அவ்வப்போது வெளியாகும் 'மர்டர் மிஸ்டிரி திரில்லர்' வகை படங்களின் வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.
போலீஸ் கான்ஸ்டபிளான ஹீரோ 'மெட்ரோ' சிரிஷ், கிரைம் நாவல் எழுத்தாளர் சாந்தினி மீது காதல் கொள்கிறார். இவருடைய காதலை ஏற்கவைக்க ஃபேக் கால் மூலம் சாந்தினியை தொடர்புகொண்டு வேறு ஒரு நபர் போல் பேசி மிரட்டி அதையே யுக்தியாகப் பயன்படுத்தி சாந்தினியை காதலிக்க வைத்து விடுகிறார். ஒரு நாள் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் சிரிஷ் போலவே வேறு ஒரு நபர் சாந்தினியை தொடர்புகொண்டு மிரட்ட சிரிஷிற்கு ஆச்சர்யமும், சந்தேகமும் ஏற்படுகிறது. பின்னர் ஒரு கொலை, அந்தக் கொலையில் சிரிஷ் மேல் பழி... கொலை செய்தது யார், சிரிஷிற்கு பதிலாக சாந்தினியை மிரட்டியது யார் என்பதே 'ராஜா ரங்குஸ்கி'.
அப்பாவி போலீஸ் கான்ஸ்டபிளாக சிரிஷ் அதிகம் பேசாமல் இயல்பாக நடித்துள்ளார். எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சிவசப்பட்டு ஹீரோயிசம் காட்டாமல் கதைக்குட்பட்ட கதாபாத்திரமாகவே இருக்கிறார். இது கதைக்கு நல்ல பங்களிப்பாக அமைந்துள்ளது. 'வஞ்சகர் உலக'த்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கொலை, மர்மம் படத்தில் சாந்தினி. தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையில் இவரின் நடிப்பு சற்று குறைவுதான். ஹீரோவின் நண்பன் கல்லூரி வினோத் கதையுடன் ஒட்டிய மெல்லிய காமெடியில் கலக்குகிறார். சி.பி.ஐ அதிகாரி ஜெயக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜய் சத்யா இருவரும் ஒரு சில காட்சிகளில் கவனம் ஈர்க்கின்றனர். சில காட்சிகளே வந்தாலும் அனுபமா குமார் மனதில் பதிகிறார்.
ஹீரோயினை சுற்றி பின்னப்பட்டிருக்கும் ஒரு வரி கதையை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தரணிதரன். சுஜாதா தன் கதைகளில் பயன்படுத்திய 'ரங்குஸ்கி' என்ற பெயர், சுஜாதா வாசகர்களாக நாயகன், நாயகி என எழுத்தாளர் சுஜாதாவுக்கு தன் அன்பைக் காட்டியிருக்கிறார். கடைசி வரை யார் கொலை செய்தது என்ற சஸ்பென்ஸ் உடையாமல் திரைக்கதை அமைத்தது வெற்றிதான் என்றாலும் உண்மை தெரியும்பொழுது நாம் பெரிய அதிர்ச்சியடையவில்லை. கடைசி முடிச்சு அவிழ்ந்தவுடன் வரும் கிளைமாக்ஸ் திருப்திகரமாக இல்லை. கொலைக்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்கள் கவனம் ஈர்க்க தவறினாலும், பின்னணி இசை மூலம் அதை சரி செய்து விடுகிறார் யுவன் ஷங்கர் ராஜா. யுவாவின் ஒளிப்பதிவு, வீண் பரபரப்பு காட்டாமல் எளிமையாக , தெளிவாக உள்ளது. ஷாபிக் முகமது அலியின் படத்தொகுப்பு படத்திற்கு வேகத்தை கூடியுள்ளது.
ராஜா ரங்குஸ்கி - ஒரு நல்ல, இல்லை இல்லை... ஓரளவு நல்ல திரில்லர்.