குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் சமீப காலங்களாக நடித்து கைதட்டல் பெற்று வரும் நடிகர் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வெப்பன். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கும் அளவுக்கு அப்படி என்ன இந்தக் கதையில் நடிகர் சத்யராஜை கவர்ந்துள்ளது. அதேபோல் ரசிகர்களை இப்படம் எந்த அளவு ஈர்த்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.
சுதந்திரத்திற்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் சத்யராஜின் தந்தையும் ஜெர்மனிக்கு செல்கின்றனர். போன இடத்தில் ஹிட்லரின் படையில் சூப்பர் ஹியூமன்களை தயாரித்து அவர்கள் மூலம் உலகத்தை வீழ்த்தும் ஒரு மருந்தை ஹிட்லர் படை கண்டுபிடிக்கிறது. அம்மருந்தை இந்தியாவிற்கு கடத்தி வரும் சத்யராஜின் தந்தை அதைத்தன் மகன் சத்யராஜுக்கு செலுத்தி அவரை சூப்பர் ஹியூனாக மாற்றி விடுகிறார். இதை அடுத்து தானுண்டு தன் குடும்பம் உண்டு என வசித்து கொண்டிருக்கும் சத்யராஜை ஹிட்லர் படை பின் தொடர்ந்து வந்து அவர் குடும்பத்தை அழிக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் சத்யராஜ் மற்றும் அவருடைய மகன் வசந்த் ரவி அந்த விபத்தில் தனித்தனியாக பிரிகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் காப்பாற்றப்படுகிறது.
இதைக் கண்ட யூட்யூபரும், சமூக ஆர்வலருமான வசந்த் ரவி அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய சூப்பர் ஹுமனை தேடி காட்டுக்குச் செல்கிறார். அதேசமயம் பிளாக் சொசைட்டி என்ற கூட்டத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் ராஜீவ் மேனன் தன் சகாக்கள் ஒரு சூப்பர் ஹியூமனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவரும் அந்தச் சூப்பர் ஹுமனைத் தேடி காட்டுக்குச் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து அந்த சூப்பர் ஹியூமன் யார்? அவரை வசந்த் ரவி மற்றும் ராஜீவ் மேனன் கண்டுபிடித்தார்களா, இல்லையா? சத்யராஜுக்கும் வசந்த் ரவிக்கும் இருக்கும் உறவு என்ன ஆனது? இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
ஹாலிவுட் டிசி மார்வெல் போன்ற கம்பெனிகளில் உருவாகும் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் சமீப காலங்களாக வரவேற்பைப் பெறாமல் இருக்கும் இந்தச் சூழலில் அதைச் சரிகட்டும் வகையில் தமிழில் ஊரில் சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் குகன் சென்னியப்பன். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சில் எப்படி ஒரு அவெஞ்சர்ஸ் ஃபேமிலி இருக்கின்றதோ அதேபோல் இங்கு ஒரு சூப்பர் ஹீரோ பேமிலியை உருவாக்கும் முயற்சியில் வெப்பம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் இதன் இரண்டாம் பாகத்திற்கான வீடும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோ பேமிலி வைத்து ஒரு யூனிவர்சல் உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கும் படக்குழு அதே முயற்சியைப் படத்தின் திரை கதையிலும் இன்னமும் நன்றாக கவனம் செலுத்தி கொடுத்திருந்தால் இப்படம் ரசிகர்களிடையே இன்னும் கொஞ்சம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
சூப்பர் ஹீரோ மற்றும் அதைச் சுற்றி இருக்கும் யூனிவர்ஸ் என அந்தந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் ஏனோ கதைக்கும் திரைக்கதைக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுக்க தவறி இருக்கிறார். இதனால் படம் ஆரம்பித்து முடியும் வரை ஆங்காங்கே தொய்வுகள் ஏற்படுகிறது. இதனால் பார்ப்பவர்களுக்கு அயற்சியும் ஏற்படுகிறது. இருந்தும் படத்தின் இறுதி கட்ட காட்சிகள் சற்று பிராமி சிங்காக அமைந்து பார்ப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உணர்வை கொடுத்து அடுத்தடுத்த பாகங்களுக்கான லீடை கொடுத்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்து படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சத்யராஜ் கதாபாத்திரத்தை உணர்ந்து சூப்பர் ஹீரோ வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக மகன் வசந்த் ரவி இரட்டை வேடத்தில் தனக்கு என்ன வருமோ அதே நடிப்பை இப்படத்திலும் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரின் கதாபாத்திரமும் சத்யராஜின் கதாபாத்திரமும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. பிளாக் சொசைட்டி கூட்டத்தில் வரும் ராஜீவ் மேனன் வேலு பிரபாகரன் ஆகியோரின் கூட்டணி படத்திற்கு வில்லன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன. அவை வழக்கமான வில்லத்தனம் காட்டி விட்டு கடந்து சென்று விடுகிறது. நாயகி தான்யா ஹோப் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். உடன் நடித்த மற்ற முக்கியமான கதாபாத்திரங்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதைச் செவ்வனே செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
ஜிப்ரான் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை பல இடங்களில் மிரட்டி இருக்கின்றன. குறிப்பாக ஆக்சன் காட்சிகளிலும் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சிறப்பு. பிரபு ராகவ ஒளிப்பதிவில் சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட vfx காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளையும் நேர்த்தியாக காட்டி இருக்கின்றனர். படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளும் காஸ்டிம்களும் கருப்பு நிறத்தில் இருப்பதால் பெரும்பாலும் இருட்டுக்குள் நடக்கும் விஷயங்களை நல்ல வெளிச்சமாக காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன்.
தான் நினைத்த விஷயங்கள் மிக பிரம்மாண்டமாக இருந்தாலும் அவை காட்டிய விதத்தில் அதே பிரம்மாண்டத்தைக் காட்ட தவறியதால் இப்படத்தில் ஆங்காங்கே அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரை கதையிலும் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. கதையும் இன்னும் கூட ஆழமாகவும் அழுத்தமாகவும் இருந்திருக்கலாம். இருந்தும் இப்படியான முயற்சிகளை கையில் எடுத்து அதற்கு ஏற்றார் போல் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் ஆக்ஷ்ன் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுக்க எடுத்த முயற்சிக்காகவே இந்த வெப்பனை ஒரு தடவை பயன்படுத்தலாம்.
வெப்பன் - கூர்மை குறைவு!