பெரும்பாலும் வறண்ட மாவட்டமாக பார்க்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் நீர் பற்றாக்குறை, கருவேல மரத்தை மையமிட்டு அரசியல் மற்றும் சாதி பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த இராவண கோட்டம். கேட்பதற்கு பழைய கதையாக இருந்தாலும் புதிய கதைக்களம் மூலம் இப்பிரச்சனைகளை கூற வந்திருக்கும் இராவண கோட்டம் ரசிகர்களை ஈர்த்ததா..?
ராமநாதபுரத்தில் உள்ள ஏனாதி என்ற கிராமத்தின் பெரிய தலைக்கட்டாக இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த பிரபு மற்றும் கீழத் தெருவைச் சேர்ந்த இளவரசு ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து கொண்டு சாதிப்பிரிவினை இன்றி தங்களது ஊரை ஒற்றுமையாக வாழப் பழக்கி வருகின்றனர். இது பிடிக்காத அரசியல்வாதி அருள்தாஸ், மந்திரி பி.எல்.தேனப்பனோடு சேர்ந்துகொண்டு கீழத் தெருவைச் சேர்ந்தவர்களை தூண்டிவிட்டு இரு சமூகத்திற்குள் பிரச்சனையை வரவைத்து பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்கின்றனர். அதற்கு பகடைக்காயாய் நாயகி ஆனந்தியின் காதலை பயன்படுத்தி பிரிவினையை உண்டாக்கி ஊருக்குள் கலவரத்தை உண்டாக்குகின்றனர்.
இந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த சாந்தனுவும் கீழத் தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் பிரிய நேர்கிறது. இதைப் பயன்படுத்தி பிரிவினையை உண்டாக்கும் அரசியல்வாதிகளை எப்படி சாந்தனு தனிமனிதனாக நின்று போராடி எதிர்த்து ஜெயிக்கிறார் என்பதே இராவண கோட்டம் படத்தின் மீதி கதை.
அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இரு நண்பர்களுக்குள்ளே நடக்கும் மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங்கை பயன்படுத்தி அதனுள் காதலையும் புகுத்தி, கூடவே தற்போதுள்ள சூழலில் நடக்கும் நவீன பிரச்சனைகளையும் கூறி ஒரு உணர்ச்சிமிக்க திரைப்படமாக இதை உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். சாதிப் பிரச்சனை, மண் சார்ந்த கருவேல பிரச்சனை, தண்ணீர் பற்றாக்குறை என பொது பிரச்சனைகளை பெரிதாக காட்டும்படியாக ஆரம்பித்த திரைப்படம் போகப்போக முக்கோண காதலுக்குள் நடக்கும் பிரச்சனைகளை மட்டுமே பிரதானமாக காண்பித்து பார்ப்பவர்களுக்கு ஆங்காங்கே சற்று அயற்சி ஏற்படும் படி அமைந்துள்ளது.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திரைக்கதை இப்படத்திலும் பிரதிபலித்துள்ளது சற்றே படத்திற்கு வேகத்தடையாக அமைந்திருக்கிறது. இருந்தும் பிரபுவின் பிரசன்சும், சாந்தனுவின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து இருக்கிறது. திரைக்கதை சுவாரசியத்தை காட்டிலும் அந்த மண் சார்ந்த பாரம்பரிய காட்சிகளும், அந்த ஊருக்குள் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களும் படத்தில் பிரதானமாக காண்பிக்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. முதல் பாதி சற்று வேகமாக நகர்ந்து இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சில வேகத்தடைகளுடன் படம் முடிகிறது.
நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் முழு மனதுடன் உபயோகப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை மிகச் சிறப்பாக செய்து தேர்ந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்து இருக்கிறார். இப்படம் மூலம் அவருக்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது. நாயகி கயல் ஆனந்தி வழக்கமான நாயகியாக வந்து சென்று இருக்கிறார். இவருக்கும் சாந்தனுவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சாந்தனுவின் நண்பர் சஞ்சய் சரவணன் மிக எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் தான் ஒரு அறிமுக நடிகர் என்று உணர்வை தர மறுக்கும்படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவர்களுடன் ஒற்றைக்கை இல்லாமல் நடித்திருக்கும் நடிகர் மிகச் சிறப்பாக நடித்த கவனம் பெற்று இருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பும் வசன உச்சரிப்பும் திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது. மூத்த நடிகர்கள் பிரபு மற்றும் இளவரசு நடிப்பு வழக்கம் போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்களது அனுபவ நடிப்பு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளாக வரும் பி.எல்.தேனப்பன், அருள்தாஸ் ஆகியோர் சூழ்ச்சி செய்யும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'அத்தனை பேர் மத்தியில' பாடல் ஹிட் ரகம். இப்படத்தின் யூஎஸ்பி ஆக இப்பாடல் அமைந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் சிறப்பாக கொடுத்து இப்படத்தின் இரண்டாவது நாயகனாக மாறி இருக்கிறார். இவரது இசையே இப்படத்தின் பிரதான பலமாக மாறி இருக்கிறது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் ராமநாதபுரம் அதை சுற்றியுள்ள கிராமத்தை மிக எதார்த்தமாகவும் ராவாகவும் காட்சிப்படுத்தி படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்திருக்கிறது. லாரன்ஸ் கிஷோரின் கத்திரிகள் சிறப்பாக படத்தை வெட்டி உணர்ச்சிமிக்க காட்சிகளை மிக அழகாக வெளிப்படுத்த உதவி புரிந்துள்ளது.
சொல்ல வந்த மெசேஜை அழுத்தமாக கூறாமல் காதல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியதை கொஞ்சம் தவிர்த்துவிட்டு சமூக அரசியலில் இன்னமும் கவனம் செலுத்தி இருந்தால் இன்னமும் பேசப்படும் படமாக ராவண கோட்டம் மாறி இருக்கும்.
இராவண கோட்டம் - ஒற்றுமைக்கான போராட்டம்!