Skip to main content

மீண்டும் ஒரு பிளாக் பஸ்டரா? - ‘லவ் டுடே’ விமர்சனம்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

 Love Today Review

 

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி தானே ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள படம் லவ் டுடே. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இப்படம் அதே வரவேற்பை பெற்றதா...?

 

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப்பும், பிராமண பெண்மணியான இவனாவும் காதலிக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்தும், புரிந்தும் வைத்துக் கொண்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் காதல் விஷயம் இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வர அவர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்ட ஒரு கண்டிஷன் போடுகிறார்.

 

பிரதீப்பின் செல்போனை இவானாவிடமும், இவானாவின் செல்போனை பிரதீப்பிடமும் ஒரு நாள் முழுவதும் வைத்துகொள்ள கட்டளையிடுகிறார் சத்யராஜ்.  இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கின்றனர். பிறகு   ஒருவரை பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும் செல்போனில் உள்ள விஷயங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து அவர்களுக்குள் இருந்த காதல் என்னவானது? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.   

 

ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக தெரியவில்லை என்றாலும், திரைக்கதையின் வழியாக எந்த மாதிரியான கதையையும் சுவாரஸ்யமாக சொல்லிவிடலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

 

இன்றைய இளைஞர்களின் பல்சை சரியாக கணித்தது மட்டுமல்லாமல் அதை சரியாகப் பிடித்து சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் தியேட்டரில் கை தட்டல்களை அள்ளி இருக்கிறது இந்த லவ் டுடே திரைப்படம். குறிப்பாக காதல் காட்சிகளிலும் சரி, குடும்ப சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, காமெடி காட்சிகளிலும் சரி, சரியான அளவில் சரியான காட்சி அமைப்புகள் மூலம் தியேட்டரை கைதட்டல்கள் மூலம் அதிரச் செய்துள்ளார் இயக்குனர் பிரதீப்.

 

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு  சிறப்பான திரைக்கதை மூலம் படம் வேகம் எடுத்து ஜெட் போல் பயணித்து நிறைவான கிளைமாக்ஸ் காட்சியோடு முடிவடைந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு காட்சிக்கு இடையே நடக்கும் டிரான்ஸ்சிஷனை சிறப்பாக அமைத்து ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி சிறப்பாக அமைத்து காட்சிகளுக்குள் இருக்கும் அழுத்தங்களையும் உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டி பீல் குட் ரொமாண்டிக் காமெடி மூவியாக  இப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

 

நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், பாக்யராஜ் போன்றவர்களை மிக்ஸ் செய்து நடித்து புதுமுகம் என்ற உணர்வை தர மறுக்கும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தின் இயக்குநரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன். சின்ன சின்ன முக பாவனைகள் மூலமும் வசன உச்சரிப்பு மூலமும் அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி தியேட்டரில் கைதட்டல் பெற்று ரசிகர்களிடையே கவனமும் பெற்றுள்ளார். இவருக்கு இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

 

நாயகன் பிரதீப்புக்கு இணையாக சரியான டப் கொடுத்து நடித்திருக்கிறார் நாயகி இவானா. எந்த இடத்தில் அனுதாபமான நடிப்பு வேண்டுமோ அந்த இடத்தில் அனுதாபத்தையும், எந்த இடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அழகாக அந்த நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை நாச்சியார் படத்திற்குப் பிறகு கவனம் பெற்றுள்ளார்.

 

இவரின் எதார்த்தமான நடிப்பும் அழகான வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இவானாவின் தந்தையாக வரும் சத்யராஜ் தனது ட்ரெட் மார்க்கான நக்கல் நையாண்டி கலந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார். இவரைப் போலவே பிரதீப்பின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா காட்சிக்கு காட்சி கைத்தட்டல் பெறும் வகையில் நடித்து பல இடங்களில் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறார். இவரின் அனுபவ நடிப்பு காட்சிகளுக்கு வேகம் சேர்த்து உள்ளது.

 

பிரதீப்பின் அக்காவாக நடித்திருக்கும் ரவீனா மற்றும் மாமாவாக நடித்திருக்கும் யோகி பாபு ஆகியோர் இன்னொரு பக்கம் சிறப்பான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். கூடவே நண்பர்களாக நடித்திருக்கும் ஆஜித், கதிர், பாரத் ஆகியோர் தனது பங்குக்கு அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்றிருக்கின்றனர்.

 

பாடல்களை காட்டிலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு காட்சிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த உணர்ச்சிகளை தன் இசை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி தியேட்டரில் மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றுள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காதல், குடும்பம், காமெடி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

முதல் படத்தில் ஜெயம் ரவி போன்ற பெரிய ஹீரோவை வைத்து படத்தை இயக்கி, அதில்  வெற்றி பெற்ற ஒரு இயக்குநர், தனது இரண்டாவது படத்தில் தன்னையே கதாநாயகன் ஆக்கி அதில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இதை ஒரு எளிய கதை மூலம் சிறப்பாக திரைக்கதை அமைத்து, அதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி செய்து மிகப்பெரிய டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து காட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

 

லவ் டுடே - பிளாக் பஸ்டர்!

 

சார்ந்த செய்திகள்