ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து தேசிய விருது பெற்ற திரைப்படம் அந்தாதுன். அந்தப் படத்தை தற்பொழுது அந்தகன் என்ற பெயரில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் நோக்கில் பிரசாந்த் நடித்து அவருடைய தந்தை தியாகராஜன் ரீமேக் செய்து இயக்கியுள்ள இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றதா, இல்லையா?
பார்வையற்றவராக இருக்கும் பிரசாந்த் ஒரு பியனோ இசை கலைஞராக இருக்கிறார். இவர் சிலருக்கு பியானோ கற்றுக் கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். ஒரு நாள் ஒரு சிறிய விபத்தில் பிரியா ஆனந்த் பிரசாந்தை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் பிறகு பழக்கம் ஏற்பட்டு பிரியா ஆனந்த் தன் தந்தையுடன் நடத்தி வரும் பாரில் பார்வையற்ற பிரசாந்துக்கு இரவு நேரத்தில் பியானோ வாசித்து மகிழ்விக்கும் வேலையை கொடுக்கிறார். அப்பொழுது அந்த பாருக்கு கஸ்டமர் ஆக வரும் முன்னாள் மூத்த நடிகர் கார்த்திக் தனது மனைவி சிம்ரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் செய்யும் விதமாக தனது வீட்டில் பிரைவேட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்தப் பார்ட்டியில் பியானோ வாசிக்க பிரசாந்தை அழைக்கிறார். இதையடுத்து கார்த்திக் வீட்டுக்கு செல்லும் பிரசாந்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போன இடத்தில் நடிகர் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடக்க அதை அவரது மனைவி சிம்ரன் ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் சமுத்திரக்கனி உதவியுடன் கண் தெரியாத பிரசாந்தின் எதிரிலேயே அப்புறப்படுத்துகிறார். இது பார்வையற்றவரான பிரசாந்துக்கு தெரிய வர அவர் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து உண்மையில் பிரசாந்துக்கு அந்த கொலை நடந்தது எப்படி தெரியும்? கொலையாளிகளிடம் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா, இல்லையா? என்பதே அந்தகன் படத்தின் மீதி கதை.
ஏற்கனவே இந்த படம் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அந்த படத்தை பார்த்த ரசிகர்களும் இந்த படத்தை ரசிக்கும் விதத்தில் எடுத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் தியாகராஜன். திரைக்கதையில் சினிமா தனம் இல்லாமல் முடிந்தவரை உண்மையில் ஒரு கொலை நடக்கும் பட்சத்தில் அங்கு நடக்கும் எதார்த்த விஷயங்களை அப்படியே வைத்துக் கொண்டே அதற்கு ஏற்றவாறு யதார்த்த காட்சி அமைப்புகள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக செயற்கை தனமான காட்சிகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் நடக்கும் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் உண்மையில் அந்த இடத்தில் என்ன நடக்குமோ அதே போல் நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல திரில்லிங் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் சற்று ஸ்லோவாக ஸ்டார்ட் ஆகி பிறகு போக போக வேகம் எடுத்து இரண்டாம் பாதியில் இருந்து ஜெட் வேகத்தில் பயணித்து ஒரு சிறப்பான திரில்லர் படம் பார்த்த உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது. இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்த காரணத்தினால் தமிழுக்கு ஏற்றவாறு சில சின்ன சின்ன மைனூட் மாறுதல்களை மட்டும் செய்திருக்கிறார்கள். அது கதையையும் திரைக்கதையும் பெரிதாக டிஸ்டர்ப் செய்யாமல் அமைந்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடித்திருக்கும் பிரசாந்த் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி நடு கடலில் உள்ள நீர் போல் சலனம் இல்லாத அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவருகிறார். கதைக்கு தேவையான ஹீரோயிஸத்தை தனது உணர்ச்சிகள் மூலமே சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தனக்கு இந்த சமயத்தில் எந்த மாதிரியான கதை செட் ஆகுமோ அதற்கு ஏற்றவாறு சரியான ஒரு கதையை தேர்வு செய்து அதற்கு நியாயம் செய்திருக்கிறார். அதேபோல் தனது வழக்கமான ட்ரேட் மார்க் சிரிப்பையும், அழகான பாடி லாங்குவேஜையும் இந்த படத்திலும் கொடுத்து அவரது ரசிகர்களுக்கும் விருந்து கொடுத்திருக்கிறார். இது நடிகர் பிரசாந்துக்கு தனது கரியரில் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. இருந்தும் வருகின்ற காட்சிகள் எல்லாம் கவருகிறார்.
படத்தின் முக்கிய கதாநாயகி சிம்ரன் வழக்கம் போல் தனது ஆளுமையான நடிப்பின் மூலம் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவருக்கு உறுதுணையாக ஒரு பக்கம் சமுத்திரகனி சப்போர்ட்டிங்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் வனிதா விஜயகுமார் சில காட்சிகளே வந்தாலும் கைதட்டல் பெறுகிறார். இன்னொரு பக்கம் கே எஸ் ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு கூட்டணி காமெடியில் சிரிப்பு மூட்டி உள்ளனர். அதேசமயம் இவர்கள் மூன்று பேரும் அடிக்கும் லூட்டியும் சிறப்பாக அமைந்திருக்கிறது. கௌரவத் தோற்றம் போல் நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் அனுபவம் நடிப்பின் மூலம் கவர்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சிறுவன் பூவையார் மனதில் பதிகிறார். மற்றபடி உடன் நடித்த நடிகர்கள் அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கொலை மற்றும் அதனை துப்பறியும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவில் படம் பிரம்மாண்டமாக தெரிகிறது. இந்த படம் ஏதோ சிறிய பட்ஜெட் படமாக இல்லாமல் பெரிய பட்ஜெட் படமாக காட்சியளிக்கிறது. அதற்கு ஒரு சிறப்பான பங்களிப்பை ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கொடுத்திருக்கிறார்.
ஹிந்தி படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருப்பதால் அவை ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்து ஒரு பீல் குட் மர்டர் திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த அந்தகன் கொடுத்திருக்கிறார்.
அந்தகன் - சர்ப்ரைஸ் கிப்ட்!