Skip to main content

வருட இறுதியில் ஓர் அருமையான படம் - ‘செம்பி’ விமர்சனம்

Published on 30/12/2022 | Edited on 31/12/2022

 

Sembi Movie Review

 

நகைச்சுவை நடிகையாக முனி படம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை சிறப்பாகத் தொடங்கி நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோவை சரளா தற்பொழுது குணச்சித்திர நடிகையாக செம்பி படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இவரின் இந்தப் புதுமையான முயற்சிக்குப் பலன் கிடைத்ததா? இல்லையா?

 

கொடைக்கானலில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக இருக்கும் வயதான பாட்டி கோவை சரளா, பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். பேத்தியை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சின்ன சின்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு நாள் மலைக்கு தேன் எடுக்க சென்ற இடத்தில் சிறுமி செம்பியை பெரிய அரசியல்வாதியின் மகனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடுகின்றனர்.

 

இந்த விஷயம் அறிந்த ஒரு போலீஸ் அதிகாரி கோவை சரளா கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்கிறார். அதற்கு மறுக்கும் கோவை சரளா அந்த இடத்திலேயே அந்த போலீஸ் ஆபீசரை உயிர் ஊசலாடும் வரை அடித்துவிட்டு அப்படியே ஊரைவிட்டு தப்பித்து ஓடுகிறார். போகும் வழியில் தம்பி ராமையாவின் பேருந்தில் ஏறிச் செல்கிறார். அந்தப் பேருந்தில் இவருடன் 27 பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களிடம் கோவை சரளா நடந்தவற்றைக் கூறுகிறார். இதையடுத்து அந்தப் பேருந்தில் இருக்கும் அஷ்வின் உள்ளிட்ட சிலர் உதவியோடு செம்பியின் வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு வருகிறது. அங்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, இல்லையா? என்பதே செம்பி படத்தின் மீதி கதை.

 

கும்கி படத்திற்கு பிறகு தோல்வி படங்களாகவே கொடுத்து துவண்டு போயிருந்த இயக்குநர் பிரபு சாலமன் தற்பொழுது செம்பி படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு சிறப்பான திரைக்கதை மூலம் அழுத்தமான காட்சிகளோடு பார்ப்பவர் மனதை கலங்கச் செய்து ஒரு ஃபீல் குட் படத்தை பார்த்த உணர்வைக் கொடுத்து கம்பேக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

 

இவரின் மைனா, தொடரி படங்கள் போல் படம் ஒரு மலைக்கிராமத்தில் ஆரம்பித்து, பிறகு ஒரு பேருந்தில் படம் பயணித்து எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு காட்சிகளைத் தொகுத்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். அழுத்தமான காட்சிகளும் சிறப்பான திரைக்கதையும் அதில் நடித்த நடிகர்களின் சிறப்பான பங்களிப்பும் இருந்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும் என்பதை இந்தப் படம் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

 

இந்த வயதிலும் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த ஒரு நடிப்பைக் கொடுத்து படத்திற்கு உயிரூட்டி உள்ளார்  கோவை சரளா. இதுவரை நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்ற கோவை சரளா இப்படம் மூலம் குணச்சித்திர நடிப்பிலும் கைத்தட்டல் பெற்று தியேட்டரை அதிரச் செய்திருக்கிறார். பேத்தியுடன் பாசமாகப் பழகும் காட்சிகளிலும் சரி; அவருக்காக உருகும் காட்சிகளிலும் சரி; அவரை காப்பாற்றப் போராடும் காட்சிகளிலும் சரி; நம் வீட்டில் இருக்கும் கிராமத்துப் பாட்டிகளை அப்படியே கண் முன் பிரதிபலித்துக் காட்டி, பல இடங்களில் கண்கலங்க வைத்தும், சில இடங்களில் சிலிர்க்கவும் வைத்துப் பரவசப்படுத்தி இருக்கிறார்.

 

இவருக்கு விருதுகள் நிச்சயம். சின்ன வேடமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின். இதற்கு முன் இவர் பெற்ற கலவையான விமர்சனங்களுக்கு இந்தப் படம் மூலம் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் போல் தனது இன்னசென்டான நடிப்பின் மூலம் காட்சிகளை என்ஹான்ஸ் செய்திருக்கிறார்  தம்பி ராமையா.

 

அதேபோல் செம்பியாக நடித்திருக்கும் அந்த சிறுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த முகம் தெரியாத நடிகர்கள் பலர், இதுதான் தனக்கு முதல் படம் என்பது போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வேகத்தையும், கதைக்கு பக்கபலமாகவும் இருந்து, படத்தை கரைசேர்க்க உதவியிருக்கின்றனர். அவர்களுடைய பங்களிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.

 

மலைக்கிராமம், புல்வெளி, அருவி, பனிமூட்டம், அதற்கு நடுவே இருக்கும் பனித்துளிகள் என ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன். பொதுவாக பிரபு சாலமன் படங்கள் என்றாலே மலையும், அது சார்ந்த பகுதிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்படும். இந்தப் படத்திலும் அவை சிறப்பாக வெளிப்பட்டு பார்ப்பவர்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அது கதைக்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை கரைசேர்க்க உதவியிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் இனிமையாகவும் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உருகவும் வைத்திருக்கின்றன. ஒரு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரபு சாலமன் படங்களில் இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

 

கும்கி படத்திற்குப் பிறகு ஓரளவு வெற்றியோ வரவேற்போ இல்லாத படமாக கொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் செம்பி படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல தரமான படத்தைப் பார்த்த உணர்வைக் கொடுத்து மீண்டும் கைதட்டல் பெற்று இருக்கிறார்.

 

செம்பி - சிறப்பு!


 

சார்ந்த செய்திகள்