Skip to main content

பேய் காமெடி போதாதா... 'A' காமெடி தேவையா? சந்தானம் ரிடர்ன்ஸ்... 'தில்லுக்கு துட்டு 2' - விமர்சனம் 

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

சந்திரமுகி, காஞ்சனா, அரண்மனை படங்களின் பாணியில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது 'தில்லுக்கு துட்டு 2'. சந்தானம் ஹீரோவாகி, மாஸ் ஹீரோவாகி ஒரு பெரிய தோல்வியைக் கடந்து மீண்டும் வந்திருக்கும் படம். 

 

santhanam dhilluku dhuddu



'தில்லுக்கு துட்டு 2' படத்தில் டாக்டரான நாயகி ஷ்ரிதா சிவதாஸ் மீது யாரெல்லாம் காதல் கொண்டு 'ஐ லவ் யூ'  சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் பேய் அடித்துவிடுகிறது. இதற்கிடையே தன் மாமா மொட்டை ராஜேந்திரனோடு காலனியில் வசித்து வரும் சந்தானம், தினமும் குடித்துவிட்டு ஏரியா மக்களுக்கு பெரும் தொல்லை தருகிறார். இவரது தொல்லையிலிருந்து விடுபட இவரால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து திட்டமிட்டு நாயகி மீது சந்தானத்துக்கு காதல் வர செய்கின்றனர். இவரும் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்த 'ஐ லவ் யு' சொல்ல பேய் இவரை பிரித்து மேய்ந்துவிடுகிறது. இதன் பிறகு ஏன் நாயகி ஷ்ரிதாவிடம் 'ஐ லவ் யு' சொன்னால் பேய் அடிக்கிறது, பேய்க்கும் ஷ்ரிதா சிவதாஸுக்கும் என்ன சம்மந்தம், சந்தானம் பேயிடம் இருந்து தப்பித்து தன் காதலில் வெற்றிபெற்றாரா... என்பதே 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் மீதி கதை.

 

shritha shivdoss



நாம் நீண்ட நாட்களாகப் பார்த்து ரசித்து, அலுத்துப்போன பேய் காமெடி வகை படம் என்றாலும் படத்தின் கதையை சற்றே வித்தியாசப்படுத்தியதன் மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் 'லொள்ளு சபா' ராம் பாலா. பேய் காமெடி படங்களுக்கே உண்டான டெம்பிளேட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பேய்க்கு இசையமைப்பாளர் ஷபீரும், காமெடிக்கு மொட்டை ராஜேந்திரனும் பொறுப்பேற்று அதை நன்றாக பூர்த்தி செய்துள்ளனர். ஷபீரின் பின்னணி இசைதான் கொஞ்சமேனும் திகில் என்ற உணர்வை கொடுக்கிறது. மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் பல இடங்களில் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. இருந்தும் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் குஞ்சு குட்டியாக நடித்திருக்கும் பிரஷாந்த் ராஜ் சேர்ந்து அடிக்கும் லூட்டி, அதிலும் குறிப்பாக முன் கிளைமாக்ஸ் காட்சிகள் உண்மையில் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன.

சந்தானம் காட்சிக்கு காட்சி தன் வழக்கமான கவுண்ட்டர் வசனங்கள் மூலம் கவர முயற்சி செய்துள்ளார். படத்தின் பிற்பாதியில் இவர் பேய்களிடம் செய்யும் சில்மிஷம் நன்றாக ரசிக்கவைத்துள்ளது. இருந்தும் சந்தானம் தன் கதாப்பாத்திரத்தை இன்னும் அதிக ஈடுபாட்டுடன் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தனக்கு எளிதில் வரும் பாத்திரமென்பதால் மிக அசால்டாக நடித்த தோரணை தெரிகிறது. நாயகி ஷ்ரிதா சிவதாஸ் தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு பெரிய ரோல் எல்லாம் இல்லை. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஊர்வசி, மாஸ்டர் சிவசங்கர், ராமர், பிபின், விஜய் டிவி தனசேகர், பிரஷாந்த் ராஜ், சி.எம் கார்த்திக் ஆகியோர் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொருவராய் பொறுப்பேற்று காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளனர்.

 

oorvasi dhilluku dhuddu



ராம் பாலா, லொள்ளு சபாவில் திரைப்படங்களை தரமாகவும், தரைமட்டமாகவும் ஸ்பூஃப் செய்து ரசிக்கவைத்த இயக்குனர். அவர் படமெடுத்தால் காமெடி வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை 'தில்லுக்கு துட்டு' படத்திலேயே சற்று உடைத்து வழக்கமான சந்தானம் ஸ்டைல் கிண்டல் காமெடியால் சிரிக்கவைத்து படத்தை வெற்றியாக்கினார். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் தரக்குறைவான 'A' வகை நகைச்சுவையை வைத்து படத்தை நிரப்பியிருக்கிறார். ஷபிரின் பின்னணி இசை மிரட்டலாக இருந்து கதையோட்டத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிளில் நல்ல தரம்.

இந்தக் கதை சீரியஸான ஒரு பேய் படமாகவே வெற்றி பெற்றிருக்கக் கூடிய கதை. ஆனால், காமெடி அதிகரித்ததால் திகில் குறைந்துள்ளது. காமெடி ஓரளவுக்கு காப்பாற்றியுள்ளது.

தில்லுக்கு துட்டு 2 - படம் பார்க்கும் நம் 'தில்லுக்கு' 'துட்டு' அவர்களுக்கு.

 

 

சார்ந்த செய்திகள்