பிள்ளைகளுக்குள் தகராறு, பிரிவு, சொந்த வீடு ஏலத்தில் மூழ்கிப்போனது போன்ற மன உளைச்சல்களால் மனப்பிறழ்வான அம்மா தவறுதலாக கொல்கத்தாவுக்கு சென்றுவிட, அவரை மகன்கள் பத்திரமாக மீட்டு வந்தார்களா? குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா? என்பதைச் சொல்வதே J.பேபி திரைப்படத்தின் கதை. கடந்த ஆண்டில் ஃபேலிமி என்ற மலையாளத் திரைப்படத்தில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத ஒரு குடும்பத்திலிருக்கும் தாத்தா, காசிக்கு யாத்திரை செல்ல வேண்டுமென விரும்பியதால் யாத்திரைக்கு மொத்தமாகக் கிளம்பும் குடும்பத்தின் பயணத்தை வைத்து நகரும் கதையைப் போலவே இப்படத்திலும் பிரச்சனைக்குரிய அண்ணன் தம்பியின் ரயில் பயணத்தினூடாக கதை விரிகிறது.
நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தையே படமாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. இப்படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தும் பொறுப்பை தன் தோள்மேல் சுமந்து வெற்றி காண்கிறார் லொள்ளு சபா மாறன். தன் தம்பி மீது கோபத்தோடு முறைத்துக் கொண்டும், குடிக்கும் பழக்கத்தோடும் அவர் செய்யும் அலப்பறையால் அவ்வப்போது தியேட்டரே சிரிப்பலையால் நிரம்புகிறது. மிகவும் தன்மையான மகனாக, கணவனாக வலம் வருகிறார் அட்டைகத்தி தினேஷ். கொல்கத்தா நகரில் அம்மாவைக் காணத் தவிப்பதும், தள்ளிப்போவதும் இடையிடையே அண்ணனையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளை வரை நிதானமான நடிப்பை வெளிப்படுத்திய ஊர்வசி, இடைவேளைக்குப் பின் நடிப்புச் சூறாவளியாக கதக்களியே ஆடியிருக்கிறார். இரண்டாவது பாதி முழுக்க ஊர்வசியே தனது நடிப்பால் நிறைத்திருக்கிறார்.
பிள்ளைகள் மீது மட்டுமல்லாது எதிர்ப்படும் அனைத்து மனிதர்கள் மீதும் பாசத்தைப் பொழிவதாகட்டும், பிள்ளைகள் தன்னை மனநலக் காப்பத்தில் தள்ளிவிட நினைக்கிறார்கள், தன்னை குடும்பத்தில் சேர்ப்பதை பாரமாக நினைக்கிறார்கள் என்பதை அறிந்ததும் வெகுண்டெழுந்து பிள்ளைகளையே கல்லால் அடிக்க ஓங்குமளவுக்கு வேறொரு லெவலுக்கு தனது நடிப்பை மாற்றுவதாகட்டும், மனப்பிறழ்வு மனநிலையை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். "எனக்கு ஸ்டாலினை தெரியும்", "எனக்கு ஜெயலலிதாவை தெரியும்" என்றெல்லாம் அவர் உதார் விடுவதும், போலீஸ் பேட்ரோலில் கண்ணயரும் காவலரிடம் ரவுசு காட்டுவதுமாக நம்மை சிரிக்க வைப்பவர், அடுத்த கணமே தனது மனப்பிறழ்வு நிலையை உணர்ந்து வருந்துகையில், விழிகளில் கண்ணீரை வரவழைக்கிறார். மனப்பிறழ்விலும் தன் பிள்ளைகளிடம் நைனா நைனா என்று உருகுகையில் நெகிழ்ச்சியால் விழி நிறைக்கிறார். அப்பப்பா! என்ன மாதிரியான நடிப்புத் திறமை.
இப்படத்தின் நிஜ சம்பவத்தில் கொல்கத்தாவில் அம்மாவைத் தேடி வந்த மகன்களுக்கு உதவிய தமிழரை, அதே கேரக்டராகவே நடிக்க வைத்திருப்பது சிறப்பு. கொல்கத்தாவிலுள்ள காவல்துறை அதிகாரி, பெண்கள் காப்பக காப்பாளர் என வருபவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பிள்ளைகள் ஐவரில் இருவர் தவிர மற்றவர்களைப் புதியவர்களாக நடிக்க வைத்திருப்பது நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வாரிசுகளுக்குள் சண்டையென்றாலும் சரி, மனப்பிறழ்வான தாயாக இருந்தாலும் சரி, மனசு விட்டுப் பேசினால் அனைத்தும் சரியாகும் என்பதை படத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார்கள்.
பா. ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கொல்கத்தா ரயில் நிலையத்தை பருந்துப் பார்வையில் காட்டுவதில் தொடங்கி, கங்கை நதியின் பிரமாண்டத்தையும், கொல்கத்தா நகரின் நெருக்கடியையும் தனது கேமராவில் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். தாயின் தவிப்பையும் தாய்க்கும் பிள்ளைகளுக்குமான பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள வரிகளோடு பாடல்களைப் பின்புலமாகப் பாடவிட்டு காட்சிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. பின்னணியிலும் காட்சியின் கனத்துக்காக நிதானித்தே இசைத்திருக்கிறார். ஒரே காட்சியில் தம்பி புத்திமதி சொல்லி அண்ணன் திருந்திவிடுவது, தம்பியோடு ஒட்டி அமரக்கூட பிடிக்காத அண்ணன், வீட்டில் மோதிரத்தைத் திருடுவது, அக்கா பெண் குழந்தை பெரியவளானதற்கு விசேஷத்தில் கலந்துகொள்ளாமல் செய்முறையை மட்டும் செய்யும் தம்பி போன்ற காட்சிகள் சற்று மிகையாக, நாடகத்தனம் போல் தெரிகின்றன. இதுபோன்ற சின்னச்சின்ன குறைகளையெல்லாம் ஊர்வசியின் அபார நடிப்பு வெளித்தெரியாமல் செய்துவிடுகிறது. வெட்டு, குத்து, ரத்தச் சிதறலில்லாத குடும்பப் படமாக வந்திருப்பதில் திருப்தி. J.பேபியை வரவேற்கலாம்.
J.பேபி - கச்சிதம்
- தெ.சு. கவுதமன்