ஜீவி, எட்டு தோட்டாக்கள், C/O காதல் போன்ற ரசிகர்களிடம் கவனம் பெற்ற படங்களைக் கொடுத்த வளர்ந்து வரும் நடிகர் வெற்றி தற்பொழுது சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான மெமரீஸ் படம் மூலம் களத்தில் குதித்திருக்கிறார். முந்தைய படங்களைப் போல் சிக்கலான கதை அமைப்பைக் கொண்ட இந்த மெமரீஸ் திரைப்படம் வரவேற்பு பெற்றதா இல்லையா?
மூன்று கொலைகள் செய்த ஒருவனை அவனை வைத்தே அக்கொலைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு வித்தியாசமான கதையைக் கொண்டு சைக்காலஜிக்கல் திரில்லராக வெளியாகி உள்ளது மெமரீஸ் திரைப்படம். ஒரு கதையாக பார்க்கும் பொழுது வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இது தென்பட்டாலும் திரைக்கதையாக பார்க்கும் பொழுது பல்வேறு குழப்பங்களுக்கு இடையே கதை நகர்ந்து கடைசி 15 நிமிடங்களில் பல்வேறு குழப்பங்களுக்கு பதில் கூறும் வகையில் படம் அமைந்துள்ளது. ஒரு சிம்பிளான கதையை சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி, கதைக்குள் பல்வேறு பிளாஷ்பேக்குகளை உள்ளடக்கி அதன் மூலம் பல முடிச்சுகளைப் போட்டு, அதை படத்தின் இறுதிக் கட்டத்தில் ஒவ்வொன்றாக அவிழ்த்து வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கின்றனர் இயக்குநர்கள் பிரவீன் & ஷ்யாம். அதேபோல் படம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்பாராத திருப்பங்களை வைத்து படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்துள்ளனர். இருந்தும் படம் முழுவதும் ஒரு குழப்பமான நிலை சுற்றி சுற்றி வருவதையும் தவிர்க்க முடியவில்லை. சில பல காட்சிகள் ரிப்பீட்டாக வருவது மட்டும் ஆங்காங்கே அயற்சியை கொடுத்துள்ளது.
கவனிக்கத்தக்க வகையில் படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகர் வெற்றி இப்படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக் கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் பல்வேறு கெட்டப்புகள் ஒவ்வொரு கெட்டப்புகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகளை மற்றும் தனது உடல் மொழிகளை மாற்றி நடித்து கவனம் பெற்றுள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் டயானா, பார்வதி ஆகியோர். இவர்கள் இருவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசை சரியாக பயன்படுத்தி இருக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ரமேஷ் திலக் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். இவருடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் பேரோடி கதையின் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இவரின் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு உதவி புரிந்துள்ளது. மற்றும் ஆர்.என்.ஆர் மனோகர் உட்பட பலர் அவரவருக்கான வேலையை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
ஒளிப்பதிவாளர்கள் அர்மோ & கிரண் ஆகியோர் இரவு நேரக் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் பின்னணி இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. படத்தில் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களை வைத்து, குறிப்பாக ஒருவரின் நினைவுகளை அழித்துவிட்டு, வேறு ஒரு நினைவுகளை 17 மணி நேரம் பொருத்த முடியும் என்ற வித்தியாசமான கதையை தேர்வு செய்த இயக்குநர் அதை சற்று குழப்பம் நிறைந்த திரைக்கதையோடு பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்கும் படி கூறியிருக்கிறார்.
மெமரீஸ் - புது முயற்சி!