Skip to main content

சிங்கிள்ஸ் இல்லாத கும்பல் சண்டை ஜெயித்ததா? - ‘லியோ’ விமர்சனம்!

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

leo movie review

 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்திருக்கும் படம் லியோ. இந்தப் படம் அறிவித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி வந்த நிலையில், இன்று அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லியோ படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது, ட்ரெய்லர் வெளியீட்டின் பொழுது தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது, படத்திற்கு அதிகாலை காட்சி கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு ஹைப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் லியோ படம் எந்த அளவு அந்த ஹைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

 

காஷ்மீரில் தன் மனைவி த்ரிஷா மற்றும் ஒரு மகன், மகளோடு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய், ஒரு காபி ஷாப் வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்த ஊரில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டரின் ரவுடி கும்பல் திருட்டில் ஈடுபட்டு, பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்யுடன் மோத நேர்கிறது. அந்த மோதலில் விஜய் அடித்து துவம்சம் செய்து விடுகிறார். இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவுகிறது.

 

இதைக் கேள்விப்பட்டு, இறந்ததாகக் கூறப்படும் ‘லியோ’ விஜய் குழுவான அவரது தந்தை சஞ்சய் தத், சித்தப்பா அர்ஜுன் ஆகியோர் விஜய்யைத் தேடி காஷ்மீர் வருகின்றனர். வந்த இடத்தில் கேங்ஸ்டர் லியோ விஜய் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு, காபி ஷாப் வைத்திருக்கும் பார்த்திபன் விஜய்யை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆனால் பார்த்திபன் விஜய்யோ தான் லியோ இல்லை என மறுக்கிறார். அதை நம்ப மறுக்கும் லியோ விஜய்யின் தந்தைகள் பார்த்திபன் விஜய் டபுல் கேம் ஆடுகிறார் என எண்ணி அவருக்கு மிகுந்த குடைச்சல் கொடுக்கின்றனர். இதையடுத்து உண்மையில் லியோ விஜய் தான் பார்த்திபன் விஜய்யா? அல்லது பார்த்திபன் விஜய் வேறு ஒரு ஆளா? விஜய்யின் உண்மை முகம் என்ன என்பதே லியோ படத்தின் மீதி கதை.

 

இது ஒரு கதையாக பார்க்கும் பொழுது நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய தெறி, பாட்ஷா உள்ளிட்ட படங்களின் கதைகளைப் பிரதிபலிக்கும் படியாக இருந்தாலும் தன்னுடைய டிரேட் மார்க் திரைக்கதை யுக்திகள் மூலம் அதற்கு ஒரு புது வடிவம் கொடுத்து ரசிகர்களை மீண்டும் ஒருமுறை குஷிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் பாதி சற்று மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் எடுத்து நிறைவாக ஹைப்புடன் முடிந்து, இரண்டாம் பாதி மீண்டும் மெதுவாக நகர்ந்து ஆங்காங்கே சில வேகத் தடைகளோடு மீண்டும் கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வேகம் எடுத்து நிறைவாக எல்சியு கனெக்டோடு முடிந்துள்ளது.

 

படத்தின் திரைக்கதையில் வரும் மாஸ் எலிமெண்ட்ஸ்களை காட்டிலும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாகத் தேவையில்லாத இடங்களில் மாஸ் காட்சிகளை புகுத்தாமல் நல்ல நடிப்பு மிகுந்த அழுத்தமான காட்சிகளை புகுத்தி குடும்ப ரசிகர்களையும் திருப்திப்படுத்தி அதே சமயம் தேவை உள்ள இடங்களில் மாஸ் எலிமெண்ட்ஸ்களை கூட்டி ரசிகர்களையும் ஒருசேர திருப்திபடுத்த முயற்சி செய்து இருக்கிறார். அந்த முயற்சியில் முழுதாக வெற்றி பெறவில்லை என்றாலும் நிறைவான வெற்றியை பெற்றிருக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் ஆங்காங்கே சற்று தொய்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இவர்கள் கொடுத்த பில்டப்புகளுக்கு ஏற்ப இப்படத்தை இன்னமும் கூட சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்சன் விஜய்யைக் காட்டிலும் உணர்வுப்பூர்வமான விஜய் இந்தப் படத்தில் நன்றாக மிளிர்கிறார். பரபரக்கும் சண்டைக் காட்சிகளைக் காட்டிலும் சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத பஞ்ச் வசனங்கள் எதுவும் பேசாமல் முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி கைதட்டல் பெற்று இருக்கிறார் விஜய். வழக்கமான கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா வழக்கமான வேலையை செய்யாமல் படம் முழுவதும் வந்து படத்திற்கு வலு சேர்க்கும் படியான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கும் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி மீண்டும் ஒருமுறை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

 

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கின்றனர். சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் அவரவருக்கான கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாக செய்து இப்படத்தை பிரம்மாண்டமான ஒரு படமாக காட்ட உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்யுடன் படம் முழுவதும் பயணிக்கும் படியான கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு எதிர்பார்க்காத கேரக்டரில் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்திருக்கிறார் மடோனா செபஸ்டின். 

 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் லியோ சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லியோ சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் கேமரா ஆங்கிள்களை சிறப்பாக காட்டி ஒரு ஹாலிவுட் பட உணர்வை இப்படத்திற்கு கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதேபோல் கழுதைப்புலி வரும் காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இப்படத்தின் அடுத்த ஹீரோவாக இருக்கும் அனிருத் எப்பொழுதும் போல் சிறப்பான இசையை கொடுத்து இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். பாடல்களை காட்டிலும் வழக்கம்போல் பின்னணி இசை சிறப்பாக கொடுத்து மிரட்டி இருக்கிறார். இவரது பின்னணி இசை ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இன்னும் கூட கத்திரியை உபயோகப்படுத்தி படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

 

படம் பூஜை போட்ட நாளிலிருந்து இன்று வரை இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்றால் சற்று சந்தேகமே..? இருந்தும் விஜய் ரசிகர்களுக்கு என்ன மாஸ் வேண்டுமோ அதை சிறப்பாக கொடுத்ததற்கும், அதே போல் லோகேஷ் கனகராஜிடம் என்ன ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த எல்சியு கனெக்ட் இந்த படத்தில் இருப்பது இந்த படத்திற்கு ஒரு பிளஸ் ஆக மாறி பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி ஒரு மினிமம் கேரன்டி ஹிட் படமாக இந்த லியோ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

 

லியோ - பில்டப்  மட்டுமே ஸ்ட்ராங்க்!  

 

 

சார்ந்த செய்திகள்