ஆறு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இடையில் அவரது படங்கள் குறித்த பேச்சு, விவாதம், கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தன. இந்த இடைவெளியில் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அந்த இடைவெளியை நிறப்புகிறதா என்.ஜி.கே (NGK) என்ற நந்த கோபாலன் குமரன்? சூர்யா - செல்வராகவன் என்ற கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இருக்கிறதா?
எம்.டெக். (M.Tech.,) என்விரான்மெண்டல் சயின்ஸ் படித்துவிட்டு சில ஆண்டுகள் அதிக சம்பளம் தரும் வேலை செய்து அதில் ஆத்ம திருப்தி இல்லாமல் வெளியேறி வந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்துகொண்டே தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்யும் எனர்ஜடிக் இளைஞன் என்.ஜி.கே என்ற நந்த கோபாலன் குமரன். ஒரு குடிமகனாக தான் எவ்வளவு முயன்றும் செய்ய முடியாத சில உதவிகளை அரசியலில் அடிமட்டத்தில் இருப்பவரும் கூட எளிதில் சாதிக்க முடிகிறது என்பதை பார்க்கும் அவர் ஒரு கட்டத்தில் அந்த அரசியல் தன்னையே குறிவைக்கும்போது அரசியலில் இறங்க முடிவு செய்கிறார். ஒரு படித்த இளைஞன், அரசியலில் இறங்கி சந்திக்கும் சோதனைகள் என்ன செய்ய முடிந்த சாதனைகள் என்ன என்பதுதான் என்.ஜி.கே.
விவசாயம் + அரசியல் என சமீப கால தமிழ் சினிமா ட்ரெண்டில் கொஞ்சம் செல்வராகவனின் ஃப்ளேவர் சேர்ந்திருக்கிறது. அரசியலில் இறங்கியவுடன் NGK சந்திக்கும் அதிர்ச்சிகள், கட்சியில் சேரும்பொழுது அங்கு நடத்தப்படும் நாடகங்கள், பொய்கள் ஆகியவை நமக்கும் நையாண்டி நெத்தியடி. கட்சியில் சேர்ந்ததிலிருந்து ஏணியில் விறுவிறுவென ஏறுகிறது NGKவின் அரசியல் வாழ்க்கையும் திரைக்கதையும். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார், எதை நோக்கி செல்கிறார் என்ற கேள்வியும் குழப்பமும் நமக்கு ஏற்படுகிறது. அது செல்வராகவனுக்கும் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. சூர்யா - பாலாசிங் காம்பினேஷனில் வரும் சில காட்சிகளிலும் வசனங்களிலும் பாடல்களுக்கு மொத்த மக்கள் கூட்டமும் ஆடுவதிலும் செல்வராகவன் ஸ்டைல். ஆனால், திடீரென தோன்றும் கனவு ஃபாரீன் பாடல், பல மிக மேலோட்டமான காட்சிகள், பாதிப்பு ஏற்படுத்தாத பாத்திரங்கள் என அதிர்ச்சியை கொடுக்கிறார் இயக்குனர்.
சமீப காலங்களில் கட்சிகளில் கார்ப்பரேட் ஆலோசகர்களின் பங்கு என்னவாக இருக்கிறது, அவர்கள் கட்சிகளில் செலுத்தும் ஆதிக்கம் போன்றவற்றை ரகுல் ப்ரீத்தின் காட்சிகள் சொல்கின்றன. சில இடங்களில் மிகைப்படுத்தலும் இருக்கின்றது. என்னதான் படித்த புத்திசாலி இளைஞனாக இருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொண்டராக கட்சியில் இணைந்த NGK, சர சரவென தமிழ்நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்ப்பது, பெரிய தலைவனாக வளர்வது நம்பும்படி காட்சிப்படுத்தப்படவில்லை. சமூக சேவகராக இருக்கும்போதும் அரசியலில் நுழைந்த பின்னரும் அவரின் செயல்பாடுகள் எல்லாம் வெறும் வசனங்களாகவும் ஓரிரு காட்சிகளாகவும் இருப்பது திரைக்கதையை சுவாரசிஸ்யத்தை வெகுவாக குறைக்கிறது.
சூர்யாவுக்கெனவே எழுதப்பட்டதுபோன்ற பாத்திரம். இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர், காதல் ததுந்தும் புதுமாப்பிள்ளை, எம்.எல்.ஏவின் உண்மைத் தொண்டன் என அத்தனை பரிமாணங்களிலும் அசத்துகிறார் சூர்யா. எம்.எல்.ஏ. இளவரசுவிடம் பணிவிடை செய்ய நேரும்போது ஏற்படும் அதிர்ச்சி, குழப்பம் என கலவையான உணர்வுகளை கரெக்டாக வெளிப்படுத்தி நடிப்பின் முதிர்ச்சியை நிறுவியிருக்கிறார். மேடைக்காட்சிகளில் சூர்யாவின் பெர்ஃபார்மன்ஸ் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட். சாய் பல்லவி அழகான மனைவி, செல்லமாக கோபப்படுகிறார், சண்டை போடுகிறார். ஆனால், பெரிய முக்கியத்துவமில்லாமல் இருக்கிறது. அரசியல் ஆலோசகராக கார்ப்ரேட் கன்சல்டன்டாக கடுமையான முகம் காட்டும் ரகுல், நாயகிகளின் நியதிப்படி சூர்யா மீது ஆசை கொள்கிறார். ஒரு கேலிக்குரிய தொண்டராக பாலாசிங்கின் பாத்திரம் மனதில் நிற்கிறது. அதில் அவரது நடிப்பு அனுபவத்தால் மிளிர்கிறது. எம்.எல்.ஏவாக இளவரசு கலவையான கலகல நடிப்பைக் கொடுத்து ரசிக்கவைக்கிறார். பொன்வண்ணன், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் முழுமையாக பயன்படுத்தப்படாத உணர்வு.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை, வித்தியாசமான ரசனையில் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அது வொர்க்-அவுட் ஆகியுள்ளது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கேற்ற வண்ணங்களில் விளையாடுகிறது. கனமான கதைகளை, பாத்திரங்களை ரசிக்கத் தயாராகிவிட்ட ரசிகர்களுக்கு தன் பாணியிலிருந்து மாறி கொஞ்சம் கமர்ஷியலாக எடுத்து செல்வராகவன் எடுத்திருக்கும் இந்தப் படம் சற்றே ஏமாற்றம்தான். சில நல்ல காட்சிகளும் நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு பலமாக இருக்கின்றன.