முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் தனது கடைசிப் படமாக மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் மூலம் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி விவாதங்களை உருவாக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி சில பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் எந்த அளவு ஈர்த்துள்ளது...?
சேலம் மாவட்டத்தின் காசிபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வடிவேலு, தான் ஒரு சாதாரண தொண்டனாக இருக்கும் பொழுது ஒரு சாதிய மோதலில் தன் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பாதிப்பு ஏற்பட்டும், அதற்கு நீதி கிடைக்காமல் அமைதி காக்கிறார். அதிலிருந்து 10 வருடங்களாக உதயநிதி ஸ்டாலின் தன் தந்தை வடிவேலுவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இன்றி வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இன்ஸ்டியூட் ஒன்றை நடத்திக் கொண்டு அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கிளாஸ்மேட்டான கீர்த்தி சுரேஷுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் காதல் ஏற்படுகிறது.
அந்த சமயம் அந்த தொகுதியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் பகத் ஃபாஸில் கட்சிக்காரர்களால் கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டியூட் அடித்து நொறுக்கப்படுகிறது. ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுவார்த்தைக்கு போகும் இடத்தில் நடக்கும் சம்பவத்தால் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் பகத் ஃபாசிலை எதிர்க்கின்றனர். பின்னர் இவர்களுக்குள் மோதல் வெடிக்கிறது. இந்த மோதல் தேர்தல் களம் வரை நீடிக்கிறது. இதையடுத்து இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள்? தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதே மாமன்னன் படத்தின் மீதிக் கதை.
எப்பொழுதும் சமூக நீதியை வலியுறுத்தும் தரமான படங்களைக் கொடுத்து ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படத்தை அரசியல் கலந்த சமூக நீதி படமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் கதையும் கதைக் களத்தையும் தாண்டி கதாபாத்திர தேர்வு மிகச் சிறப்பாக அமைந்து இப்படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. முதல் பாதி நான் லீனியர் திரைக்கதை மூலம் சாதிய மோதல்களையும், அரசியல் சூழ்நிலைகளையும், அதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், புதைக்கப்படும் சமூக நீதியையும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாம் பாதி இதையெல்லாம் தாண்டி தேர்தல் களத்தில் படம் இறங்குகிறது. ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த பகத்துக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வடிவேலுக்குமான மோதலும் இதனால் இவர்கள் சந்திக்கும் தேர்தலையும் இரண்டாம் பாதி முழுக்க காட்சிப்படுத்தி யூகிக்கக்கூடிய திரைக்கதை மூலம் படத்தை சமூக நீதியோடு முடித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய தேர்தல் காட்சிகளும் யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ் காட்சியும் இரண்டாம் பாதியில் வருவதாலும், ஆங்காங்கே படம் முழுவதும் படர்ந்து இருக்கும் தொய்வு நிறைந்த அயற்சியான காட்சிகளும் படத்தை சற்றே பார்வையாளர்களிடமிருந்து தள்ளி வைக்கிறது. ஆனாலும் வடிவேலுவின் ஸ்கிரீன் பிரசன்ஸ், பகத் ஃபாஸிலின் அசுரத்தனமான நடிப்பும் படத்தை தூண் போல் காத்து நின்று கரை சேர்த்திருக்கிறது. இவர்கள் இருவரும் முழு படத்தையும் தங்கள் தோள்மேல் சுமந்து இருக்கின்றனர்.
நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனக்கு கொடுத்த ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்க வேண்டிய இடங்களில் அவருக்கான டிரேட் மார்க் நடிப்பையும் சில முக்கியமான காட்சிகளில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் போல் சிறப்பான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக இல்லாமல் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று அதைத் தரமாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். இவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது.
படத்தின் நாயகன் மாமன்னன் கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு, இப்படத்தின் ஆணி வேராக அமைந்து ஒற்றை மனிதராகப் புகுந்து விளையாடி இருக்கிறார். இதுவரை காமெடி காட்சிகளில் நாம் பார்த்து சிரித்து, சிலாகித்து ரசித்த வடிவேலு இப்படத்தில் வேறு ஒரு முகத்தைக் காட்டி உலகத்தரம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். காட்சிக்கு காட்சி இவரின் முகபாவனைகளும், வசன உச்சரிப்பும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் குரலாக ஒலித்து அதுவே அவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் கொடுக்கும்படியாக இவரது கதாபாத்திரம் அமைந்து கைத்தட்டல் பெற்று இருக்கிறது. குறிப்பாக இன்டர்வல் மற்றும் பகத்துடன் மோதும் காட்சியில் மாஸ் காட்டியிருக்கிறார் வடிவேல். சரி சம பலத்துடன் மோதி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் வில்லன் பகத் பாசில். ஒரு பக்கம் வடிவேலு காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்யும் பொழுது அதேசமயம், தான் வரும் காட்சிகளை தன் ரசிகர்களை குஷிப்படுத்தும்படியாக அசுரத்தனமான நடிப்பை மிக அசால்டாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகளில் ஆரம்பித்து கை, கால், மூக்கு, கண், வாய், உதடு, உடம்பு என அனைத்தையும் நடிக்க வைத்து வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களைப் பதறச் செய்து வெறுப்புணர்ச்சியை உண்டாக்கி நடிப்பில் பல பேரைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். இவரும் வடிவேலும் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தைக் கரை சேர்த்திருக்கின்றனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், சுனில் ரெட்டி, அழகம் பெருமாள், ரவீனா ரவி, கீதா கைலாசம், விஜயகுமார் ஆகியோர் அவரவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து இருக்கின்றனர். எமோஷனலான காட்சிகளை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ராசா கண்ணு, நெஞ்சமே, கொடி பறக்கிற காலம் பாடல்கள் மூலம் ஆல்ரெடி ஹிட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தன் பின்னணி இசை மூலமும் படத்திற்கு உயிர் கொடுத்து மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து இருக்கிறார். சின்ன சின்ன எமோஷனல் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் எங்கு இசை வேண்டுமோ அங்கு இசையைக் கொடுத்து, எங்கு பாடல்கள் வேண்டுமோ அங்கு பாடல்களைக் கொடுத்து இப்படத்தை உலகத் தரம் வாய்ந்த ஒரு படமாக தன் இசை மூலம் மாற்றி ரசிகர்களிடம் மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
படத்தில் போலீசுக்கு அதிக வேலை இல்லை. போகிற போக்கில் ஒரு எம்எல்ஏவை அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் நினைக்கின்ற நேரத்தில் எல்லாம் தனது தாக்குதலைத் தொடுத்து விட முடிகிறது. எம்எல்ஏவை சுற்றி அவருக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்குத் தனித்து விடப்பட்ட எம்எல்ஏ-வாகவே இருக்கிறார். இதுபோன்ற பல்வேறு லாஜிக் மீறல்கள் இப்படத்தில் தென்பட்டாலும் வடிவேலு, பகத் ஃபாசில் இருவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ், அசுரத்தனமான நடிப்பும் இப்படத்தைத் தூக்கி நிறுத்தி ரசிகர்களிடையே கைத்தட்டல் பெற்றுப் படத்தைக் கரை சேர்த்திருக்கிறது. மேலும் படத்தின் நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம்.
மாமன்னன் - ஆர்ப்பாட்டம் இல்லாதவன்!