தமிழகத்தில் தற்போது அனலாக தகித்துக் கொண்டிருக்கும் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை என அனைத்துமே தொடங்கப்பட்ட பொழுது மக்களுக்கு தேவை என்று கூறி கொண்டுவரப்பட்டவையே. ஆனால், அவற்றின் கழிவுகள், சரியாகப் பராமரிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் மக்களின் உயிரை குடிக்கவும் தயங்குவதில்லை. ஒரு சின்ன வாயு கசிவு கூட தோல் நோய், கேன்சர், வாய் பேச இயலாமை போன்ற நோய்களையும் கண், காது, போன்றவற்றை செயலிழக்கச் செய்யும் வாழ்நாள் வலியையும் தந்து விடுகிறது. நாடு முழுவதும் இது போன்ற ஆபத்தான திட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை தன் பாணியில் படமாக்கி அதன் வீரியம் காட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முயன்றிருக்கும் படமே 'மெர்குரி'.
கூகிள் எர்த் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் பாதரச (மெர்குரி) கழிவினால் பாதிக்கப்பட்ட மக்களில் உயிர் தப்பிய காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளான இந்துஜா, சனந்த் ரெட்டி, அனிஷ் பத்மநாபன், தீபக் பரமேஷ், சஷாங்க், ஐந்து பேரும் சிறப்புப் பள்ளியிலேயே படித்து வளர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு இந்துஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக செல்கின்றனர். அங்கு ஒரு தனிமையான இடத்திற்கு செல்லும் பொழுது திகிலான முறையில் பிரபுதேவா இவர்கள் வாழ்வில் நுழைகிறார். பின் நடப்பது தான் வசனங்களே இல்லாமல் மௌனத்தாலேயே பயம், கோபம், ஆற்றாமை என அத்தனை உணர்வுகளையும் நமக்குக் கடத்த முயன்றுள்ள மெர்குரி.
கண் பார்வையற்றவராக வரும் பிரபுதேவா தனது பாவனைகளிலேயே மிரள வைத்துள்ளார். தன் வாயில் டக், டக் என்று சத்தம் கொடுத்து கொண்டே அவர் செய்யும் ஒவ்வொரு அசைவிலும் ரசிக்க வைத்திருக்கிறார். பார்வை இல்லாவிட்டாலும் செவியால் உணர்ந்து பிரதிபலிக்கும் இடங்களில் நம்மை பயமுறுத்தியுள்ளார். அதே போல் நாயகி இந்துஜா, காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு தான் வாய் பேச முடியவில்லை என்றாலும், சொல்ல நினைப்பதை செய்கையால் அற்புதமாக சொல்லி புரிய வைப்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். சனந்த் மற்றும் அவரின் நண்பர்கள் ஒவ்வொரு காட்சியிலும் பலவிதமான உணர்ச்சிகளை ஒரு சேர வெளிப்படுத்தி ரசிக்க வைக்கின்றனர். அதுவே படத்திற்கு வலுவாகவும் அமைந்துள்ளது. சில காட்சிகளிலேயே வந்தாலும் ரம்யா நம்பீசன் மனதில் பதிகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடக்கும் மௌனப் போராட்டமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சினிமா என்னும் கலையின் அனைத்து சாத்தியங்களையும் முயன்று பார்க்கும் அவரது ஆர்வத்தின் முதல் படியாக இதை மௌனப் படமாக எடுத்ததற்கு, அவரே தயாரித்திருக்கும் தைரியத்துக்கு பாராட்டுகள். திகில் படங்களில் பொதுவாக கதாபாத்திரங்கள் கத்தும் சத்தத்தை வைத்து பயமுறுத்துவதைத் தாண்டி மௌனத்தில் அதை விட அதிக திகில் அனுபவம் உண்டு என்ற மௌனத்தின் வலிமையைத் தனது பாணியில் காட்டி தனது திறமையை மற்றுமொருமுறை நிரூபித்திருக்கிறார். வசனம் இல்லாத இடைவெளியை சந்தோஷ் நாராயணனின் இசையும் குணால் ரஞ்சனின் ஒலி வடிவமைப்பும் நிரப்பியிருக்கின்றன, சில இடங்களில் தேவைக்கதிகமாக.
திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அவ்வுளவு அழகு. குறிப்பாக நாயகன் காதலை வெளிப்படுத்துகிற இடத்தில் பனியின் நிழலில் வரும் ரொமான்ஸ் காட்சி அதற்கு சான்று. மலைப்பகுதி, பனி அடர்ந்த இடம், தொழிற்சாலை என இவை சம்பந்தபட்ட அனைத்து காட்சிகளிலும் எதிர்பாராத கோணங்களைக் காட்டி அசத்தியிருக்கிறார். படத்தின் வண்ணமும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. படத்தின் கடைசியில் வரும் 'மன்னித்து விடு... நாம் தவறான போரில் சண்டையிட்டு கொண்டோம்' என்ற வரிகளிலும், 'corporate earth' என்ற வாக்கியத்தில் இருந்து (ate earth) என்ற வாக்கியமாக மாற்றிய இடத்திலும் கார்த்திக் சுப்புராஜ் என்ற நல்ல வசனகர்த்தா எட்டிப் பார்க்கிறார்.
வசனங்கள் இல்லாத மௌன படம் எடுப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. கடைசியாக தமிழில் 'பேசும் படம்' மூலம் நிகழ்ந்தது. அப்படி எடுப்பது என்று முடிவு செய்த பின் படத்தின் கதையில் அதற்கான தேவையை மிக வலுவாக பதிவு செய்ய வேண்டும். இந்தப் படத்திலும் அது இருந்தாலும் சற்று பலவீனமாகி மௌனப் படம் எடுக்க வேண்டுமென்ற நோக்கம் பெரிதாகத் தெரிகிறது. மேலும் மௌனப் படத்தில் காட்சிகளால் கதையை முழுமையாகப் புரிய வைக்க முயற்சித்திருக்கலாம். அதீத இசை, ஓரிரு இடத்தில் சப்-டைட்டில் என்பதெல்லாம் அந்த அனுபவத்தை சற்று குறைக்கின்றன. கதை, வழக்கமானதுதான், பேசப்பட்டிருக்கும் விஷயம் நிகழ் காலப் பிரச்சனைகளோடு இருப்பது ஆறுதல்.
மெர்குரி - மௌனம் பல விஷயங்களை ஒரே நேரத்தில் பேசுகிறது, சற்று சத்தமாக, ஆனால் அழுத்தம் குறைவாக.