அன்றாட வாழ்வில் கத்தியின் பயன் அளப்பரியது. ஒரு உயிர் ஜனிப்பதில் ஆரம்பித்து, மண்ணில் புதையும் வரை கத்தி நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. கத்தியை வைத்து நல்ல செயல்களையும் செய்யலாம். அதே கத்தியை வைத்து கொலை, கொள்ளை, வன்முறையிலும் ஈடுபடலாம். இப்படி, கையாள்பவரின் மனநிலையை பொறுத்து பயன் தரும் கத்தி, சவரக்கத்தியாய் நமக்கு தரும் சேதி என்ன...
சவரத்தொழிலாளியான ராம், தனது கர்ப்பிணி மனைவி பூர்ணாவுடன் அவரது சகோதரனின் காதல் திருமணத்தை நடத்திவைக்க செல்கிறார். பரோலில் வெளியில் வந்துவிட்டு மாலைக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாதாவான மிஷ்கின். ஒரு சிறு விபத்தில் அவரை உரசி விட்டு ராம் சென்று விட, கோபமடைந்த மிஷ்கின், ராமை கொன்றே தீர வேண்டும் என உறுதி மொழி ஏற்று அவரை விடாமல் துரத்துகிறார். இருவருக்குமிடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டுதான் சவரக்கத்தி.
முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் இருந்து தன் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சவரக்கத்தியை இப்போதும் வைத்து சவரம் செய்து காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார் ராம். ஒரு நடுத்தர வயது சவரத்தொழிலாளியின் உருவத்தோற்றம், பாவனை என அனைத்திலும் கனகச்சிதமாக பொருந்துகிறார். மிஷ்கினிடம் அடிவாங்கும் இடத்திலும், கெஞ்சும் போதும், காத்து கேளாத பூர்ணாவிடம் வாக்குவாதம் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் அவர் காட்டிய உணர்ச்சிகாரமான நடிப்பு தங்கமீன்களில் செய்ததைவிட இருமடங்கு அதிகம். ஆனால் அந்த வெளிப்பாடு சில இடங்களில் அதீதமாகிறது. சரியாகக் காது கேளாதவராக வரும் பூர்ணாவை, 'இவ்வுளவு நாள் எங்கம்மா இருந்த?' என்று கேட்கத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளைக்காரியாகவும், வாயில் வசவுச் சொல்லுக்காரியாகவும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு அவ்வுளவு உயிர் கொடுத்திருக்கிறார். அதுவும் சொந்தக் குரலில் பேசியிருப்பது மேலும் பலம் சேர்த்துள்ளது. ஒன்றுக்கும் ஆகாத பெண்ணாக இருந்தும் சிக்கலான நேரத்தில் சமயோசிதமாக பிரசவ வலி எடுத்துத் தப்பிக்கும் இடமாகட்டும், வில்லனிடம் தன் கணவனுக்காக வாதாடி மாட்டிக்கொள்ளும் இடமாகட்டும், காமெடியில் பின்னியிருக்கிறார். பூர்ணாவுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் பல வாய்ப்புகள் தந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாதா மாங்காவாக வரும் மிஷ்கின் தன் பெரிய உடலுடன் அனாயாசமாக ஓடி, காம்ப்ரமைஸ் பண்ணாமல் ராமின் கையையோ, காலையோ வாங்க வெறியுடன் படம் முழுவதும் சுற்றுகிறார். பல இடங்களில் அவருடைய நடிப்பு மிகையாகத் தோன்றுகிறது. மற்றபடி நடிப்பில் வழக்கமான மிஷ்கினை மாற்றி வேறு மிஷ்கினை காட்டியுள்ளார். மிஷ்கினின் அடியாட்களாக வரும் அத்தனைப் பாத்திரங்களும் அவரவர் பங்குக்கு ரசிக்க வைக்கிறார்கள்.
மிஷ்கின் ஸ்டைல் திரைக்கதை படத்திற்கு பலம். ஒரு பாடல் கூட இல்லாமல் இரண்டு மணி நேரம் அயர்ச்சி இல்லாமல் உட்கார வைக்கிறார். ஒரு சின்ன நூலைத் திரியாக்கி, சிக்கலுக்குள்ளாக்கி அதையும் சீரியஸாக்காமல் நகைச்சுவையுடன் கதை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும், உடல் மொழியால் நகைச்சுவை செய்யும் சார்லி சாப்ளின், நாகேஷ் வகை ஸ்லாப்ஸ்டிக் காமெடியை பிரதானமாக வைத்து நகர்த்தியுள்ளனர். சின்ன சின்ன வசனங்களில் அரங்கை சிரித்து தெறிக்க வைத்துள்ளனர். ஆனால் அது தொடர்ச்சியாக நிகழாது. எந்த வகை படமென்றாலும் அதில் மிஷ்கின் பாணி இருப்பது அவருக்கு பலம். அதை மீறாமல் இயக்கியிருக்கிறார் ஆதித்யா. கிளைமாக்ஸில் திடீரென்று நிகழும் மிஷ்கின் மனமாற்றம் இயல்பாக இல்லை. அரோல் கரோலியின் (comical) காமிக்கல் இசை படத்தின் மனநிலையை நம்முள் அழகாக செலுத்துகிறது. கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில், கேமரா கோணங்கள் வித்தியாசம்.
சவரக்கத்தி - கூர்மையான காமெடி, அறுவையாக இருக்காது.