இரும்புத்திரை படத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களாகவே கொடுத்து கொண்டிருக்கும் விஷால் வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படம் காலை வாரியதா? அல்லது கல்லா கட்டியதா?
போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் விஷால் ஒரு பாலியல் கொடுமை கேசில் தப்பான நபரை தண்டித்ததற்காக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பின்பு சுனைனா உதவியோடு போலீஸ் டிஎஸ்பி பிரபுவின் ரெகமெண்டேஷனில் விஷாலுக்கு மீண்டும் வேலை கிடைக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறப் போகும் பிரபு வில்லன் ரமணாவை ஒரு கேசில் தண்டிப்பதற்காக விஷாலிடம் உதவி கேட்கிறார். லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆன விஷால் பிரபுவின் ஆணைக்கிணங்க வில்லன் ரமணாவை லாடம் கட்டுகிறார். இதன்பின் பிரபு வெளிநாடு சென்றுவிட, வில்லன் குரூப் விஷாலை தண்டிக்க அவரை வலை வீசி தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் வில்லன் குரூப்பிடம் விஷாலும் அவரது மகனும் மாட்டிக் கொள்கின்றனர். இதை அடுத்து விஷால் அவர்களிடம் இருந்து தன் மகனைக் காப்பாற்றி தானும் தப்பித்தாரா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அரதப்பழசான ஒரு கதையை கொஞ்சம் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து வேறு ஒரு வடிவத்தில் தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத்குமார். முதல் பாதி குடும்பம், சென்டிமென்ட், திரில்லர், ஆக்ஷன் காட்சி என படம் சற்று சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவெளிக்குப் பிறகு ஒரே இடத்தில் படம் மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்து முடியாமல் அங்கேயே முடிந்து விடுகிறது.
முதல் பாதி முழுவதும் சரியான கலவையில் சுவாரசியமான எலிமென்ட்ஸ்களை தொகுத்து கொடுத்த இயக்குநர் இரண்டாம் பாதியில் ஒரே ஒரு கட்டடத்திற்கு உள்ளேயே படம் முழுவதும் நடக்கும் படி செய்து அதில் சுவாரசியத்தை கொடுக்கத் தவறி இருக்கிறார். படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளே அதிகமாக இருந்தது ஓரளவுக்கு மேல் நமக்கு சலிப்பு தட்டுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் முழுவதும் வெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு நடுவில் வைத்துள்ள சென்டிமென்ட் காட்சிகள் ஏனோ அழுத்தம் இல்லாமல் நம்மை வந்தடைய மறுத்துள்ளது.
அப்பா, மகன் சென்டிமென்ட் காட்சிகள் என்னதான் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தாலும் அது நமக்கு மனதளவில் நெகிழ்ச்சியை கொடுக்காதது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் சலிப்பை கொடுக்கும் அதீத ஆக்ஷன் காட்சிகளும், மனதில் ஒட்டாத சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பாதகமாக அமைந்து அயற்சியை கொடுத்துள்ளது. ஒரு கான்ஸ்டபிள் எப்படி வில்லன்களை எதிர்கொள்கிறார் என்ற ஓரளவு புதுமையான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதை அதேபோல் ஓரளவு புதுமையான திரைக்கதை மூலம் கொடுத்திருந்தால் இந்த படம் கரை சேர்ந்திருக்கும்.
ஆக்ஷன் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என தனக்கு கொடுத்த ஸ்பேஸில் புகுந்து விளையாடி இருக்கிறார் நடிகர் விஷால். ஆனால் கதை தேடல்களில் இன்னமும் கவனமாக இருந்திருக்கலாம். தான் மட்டுமே நன்றாக நடித்து நன்றாக ஆக்ஷன் காட்சிகளில் பர்ஃபாமன்ஸ் செய்தால் படம் ஓடிவிடும் என்று தப்பு கணக்கு போட்டு இருப்பது அவருக்கு இன்னொரு தோல்வியை கொடுத்திருக்கிறது. அவர் என்னதான் விழுந்து விழுந்து நடித்திருந்தாலும் ஒரு படமாக பார்க்கும் பொழுது அவை நம் மனதில் ஒட்ட மறுத்து இருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான கதாநாயகியாக வந்து சென்று இருக்கிறார் சுனைனா. படத்தில் இவருக்கான ஸ்பேஸ் மிகவும் குறைவு. தனக்கு கொடுத்த இடத்தை எந்த அளவு நிரப்ப முடியுமோ அதை செய்து விட்டு சென்றிருக்கிறார். விஷாலின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சிறப்பான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முனீஸ்காந்த், ஏ. வெங்கடேஷ், பிரபு, தலைவாசல் விஜய், ஆகியோர் அவரவருக்கான வேலையை செய்துள்ளனர். வில்லனாக மிரட்டி இருக்கும் ரமணா முகபாவனைகளிலேயே நம்மை மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். இவருக்கு அதிக வசனங்கள் இல்லை என்றாலும் நடை உடை பாவனைகள் மூலம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். அதேபோல் அவரது அப்பாவாக நடித்திருக்கும் நடிகரும் வழக்கமான வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார்.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதியில் வரும் கட்டடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளும் ஓரளவு தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை நன்று. இப்படத்தை ஓரளவு ரசிக்க முடிவது என்றால் அது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையால் மட்டுமே. வழக்கம்போல் எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு இசை தேவையோ அதை தரமாக கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து உள்ளார்.
தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் விஷால் ஓரளவு பழைய கதையை தேர்ந்தெடுத்து அதில் கொஞ்சம் புதுமையான விஷயங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதை புதிய வடிவத்தில் கொடுக்க முயற்சி செய்து ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படமும் முந்தைய படங்களைப் போல் அவருக்கு காலை வாரி இருக்கிறது. கதை தேர்வில் விஷாலுக்கு இன்னமும் கவனம் தேவை.
லத்தி - பவர் குறைவு!