தர்மதுரை வெற்றிக்குப் பிறகு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சீனு ராமசாமி அடுத்தடுத்து கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் மூலம் வெற்றிக்கோட்டை கட்ட மீண்டும் முயற்சி செய்தார். அந்த முயற்சியில் அவருக்கு ஓரளவு பலனும் கிடைத்தது. தற்பொழுது மீண்டும் கோழிப்பண்ணை செல்லதுரை படம் மூலம் களத்தில் குதித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமிக்கு வரவேற்பு கிடைத்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்...
ராணுவத்தில் வேலை பார்க்கும் ரியாஸ் தனது மனைவி ஐஸ்வர்யாவை காண வீட்டுக்கு வருகிறார். அவருக்கு மகன் ஏகனும் மகள் சத்யாவும் இருக்கின்றனர். வந்த இடத்தில் ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவர அவர்களை அடித்து துவைத்து விடுகிறார் ரியாஸ். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா அந்த நபருடன் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ரியாஸ் தனது பிள்ளைகளை அவரது பாட்டி வீட்டில் நிற்கதியாக விட்டுவிட்டு அவரும் ஊரை விட்டு சென்று விடுகிறார். இதையடுத்து அந்தப் பிள்ளைகள் அவர்களது தூரத்து உறவான பெரியப்பா யோகி பாபு உடன் கோழிப்பண்ணையில் வளர்கின்றனர். நாயகன் ஏகனும் அவரது தங்கை சத்யாவும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். இதில் சத்தியா கல்லூரியில் படித்து வருகிறார். ஏகன் யோகி பாபு சிக்கன் கடையில் கறி வெட்டும் நபராக வேலை செய்கிறார். நாட்கள் இப்படியே செல்ல பெரிய பெண்ணாக இருக்கும் சத்யாவுக்கு இன்னொரு நாயகன் சிவாவுடன் காதல் மலர்கிறது. இவர்களுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார் அவர் அண்ணன் ஏகன். இதை தொடர்ந்து ஏகன் வாழ்வில் சில அதிரடி திருப்பங்கள் எதிர்பாராமல் நடக்கிறது. அது ஏகன் எப்படி சமாளித்தார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.
சமீப காலங்களில் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், துப்பாக்கி என தமிழ் சினிமாவே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் ஆழ்கடலில் மெதுவாக சலனம் இல்லாமல் அழகாக செல்லும் படகு போல் ஒரு எதார்த்த மனிதர்களின் படத்தை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை அப்படியே அவர்கள் உடன் சேர்ந்து வாழும் பொழுது எந்த அளவுக்கு நமக்கு நெருக்கமான சூழல் ஏற்படுமோ அது போன்ற ஒரு உணர்வை இந்த படம் மூலம் நம் மனதுக்குள் கடத்தி இருக்கிறார் இயக்குநர். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த ஊருக்கே நம்மளை அழைத்து சென்று விடுகிறார். அந்த அளவு எதார்த்த வாழ்வியலை அறிமுக நாயகன் ஏகனோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார். படத்தின் முதல் பாதி சற்று வேகமாக நகர்ந்து இரண்டாம் பாதி ஆங்காங்கே பல இடங்களில் ஸ்பீடு பிரேக்கர் போடுகிறது. அது படத்துக்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் கதை மாந்தர்களின் உணர்வுகளும் அவர்களின் நடிப்பும் படத்தை தாங்கி பிடித்து இருக்கிறது.
அறிமுக நாயகன் ஏகன் புதுமுகம் போல் அல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இந்த படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி ஆகி இருக்கிறார். அவரை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வேலை வாங்கி நல்ல நடிகனாக இப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. நாயகன் ஏகனும் அவருக்கு நன்றாக ஈடு கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இவருக்கும் ஏகனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. யோகி பாபு வழக்கம்போல் காமெடி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தையும் இப்படம் ஏற்று நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக அவர் சிரிப்பு மூட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தாலும் இப்படம் மூலம் உணர்ச்சிபூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு கலங்கடிக்க செய்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு தூண் போல் அமைந்திருக்கிறது.
நாயகி பிரிகிடா வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இப்படத்திலும் செய்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். திண்டுக்கல் லியோனியின் மகன் சிவா மதிக்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். படத்தின் நகைச்சுவை டிபார்ட்மெண்ட்டை கையில் எடுத்திருக்கும் குள்ள மனிதர் குட்டிப்புலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காமெடியில் கலக்கி இருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் காமெடிகள் ஒர்க்அவுட் ஆகியிருக்கின்றன. சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வரும் ரியாஸ் மற்றும் பிக் பாஸ் ஐஸ்வர்யா ஆகியோர் அவரவர் வேலையை சரியாக செய்து இருக்கின்றனர்.
அசோக் ராஜா ஒளிப்பதிவில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பம், பாசம், நேசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படியான காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து அதை நம்முள் கடத்திருக்கிறார். ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. அதுவே படத்திற்கு உயிர்நாடியாய் அமைந்திருக்கிறது. எதார்த்த மனிதர்களின் வாழ்வியலும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் அதை நாம் எப்படி கடக்க வேண்டும் என்ற உண்மைகளையும் மிக மிக நேர்த்தியாக இப்படம் சொல்கிறது. அதை நம் மனதிற்கு நெருக்கமாக கதை மாந்தர்கள் மூலம் நிறைவாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
கோழிப்பண்ணை செல்லதுரை - எதார்த்த வாழ்வியல்!