ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வந்தவுடன் அது எந்த அளவு நம் மனதில் பதிகின்றது, எவ்வுளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அப்படத்தின் வெற்றியை நிர்ணயித்து விடலாம். அப்படியான படங்கள்தான் காலம் தாண்டி பேசப்படும் படங்களாக அமையும். அதில் நடித்த நடிகர்களும் நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறி பெரும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவர். அப்படி பெறுபவர்களின் தொழில் வாழ்க்கை மிகவும் வண்ணமயமாக இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்வின் அனைத்து பக்கமும் வண்ணமயமாகவே இருக்குமா என்பதை சொல்ல வருகிறாள் இந்த 'நடிகையர் திலகம்'.
1950, 60களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற சாவித்ரி தனது 46 வயதில் உயிரிழந்தார். 1980களில் ஒரு பத்திரிகையின் நிருபராக வரும் சமந்தா நடிகை சாவித்திரியை பற்றி கட்டுரை எழுத ஆரம்பிக்கிறார். அவருக்கு உதவியாக சமந்தாவை காதலிக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா வருகிறார். இருவரும் சேர்ந்து நடிகையின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொண்டு வருகிறார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சாவித்ரி, நடனம், நாடகம் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பிறகு சினிமாவில் எப்படி நுழைந்தார், அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை, நடிகையாக பயணத்தைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் ஜெமினி கணேசனை காதலித்துத் திருமணம் செய்துகொண்டது, எதிர்ப்பை சமாளித்து, முன்னேறியது, உச்ச நட்சத்திரமாக உயர்ந்தது, பின் வாழ்க்கை கட்டத்தில் சறுக்கி, பிரிவு, தோல்வி, வறுமை, போதை என ஒரு நடிகையின் முழு வாழ்வை சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
படத்தில் நடித்த சமந்தா தனக்கு கொடுத்த மதுரவாணி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அக்காலத்து பிராமண பெண்ணை அழகாக நம் கண் முன் நிறுத்துகிறார். விஜய் தேவரகொண்டா படம் முழுவதும் சமந்தா கூடவே வருகிறார். அவரை மேடம், மேடம் என்று அழைத்தவாரே வரும் அவரின் அலட்டல் இல்லாத நடிப்பு அட்ராக்ட்டிவ். இவர் ஒரு தலையாக சமந்தாவை காதலிக்க, அந்தக் காதலை சொல்ல முடியாமல் திணறும் போது, ஜெமினி கணேசன் சாவித்ரியின் வாழ்க்கையில் வரும் காதலை போலவே, தனது காதலை சமந்தாவிடம் வெளிப்படுத்த முயற்சிக்கும் காட்சி அற்புதம். சாவித்திரியின் பெரியாப்பாவாக வரும் ராஜேந்திர பிரசாத், அல்லூரி சக்கரபாணியாக வரும் பிரகாஷ் ராஜ், மற்றும் பானுப்ரியா, ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர், ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் நிற்கின்றனர்.
இவர்களெல்லாம் ஒரு புறம் இருக்க சாவித்திரியாக வாழ்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு வரி பத்தாது என்பதே உண்மை. இப்படத்தின் ஆரம்பகட்டத்தில் பலரும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்த கதாபத்திரத்தையும், அவருடைய தோற்றத்தையும் நோக்கி எழுந்த விமர்சனங்களுக்கு இப்படத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். நடிகை சாவித்திரி முதன்முதலில் சென்னைக்கு வந்து படவாய்ப்பு தேட ஆரம்பிப்பதில் ஆரம்பித்து, அவர் கடைசியில் கோமாவில் இருந்து உயிர் இழக்கும் வரையிலான ஒவ்வொரு காலகட்டத்தின் பிரதிபலிப்பையும் தன் திறமையான நடிப்பால் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் இதுவரை எந்த படத்திலும் வெளிப்படுத்தாத திறமையை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். காட்சிக்கு காட்சி முகம் மற்றும் உடல் பாவனைகளிலும், வசன உச்சரிப்பிலும் கை தட்டல்களை அள்ளியுள்ளார்.
சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் வரும் ஜெமினிகணேசனின் கதாபாத்திரத்தின் தன்மையை தெரிந்துகொண்டு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட துல்கர் சல்மானின் தைரியத்தை முதலில் பாராட்டவேண்டும். படம் சாவித்திரியை சுற்றியே நகர்ந்தாலும் ஜெமினியாக வரும் துல்கர் சல்மானின் நடிப்பு படத்தை இன்னொரு திசையில் ரசிக்கவைக்கிறது. படத்தில் சர்வசாதாரணமாக நடித்து காதல் மன்னனாகவே வாழ்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் நடிப்புடன் இவரின் நடிப்பும் சேர்ந்து ஜொலித்துள்ளது. அந்த அளவிற்கு இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்துள்ளனர்.
என்னதான் சில கற்பனை காட்சிகளோடு இப்படத்தை எடுத்திருந்தாலும் பெரும்பாலான உண்மை சம்பவங்களின் காட்சிகள் மூலம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அயர்ச்சி இல்லாமல் அற்புதமாக நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். வாழ்க்கைப்படம் என்பதனால் சாவித்திரியின் பெருமையை மட்டும் பேசாமல் ஏற்ற தாழ்வுகளையும் ரொம்ப துணிச்சலாக சொல்லியிருக்கிறார். மேலும், இது என்னதான் சாவித்திரி வாழ்க்கைப் படமாக இருந்தாலும் அதில் சமந்தா - விஜய் தேவரகொண்டா காதலையும் ஒருபக்கம் காட்சிப்படுத்தி, அவர்கள் வாழ்வில் சாவித்திரியின் வாழ்க்கை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இவர்களை சேர்த்து வைக்கிறது என்பதை திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாவும், திரைக்கதையில் இயன்ற வேகத்தோடும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். மேலும் படத்தின் மேக்கிங்கும், அதற்காக படக்குழுவினர் கையாண்ட யுக்திகளும் பிரமிக்க வைப்பதோடு, அவர்கள் எவ்வளவு பெரிய உழைப்பை கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் உணர வைக்கிறது. இப்படி இந்த படத்தை இயக்குனர் சிறப்பாக கையாண்ட விதத்திற்கே ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
கவுரங், இந்திராக்ஷி பட்நாயக் மற்றும் அர்ச்சனா ராவ்வின் ஆடை வடிவமைப்பும், ஒப்பனையும் படத்திற்கு உறுதுணை. நடிப்பால் பாதி சாவித்ரியாகும் கீர்த்தி சுரேஷிற்கு மீதியை உடை, மேக்கப் ஆகியவை கொடுக்கின்றன. இவர்களின் வெளிப்பாட்டில் கீர்த்தி சுரேஷை அப்படியே சாவித்திரியாக நம் கண் முன் நிறுத்துகிறார்கள். கலை இயக்குனர் அவினாஷ் கொல்லா பழைய விஜயா வாஹினி ஸ்டுடியோ, பரணி ஸ்டுடியோ, பழைய சென்னை என்று படத்திற்காக போடப்பட்ட செட்கள் மூலம் அக்காலகட்டத்தை நம் கண் முன் பிரம்மாண்டமாக நிறுத்தி மிரட்டியிருக்கிறார். படத்திற்கு மிக பெரிய பலமாகவும் அமைந்துள்ளது.
<
பிரெஞ்சு நாட்டு ஒளிப்பதிவாளரான டேனி சாலோ பயன்படுத்தியிருக்கும் லைட்டிங்கும், கொடுத்திருக்கும் கலர் டோனும், பீரியட் படம் பார்க்கும் உணர்வை அளிக்காமல் அந்த காலக்கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்வது போல இருக்கின்றது. படத்தில் வரும் கருப்பு வெள்ளை காட்சிகளிலும் கூட ஒவ்வொரு காட்சியையும் அழகாக்கியுள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜெ.மேயரின் பின்னணி இசை அந்த காலகட்டத்தையும் நம்மை வாழ வைத்துவிடுகிறது. படத்தில் வரும் மவுன மனதிலே, தந்தாய் பாடல்கள் மனதை வருடுகின்றன. இப்படி இசையும், ஒளிப்பதிவும் அழகாக ஒன்று கூடி ஏதோ பழைய சாவித்ரி படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுத்து விடுகிறது. படத்தில் தமிழை விட தெலுங்கின் வாடை அதிகமாக வீசுவது, ஒரு குறை. சாவித்ரியின் வாழ்க்கையை மாற்றிய படங்கள் என்று ஒரு சில படங்களின் படப்பிடிப்பை காட்டும்போது தெலுங்குப் படங்களையே அதிகமாக காட்டியிருப்பது சற்று நெருடல்.
'நடிகையர் திலகம்' - ஒரு குறிப்பிடத்தக்க வாழ்வுக்கு பெருமைப்படத்தக்க மரியாதை.