா, தவறா?
பெண்கள் வேலைக்கு செல்வது பாதுகாப்பானதா, ஆபத்தானதா?
ஆண்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது கடமையா, தியாகமா?
வருமானம் அதிகம் வேண்டுமென்பதும் வசதியாக வாழவேண்டுமென்பதும் நல்ல எண்ணங்களோ தீய எண்ணங்களா?
இப்படி பல கேள்விகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ விவாதித்திருக்கிறது 'ஆண் தேவதை'. சமுத்திரக்கனி... ஆண் தேவதை என்ற பெயருக்கு மிகப் பொருத்தமான நடிகர்; பொதுவாக. இந்தப் படத்தில் எப்படி என்பதைப் பார்ப்போம்.
குட் டச், பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சமுத்திரக்கனி விவரிப்பதில் தொடங்குகிறது படம். தமிழ் சூழலில் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகத்தான் பார்க்கப்படுகின்றன என்றாலும், தன் படங்களில் முடிந்த அளவு நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்லிவிட வேண்டுமென்ற நல்ல எண்ணம் உடையவர் சமுத்திரக்கனி. நாடோடிகள், போராளி போன்ற படங்களில் அந்தக் கருத்துகள் காட்சிகளாக கதையோடு இணைந்து வந்தன. சாட்டையில் தொடங்கி பின் வந்த படங்களில் சமுத்திரக்கனி நேரடியாகப் பேசும் வசனங்களாகிவிட்டன. என்றாலும், இவர் சொன்னால் கேட்கலாம் என்ற எண்ணம் வரும் நடிகர்களுள் சமுத்திரக்கனி ஒருவர். ஆனாலும், ஒரு திரைப்படம் என்பதில் கதையைத் தாண்டி இவை செல்லும்போது அது திரைப்படத்துக்கு ஆபத்துதான். தாமிரா இயக்கத்தில் 'ஆண் தேவதை' எப்படி?
சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் துணையாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இருவரும் தங்கள் பணிகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், வளர்ந்து வருபவர்கள். இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதில் ஏற்படும் சிரமத்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நிறைவின்மையாலும் இருவரில் ஒருவர் வேலையை விடுவது என்று முடிவெடுக்கின்றனர். ரம்யா பாண்டியன், தன் பணியில் அதிக உயரத்துக்குச் செல்ல வேண்டும், நிறைய சம்பாரிக்க வேண்டும் என்ற கனவுகள் உடையவர். 'நல்ல ஸ்கூலுக்கு அனுப்பலைன்னா நாளைக்கு குழந்தைங்க வளர்ந்து நம்மள கேள்வி கேப்பாங்க' என்று நம்புபவர். சமுத்திரக்கனியோ, 'என்னால அந்த ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்ட முடியலைன்னா என் குழந்தைகிட்ட எடுத்துச் சொல்லி என் வருமானத்துக்கேத்த ஸ்கூலில் சேர்ப்பேன்' என்று கூறுபவர். சமுத்திரக்கனி வேலையை விட்டுவிட்டு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடிவு செய்கிறார். இப்படிப்பட்ட இருவரும் எடுத்த முடிவால் என்ன விளைவுகள் நேர்ந்தன என்பதே 'ஆண் தேவதை'.
கணவன் மனைவி உறவு எப்படியிருக்க வேண்டும், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பல நல்ல விஷயங்களை ஆங்காங்கே பேசியிருக்கிறார் தாமிரா. ஒரு மோசமான லாட்ஜில் சமுத்திரக்கனி தன் குழந்தையோடு தங்க நேர, அங்கு ஒரு விலைமாதுவுக்கு அவர் உதவும் அந்தக் காட்சி ஒரு நல்ல சாம்பிள். உலகில் யாரும் தனித்து விடப்படுவதில்லை, தெரிந்தவர்கள் எல்லோரும் கைவிட்டாலும் கூட யாரேனும் ஒருவர் கைகொடுப்பார் என்னும் நம்பிக்கை செய்தி சொல்லும் காட்சிகள் நன்று. கடவுளுடன் சமுத்திரக்கனியும் அவரது மகளும் விளையாடும் விளையாட்டு அழகான ஐடியா.
நேர்மறையாக இத்தனை விஷயங்கள் இருந்தாலும் படத்துக்கு எதிர்மறையாவது சொல்ல வந்த கருத்தில் நேர்ந்த குழப்பம்தான். விவசாயத்தை ஆதரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பது மறுக்க முடியாத தேவை. அதே நேரம் இத்தனை கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வேலை செய்பவர்கள் நம்மிடையே இருந்து வந்தவர்கள்தானே? எத்தனையோ முதல் தலைமுறை பட்டதாரிகள் அந்த வேலைவாய்ப்புகளால் வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றனர்தானே? கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையென்றாலே அவர்கள் வாழ்க்கை முறை இப்படித்தான் ஆகிவிடும் என்று சொல்வதுபோன்ற உணர்வு. வங்கிக் கடன், பெண்கள் பணிபுரிவது என இன்றைய வாழ்வில் இன்றிமையாத, பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் பல விஷயங்களும் இறுதியில் எதிர்மறையாக முடிவது போல கதையை அமைத்தது கருத்தாகவும் நம்மை கவரவில்லை, படத்துக்கும் உதவவில்லை. தாமிராவும் சமுத்திரக்கனியும் இப்படி செய்யலாமா?
படத்தில் எழுபது எம்பதாயிரம் சம்பளம் வாங்குபவர்கள் BMW கார் வாங்குவதாகக் காண்பிக்கிறார்கள். வெளியுலகம் அப்படித்தான் இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இப்படி படம் பார்க்கும்போதே நமக்குள் எதிர்வாதங்கள் எழுகின்றன. கருத்துகளைத் தாண்டி ஒரு படமாக, பெரிதாக புதிய விஷயங்கள் இல்லாத, திருப்பங்கள் இல்லாத ஆச்சரியங்கள் அளிக்காத, சின்னச் சின்ன சிரிப்புகளைத் தருவதாக, சின்னச் சின்ன ரசிக்கக்கூடிய வசனங்கள் உள்ளதாக இருக்கிறது ஆண் தேவதை.
சமுத்திரக்கனி, ஒரு நடிகராக எப்பொழுதும் போல நிறைவாக செய்திருக்கின்றார். நடிகராக இன்னும் அவரை வேறு நிறங்களில் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள். ரம்யா பாண்டியன், மிடில் க்ளாஸிலிருந்து மெல்ல வளரும் கார்ப்பரேட் யுவதியாக பொருத்தமாக இருக்கிறார், ஓரளவு அழுத்தமாக நடித்தும் இருக்கிறார். படத்தில் பெரியவர்களைத் தாண்டி குழந்தைகள் மோனிகாவும் கவினும் மனதில் நிற்கிறார்கள். காளி வெங்கட், ராதாரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா இன்னும் பலர் படத்தில் இருக்கின்றனர்.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு நகரத்தில் செல்ல இடமில்லாமல் தவிக்கும் அப்பா-மகளின் வெறுமையை நமக்கும் கடத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளின் கணத்தை அதிகரித்திருக்கின்றது. பாடல்கள் படத்துடன் கடந்து செல்கின்றன.
ஆண் தேவதை - அன்பு தேவதையாகவும் கொஞ்சம் ஆதிக்க தேவதை போலவும் தோன்றுகிறது