பிரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன், மண்டேலா படம் மூலம் திரையுலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த வெற்றி இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் கைகோர்த்து உள்ள படம் மாவீரன். மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பக் கைகோர்த்து இருக்கும் இந்தக் கூட்டணி வெற்றிக் கனியைப் பறித்ததா, இல்லையா?
மிகவும் பயந்தாங்கோலியாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு தினசரி பத்திரிகையில் சேர்ந்து தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு தொடர் போல் மாவீரன் என்ற ஒரு படக்கதை தொடரை அந்த பத்திரிகையில் வரைந்து எழுதுகிறார். இதனிடையே கூவம் நதி ஓரம் குடிசை போட்டு வசித்துக் கொண்டிருக்கும் நாயகனின் குடும்பத்தை அங்கிருந்து காலி செய்து விட்டு ஒரு பெரிய ஹவுசிங் போர்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறச் செய்கிறார் குடிசை மாற்று வாரிய அமைச்சர் மிஷ்கின். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் தரமற்ற நிலையில் கட்டித் தரப்படுகிறது. எந்த சுவரும் சரியில்லாமல் இடிந்து இடிந்து விழுகிறது. இதை யாரும் எதிர்த்துக் கேட்கத் தயங்குகின்ற சமயத்தில் தன் படக் கதையில் வரும் மாவீரன் கதையில் வரும் நாயகன் மாவீரன் போல் அநியாயத்தைத் தட்டிக் கேட்க நினைக்கிறார் கோழையான சிவகார்த்திகேயன்.
அந்த சமயம் பார்த்து அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். அப்பொழுது அவர் தலையில் பலமாக அடிபட்டு உயிருக்குப் போராடுகின்ற சமயத்தில் மீண்டும் மாவீரனாக உயிர்த்தெழுகிறார். அவருக்கு அடிக்கடி மேலே இருந்து ஒரு குரல் கேட்கிறது. அந்தக் குரலைக் கேட்டுவிட்டு வெகுண்டு எழும் அவர், அங்கு நடக்கும் தவறுகளைத் தன் படக் கதையில் வருவது போல் தட்டிக் கேட்டாரா, இல்லையா? அடுக்கு மாடிக் குடியிருப்பின் நிலை என்னவானது? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பல்சை மிகச் சரியாகப் பிடித்து அதற்கேற்றார் போல் கமர்சியல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படத்தைக் கொடுத்துள்ளது சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் கூட்டணி. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு என்ன விஷயங்கள் பிடிக்குமோ அதை எல்லாம் மிகச் சரியாகச் செய்து கனகச்சிதமாகத் திரைக்கதை அமைத்து வெற்றிக்கனியைப் பறித்து இருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்து ரசிக்கும் ரசிகனின் மனநிலையைச் சரியாகக் கனித்து அதற்கேற்றார் போல் திரைக்கதையும் அமைத்து ஒவ்வொரு காட்சிக்கு இடையேயும் சரியான கலவையில் நகைச்சுவையையும், சென்டிமென்ட் காட்சிகளையும், ஆக்சன் காட்சிகளையும் திணித்துச் சரியான வகையில் பொழுதுபோக்குப் படமாக இப்படத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உண்மைக் கதையைக் கதைக் கருவாக எடுத்துக்கொண்டு அதனுள் கமர்சியல் அம்சங்களைச் சரியான அளவில் புகுத்தித் தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆங்காங்கே கலகலப்பான காட்சிகளை வைத்து கதையை நேர்த்தியாக நகர்த்தி இருக்கின்றனர். நாயகனுக்கு மேலே இருந்து ஒரு அசரீரி கேட்பது போல் காட்சிகளை அமைத்து அதைச் சரிவர காட்சியும்படுத்தி அதில் பில்டப்புகளையும் அழகாக உட்புகுத்தி அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். இதற்கெல்லாம் அதிகம் மெனக்கெடல் தேவை அதைச் சரியான வகையில் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.
நாயகன் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் மூலம் எதை விட்டாரோ அதைச் சரியான நேரத்தில் மீண்டும் இழுத்துப் பிடித்து இருக்கிறார் மாவீரன் படம் மூலம். போன படத்தில் எந்தெந்த தவறுகளை அவர் செய்தாரோ அதை இப்படத்தில் சரியாகக் கையாண்டு அந்தத் தவறுகளைத் திருத்தி இருக்கிறார். அதேபோல் தன் ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருப்பது இப்படத்தில் நன்றாகத் தெரிந்தது. அதைச் சரியாகச் செய்து படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். மற்றபடி தன்னுடைய வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் நாயகி அதிதி சங்கர். படத்தில் அவரது கேரக்டர் பெயருக்கு நிலா எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். அதற்கேற்றார் போல் அவ்வப்போது மட்டும் படத்தில் தோன்றிவிட்டு மறைந்து விடுகிறார். படம் பெரும்பாலும் அமாவாசையில் எடுத்து இருப்பார்கள் போல் இருக்கிறது. அதனால் என்னவோ அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்.
வண்ணாரப்பேட்டையில் பாடலை மிகச் சிறப்பாகப் பாடி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் காமெடி மூலம் பார்ப்பவர்களை இந்தத் தடவை ஏமாற்றாமல் சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு. இவர் படத்தில் சற்றே அடக்கி வாசித்து இருப்பது இப்படத்துக்கு பிளஸ் ஆக மாறி அதுவே பார்ப்பவர்களை கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறது. இவரது டைமிங் காமெடிகள் படத்திற்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது. படத்தில் வில்லனாக வரும் மிஷ்கின் தன் சிறப்பான நடிப்பால் பார்ப்பவர்களிடம் கைத்தட்டல் பெற்று இருக்கிறார். தன் நண்பரிடம் அடி வாங்கும் காட்சிகளிலும் சரி, நாயகனை அடிக்கும் காட்சிகளிலும் சரி சரியான அரசியல்வாதியாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது உருட்டலான பார்வையும், சத்தமாகப் பேசும் வசனங்களும் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
இவரது நண்பராக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சுனில் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். தமிழில் இவருக்கு நல்ல அறிமுகம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்திருக்கும் சரிதா, சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்து ரசிக்க வைத்துள்ளார். எந்த ஒரு இடத்திலும் பயம் காட்டாத எதார்த்த தாயை அப்படியே கண்முன் நிறுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு கதை ஓட்டத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருக்கும் மோனிஷா பிளஸ்சி தனக்குக் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் அனைவரும் அவரவர் வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். தன் குரலை மட்டும் இப்படத்திற்காகக் கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார் நடிகர் விஜய் சேதுபதி. முதல் பாதி இன்டர்வல் காட்சியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை இவரது குரல் படத்தைத் தாங்கிப் பிடிக்க உதவி செய்துள்ளது.
விது அய்யன்னாவின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடியிருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளும் நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார். பரத் சங்கர் இசையில் வண்ணாரப்பேட்டையில் பாடல் துள்ளல் ரகம். மற்ற பாடல்கள் சற்று ஓகேவாக இருந்தாலும் பின்னணி இசையில் சிறப்பான ஒலி அமைப்பைக் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக மாஸ் காட்டும் காட்சிகளில் தன் இசை மூலம் மாஸ் காட்டியிருக்கிறார். மாவீரன் படத்திற்கு இவர் ஒரு நல்ல தேர்வு.
விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக சிவகார்த்திகேயன் எடுத்திருக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தாலும் படத்தின் நீளத்தைச் சற்றுக் குறைத்து இருக்கலாம். முதல் பாதியே வெகு நேரம் ஓடுகிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் சில இடங்கள் வேகத் தடைகள் நிறைந்திருப்பதாலும் ஆங்காங்கே சற்று அயர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேபோல் ஒரு அமைச்சராக இருப்பவருக்கு எந்த ஒரு போலீஸ் பாதுகாப்பும் இப்படத்தில் இல்லை. அதேபோல் படம் முழுவதும் அவ்வளவு அடிதடிகள் நடக்கிறது. அப்பொழுதும் ஒரு போலீஸ் கூட தடுப்பதற்கு இல்லை. தமிழ் சினிமாவில் வழக்கமாக இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஒரு பெண் குழந்தை மாட்டிக்கொள்வது போன்ற கிரிஞ்ச் காட்சிகள் இப்படத்திலும் இடம் பெறுகிறது. இந்த தமிழ் சினிமாவில் வரும் அம்மாக்களுக்கு வேற வேலையே இல்லையா?
எப்பொழுதும் தன் குழந்தையை எரிகின்ற வீட்டில் அல்லது இடிபாடுகளில் சிக்கி இருக்கும் வீடுகளில் அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடி விடுகின்றனர். இதையடுத்து அவர்களைப் போய் நாயகன் காப்பாற்ற வேண்டும். அதேபோல் படத்தில் பிரச்சனையை சொன்ன இயக்குநர் அதற்கான தீர்வை ஏன் கூறவில்லை? இதுபோன்ற சில பல லாஜிக் மீறல்களாகக் கருதப்படும் காட்சி அமைப்புகள் இப்படத்தில் இருந்தாலும் அவையெல்லாம் கலகலப்பான திரைக்கதை மூலம் மறக்கடிக்கப்பட்டு இருப்பதால் இப்படம் வெற்றி பெற்றுக் கரை சேர்ந்திருக்கிறது.
மாவீரன் - பயந்தாங்கோலி இல்லை?