நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதயம் முரளி வகையறா ஸ்கூல் காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. டிபிகல் 90ஸ் கிட்ஸ் இன் காதலை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் 90ஸ் கிட்ஸ் உட்பட இக்கால 2கே கிட்ஸ்யையும் திருப்தி செய்ததா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 2008 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் வேறு வேறு வேலைக்கு சென்று செட்டில் ஆகி விடுகின்றனர். 2008ல் இவர்கள் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இந்த தேர்வை ரத்து செய்ய கோரி அந்த சமயம் வழக்கு தொடுக்கப்படுகிறது. இதையடுத்து 10 வருடங்கள் கழித்து அந்த மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என தீர்ப்பு வருகிறது. இதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் படுகின்றனர். இதற்கிடையே சிறுவயது முதல் பள்ளி தோழி மலினாவை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகன் ரக்ஷன். கடைசி வரை தன் தோழியிடம் காதலை கூறாமலேயே இதயம் முரளி போல் இருந்து விடுகிறார். தற்பொழுது இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஆனந்தமாகும் அவர் எப்படியாவது தன் காதலை இந்த தடவையாவது பள்ளிக்கு சென்று சொல்லி விட வேண்டும் என பழைய மாணவர்களோடு அவரும் அதே பள்ளிக்கு மீண்டும் பொதுத் தேர்வு எழுத செல்கின்றார். போன இடத்தில் ரக்ஷன் தன் காதலை வெளிப்படுத்தினாரா, இல்லையா? இவர்களின் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நாம் சிறுவயதில் பள்ளியில் செய்த அத்தனை விஷயங்களும் இந்தப் படத்திலும் இருக்கிறது. குறும்பு, காதல், விளையாட்டு, படிப்பு, சோகம், அழுகை, நட்பு என அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் கொடுத்து நம் நாஸ்டாலஜிக் பீலிங்சை தட்டி எழுப்பி உசுப்பேற்றி இருக்கிறார் இயக்குநர் ராக்கோ யோகேந்திரன். ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய கதையாக இருந்தாலும், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பள்ளி நாட்களில் அரங்கேறிய முதல் காதலை இந்த படத்திலும் எதார்த்தமாக காண்பித்து பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு கலங்கடிக்க செய்திருக்கிறார் இயக்குநர் யோகேந்திரன். இருந்தும் அவை ஓரளவு ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
என்னதான் இப்படம் நமக்கு பழைய நினைவுகளைத் தூண்டினாலும் அவை பெரும்பாலும் கலகலப்பாக ரசிக்கும்படி இல்லாமல் ஏதோ போகிற போக்கில் ஓரளவு ரசிக்கும்படி இருப்பது சற்று அயற்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக சிரிக்க வைக்கும் காட்சிகளைத் தவிர நெகிழ வைக்கும் காட்சிகள் படத்தில் குறைவாக இருப்பது சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒரு பள்ளிப் பருவ காதல் கதை என்றால் அதில் நெகிழ வைக்கும் காட்சிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த படம் நன்றாக வரவேற்பைப் பெறும். அந்த வகையில் இந்தப் படத்தில் அது சற்றே மிஸ் ஆகி இருக்கிறது. மற்றபடி ஒரு ஃபீல் குட் பள்ளிப் பருவ காதல் படமாக இப்படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு அமைந்திருக்கிறது.
நாயகன் ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பள்ளிப் பருவ மாணவனாக வரும் காட்சிகளில் வெட்கத்துடன் கலந்த பயத்துடன் இருக்கும் மாணவனின் முக பாவங்களையும் வசன உச்சரிவுகளையும் அழகாக நம்முள் கடத்தி இருக்கிறார். இருந்தும் பின் நாட்களில் வரும் வளர்ந்த ரக்ஷன் கதாபாத்திரத்தில் இன்னும் கூட நடிப்பு தேவைப்படுகிறது. நாயகி மலினா வழக்கமான கதாநாயகியாக வந்து சென்றிருக்கிறார். இவருக்கு அதிகம் வேலை இல்லை மௌனமாகவே வருகிறார் கொஞ்சமாக வசனம் பேசி விட்டு சென்று விடுகிறார். ஆனால் பார்ப்பதற்கு அழகு பொம்மையாக இருப்பது பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாயகனின் நண்பனாக வரும் விஜய் டிவி தீனா காமெடிக்கு பொறுப்பேற்று அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். இவருடன் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிராங்ஸ்டர் ராகுலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இறுதி கட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்து நம்மை நெகிழ வைத்து விடுகிறார்.
இவர்களுடன் நடித்த மற்ற மாணவர்களும் சிறப்பாக நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவாக கொடுத்திருக்கின்றனர். நாயகியுடன் நடித்த ஆஷிகா, நட்டாலியா, ஸ்வேதா ஆகியோர் சிறப்பாக நடித்து கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கின்றனர். அவர் அவருக்கு கிடைத்த கேப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கின்றனர். பி.டி மாஸ்டராக வரும் முனீஸ்காந்த் நல்ல குணச்சித்திர நடிப்பு. ஆரம்பத்தில் மாணவர்களிடம் அதிரடி காட்டும் இவர் போக போக நட்பாகப் பழகி நெகிழ வைத்து இருக்கிறார். மேத்ஸ் டீச்சராக வரும் அகிலா நல்ல தேர்வு. மற்றபடி உடன் நடித்த மற்ற மாணவர்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
கோபி துரைசாமி ஒளிப்பதிவில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சச்சின் வாரியர் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.
நாம் எத்தனையோ பள்ளிப் பருவ காதல் கதைகளை பார்த்திருப்போம் அதிலிருந்து இது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சற்றே வேறுபட்டு புதிய கோணத்தில் ஒரு பழைய காதலை ஓரளவுக்கு நன்றாக கூறியிருக்கிறது.
மறக்குமா நெஞ்சம் - நாஸ்டாலஜிக் நினைவுகள்!