சூதுகவ்வும், மூடர்கூடம் போன்று டார்க் ஹியூமர் ஜானரில் வெகுஜன ரசிகனையும் மகிழ்விக்க முயற்சி செய்திருக்கும் 'ஓடு ராஜா ஓடு' ஓட்டத்தில் வென்றதா?
வீட்டோட கணவராக வரும் குரு சோமசுந்தரம் தன் மனைவி லட்சுமி பிரியா 'விஸ்வரூபம்' படம் பார்ப்பதற்காக செட்டாப் பாக்ஸ் வாங்கி வர தனது போதை நண்பர் பீட்டருடன் வெளியில் செல்கிறார். வழியில் பீட்டரின் முதலாளி கஜபதியிடம் மாட்டும் இவர்கள் ஏற்கனவே பீட்டர் வாங்கிய கடனுக்காக கையில் இருக்கும் பணத்தை இழக்கிறார்கள். கஜபதி இவர்களை இன்னொரு வேலைக்கு அனுப்ப, அந்த வேலை என்ன ஆனது, இவர்கள் வந்த வேலை என்ன ஆனது, 'ஓடு ராஜா ஓடு' என ஓடுமளவுக்கு என்ன ஆகிறது என்பதே படம். இடையில் நாசர், சிம்ரன், ஆனந்த் சாமி என எல்லா திசைகளிலும் ஒரு டஜன் பாத்திரங்களுக்கிடையே நடக்கும் டார்க் காமெடி.
தவறுதலாக ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் இடத்திலும், மனைவியுடனான காட்சிகளிலும் என ஆங்காங்கே மட்டும் தெரிகிறார் 'ஜோக்கர்' குரு சோமசுந்தரம். மேரியாக வரும் ஆஷிகாவின் வசன உச்சரிப்பும், நடிப்பும் நன்று. 'நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னுதான்' என ஆஷிகா சொல்லும் காட்சியில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. குரு சோமசுந்தரத்தின் மனைவியாக வரும் 'லக்ஷ்மி' குறும்பட புகழ் லட்சுமி பிரியா சந்திரமவுலி தனக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக முத்தம் கொடுத்த சமயத்தில் தாடையை உடைத்துக்கொண்டதாக லட்சுமி பிரியா செய்யும் செய்முறை விளக்கம் கைதட்டல்களை அள்ளுகிறது. நாசர், சிம்ரன், சோனா, பேபி ஹரினி, மாஸ்டர் ராகுல் என படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் பங்கைத் தந்திருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதையை குழப்பங்கள் திருப்பங்கள் கலந்து அதே சமயம் ரசிக்கும்படியாகவும் சொல்ல முயன்று ஓரளவு வென்றிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜதின் ஷங்கர் ராஜ் மற்றும் நிஷாந்த் ரவீந்திரன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபத்திரத்திற்கும் கொடுக்கும் புனை பெயர்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன. வீட்டோட கணவன், அன்புள்ள அரிப்பு, போதை மாமி, துணை மாப்பிள்ளை, ஒப்புக்கு சப்பான்ஸ், பேண்டு சட்டை கேங்கு, வேஷ்டி சட்டை கேங்கு என ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி கொடுத்து கவர்கிறார்கள். ஆனால், இந்த அளவு காமெடி படம் முழுவதும் தொடரவில்லை. இயக்குனரே படத்தொகுப்பாளராக இருந்து காட்சிக்குக் காட்சி ஏகப்பட்ட இடத்தில் வெட்டி விளையாடியுள்ளது சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே சில இடங்களில் ரசிக்கவும் வைத்துள்ளது. சில போல்டான கவர்ச்சி காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருப்பது சில இடங்களில் ரசிக்கவும், சில இடங்களில் முகம் சுழிக்கவும் வைக்கிறது.
டோஷ் நந்தாவின் பின்னணி இசை . ஜதின் மற்றும் சுனிலின் கேமராவில் காட்சிக்கு காட்சி வேகம் கூட்டியிருக்கிறது. 'ஓடு ராஜா ஓடு' - டார்க் காமெடி பிரியர்களுக்கு.