சில படங்கள் திரைக்கு வருவதற்கு முன்னரே அதுகுறித்த எதிர்பார்ப்பும் ஒருவகை நேர்மறை எண்ணமும் பார்வையாளர்கள் மத்தியிலே ஏற்றப்பட்டிருக்கும். திரைப்பட விழாக்களில் பங்கேற்பதன் மூலமாகவோ விருதுகளின் மூலமாகவோ இல்லை சினிமா பிரபலங்களின் தனிக்காட்சி மூலமாகவோ இவை ஏற்படக்கூடும். அத்தகைய எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் நெடுநல்வாடை பார்வையாளர்களை எத்தகைய மனநிலையுடன் வெளியே அனுப்புகிறது?
ஒரு கிராமத்தில் சமகாலத்தில் துவங்குகிறது கதை. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தன் பேரன் பல வருடங்களாக திரும்பாத ஏக்கத்தில் இருக்கும் கருவாத்தேவருக்கு அதனாலேயே உடல்நிலை குன்றுகிறது. அவருக்கும் பேரனுக்குமான உறவை சொல்வதாக விரிகிறது முன்கதை. வீட்டை எதிர்த்து செய்த திருமணத்தில் தோற்று இரண்டு குழந்தைகளுடன் ஊர் திரும்பும் மகளை கண்ணீருடன் அரவணைத்து ஏற்கிறார் கருவாத்தேவர். ஓடிப்போன தங்கையை ஏற்கக்கூடாது என்று மல்லுக்கட்டுகிறார் கருவாத்தேவரின் மகன். எதிர்ப்பை மீறி மகள் குடும்பத்தையும் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார் கருவாத்தேவர். பேரனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து, அவன் மூலம் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்பியிருக்கும் வேளையில் அவன் காதலிப்பது தெரியவருகிறது. அழைத்து அழுது அட்வைஸ் செய்யும் தாத்தாவின் கண்ணீரில் உருகும் பேரன் காதலை மறக்க நினைக்கிறான்.
பிரிவு, வலி, கண்ணீர் எல்லாம் தாண்டி மீண்டும் இந்த காதல் துளிர்க்கிறது. ஆனால் இப்போது பிரச்சனை பெண்ணின் அண்ணன் ரூபத்திலும் நிலையான வேலை ரூபத்திலும் வருகிறது. வேறு வழியே இல்லாமல் ஓடிப்போன முயலும் காதலர்கள் வாழ்வில் இணைந்தார்களா, வெளிநாட்டிற்கு சென்ற பேரன் திரும்பி வந்தானா, தாத்தா மீண்டும் உடல்நலம் பெற்றாரா என்பதுதான் நெடுநெல்வாடை.
ஒரு பசுமையான, ஈரம் நிறைந்த, உணர்வுகள் மிகுந்த படம் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவம்தான். அந்த அனுபவத்தைத் தர முயன்று ஓரளவு வென்றிருக்கிறார் இயக்குனர் செல்வக்கண்ணன். அப்பா - மகள், தாத்தா - பேரன், தாய் மாமா - மருமகன் என நம் மண்ணுக்குண்டான உறவுகளையும் அதில் இருக்கும் அன்பு, வெறுப்பு, சிக்கல் அனைத்தையும் கையில் எடுத்திருக்கிறார். கையில் எடுத்த விசயத்தை எந்த அளவுக்கு நமக்குக் கடத்தியிருக்கிறார்.
ஆரம்பத்தில் கனமான கதையாக துவங்கும் படம் போகப் போக வழக்கமான காட்சிகளாலும் பழக்கப்பட்ட திருப்பங்களினாலும் தொய்வடைகிறது. உணர்வுகளில் புதிது பழையது இல்லை. ஆனால் அவை உண்டாக்கும் தாக்கம், கனமாக புதிதாக இருக்கவேண்டுமல்லவா? நாயகன் நாயகி இடையே காதல் மலர்வதற்கான தருணங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் போன்றவற்றில் இருக்கும் செயற்கைத்தனம் அதன் பிறகான காட்சிகளில் நம்மை உணர்வுப்பூர்வமாக ஒன்றவிடாமல் தடுக்கிறது.
படத்தின் அடிப்படையான பிரச்சனையாக சொல்லப்படுவது கருவாத்தேவர் குடும்பத்தின் வறுமைதான். ஆனால் அதை உணர்த்துவதற்கான காட்சிகளோ, குறியீடுகளோ, பின்னணிகளோ சரியாக இல்லை. இறுதிக்காட்சிக்கு முன்னால் வரும் தேவையற்ற அந்த சண்டைக்காட்சியும் அதற்கான சூழலுமே கூட குழப்பத்தையும் கேள்வியையுமே உண்டாக்குகிறது. ஆனால் இறுதியில் காதலர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதாய் இருந்த நாளின் இரவில் என்ன நடந்தது என்பது உணர்வாழமிக்க காட்சி. அந்தக் காட்சியின் காரணமும் படமாக்கப்பட்ட விதமும் நடிகர்களின் நடிப்பும் கனகச்சிதமாய் இருந்தது. இரு வேறு துருவங்களில் இருந்து வெளிப்படும் அன்பு, ஒன்று சேர நினைக்கிறது. இன்னொன்று தவிர்க்க நினைக்கிறது. இரண்டின் பின்னால் இருக்கும் காரணமும் அன்புதான். இந்தக் காட்சியில் இருக்கும் இந்த அழகான முரணும் அடர்த்தியும் அசலாகவும் இயல்பாகவும் இருந்தன.
இப்படி தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அன்பின் தேவைகளுக்காக, உறவுகளின் நன்மைகளுக்காகப் பிரிந்துபோன உறவுகள் எத்தனை எத்தனை? அந்த தருணம் எதிர்மறையாக பதிவாகாமல், சூழலின் யதார்த்தங்கள் கோரும் வேறு வழியற்ற முடிவாக நேர்மறையாக பதிவாகியிருப்பது சிறப்பு. காதலின் பிரிவு என்பதை பெரும்பாலும் தவறவிடப்பட்ட தருணங்களாகவே காட்சிப்படுத்தும் தமிழ் சினிமாவில், தேர்ந்தெடுக்கும் கையறு நிலையாக பதியவைத்திருக்கிறது அந்த காட்சி. அதேபோல சேராத காதலை நினைத்து கடைசி வரை தனியே வாழ்வதற்கு மாற்றான ஒரு முடிவை அழகாக விளக்கியதும் சிறப்பு.
ஆனால் அந்தக் காட்சியில் இருந்த ஆழமும் நேர்த்தியும் படமெங்கிலும் இருந்திருந்தால், கதைக்கு அடிப்படையான காதலும் உறவு சிக்கல்களும் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் ஒரு முழுமையான நிறைவான படமாக உருவெடுத்திருக்கும் நெடுநல்வாடை.