வணக்கம் சென்னை, காளி படங்களுக்கு பிறகு இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ் பேப்பர் ராக்கெட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கம் என்பதாலும் multi-starrer சீரிஸ் என்பதாலும் இதன்மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை இந்த வெப்சீரிஸ் பூர்த்தி செய்ததா?
தொழிலதிபராக இருக்கும் காளிதாஸ் ஜெயராமின் தந்தை இறந்து விடுகிறார். தந்தை உயிருடன் இருக்கும் போது அவருடன் சரியாக நேரம் செலவிடவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார் காளிதாஸ். இதனை சரிகட்டும் விதமாக தன் நண்பன் காளி வெங்கட் தந்தையான சின்னிஜெயந்த்தை அவர் ஆசைப்படி ஒரு காப்பகத்தில் சேர்க்கிறார். அங்கு மனநல மருத்துவராக இருக்கும் பூர்ணிமா பாக்யராஜின் கவுன்சிலிங்கிற்கு செல்கிறார் காளிதாஸ். அவர் அங்கு ஏற்கனவே பல பிரச்சனைகளுக்காக கவுன்சிலிங்கில் கலந்துகொண்டிருக்கும் தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன், கௌரி கிஷன், ரேணுகா, நிர்மல் பாலாழி ஆகியோருடன் நட்பாகிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிறது. அந்த ஆசைகளை நிறைவேற்ற காளிதாஸ் அவர்களையெல்லாம் டூருக்கு கூட்டிச் செல்கிறார். போன இடத்தில் இவர்களின் ஆசை நிறைவேறியதா? இவர்களுக்கான பிரச்சனை சரி செய்யப்பட்டதா? காளிதாஸ் குற்ற உணர்ச்சி என்னவானது? என்பதே ஏழு எபிசோடுகளாக விரியும் பேப்பர் ராக்கெட் சீரிஸின் மீதி கதை.
வெப் சீரிஸ் என்றாலே மிகவும் டார்க் ஆகவும், அடிதடி வன்முறை உடனும், திரில்லர் அல்லது ஹாரர் பாணியிலும் வெளியாகி வரும் நிலையில், இவற்றுக்கு மத்தியில் ஒரு ஃபீல் குட் வெப்சீரிஸை இயக்கி கைத்தட்டல் பெற்றுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படியாக இந்த சீரீஸை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி ஒவ்வொரு எபிசோடுகளிலும் ஒவ்வொரு எமோஷன்களை கடத்தி பார்ப்பவர்களை கதையோடு ஒன்றிப்போக வைக்கிறார். ஒவ்வொரு மனிதனும் மரணம் என்ற ஒன்றை அனுபவித்தே ஆகவேண்டும். அந்த மரணத்தை நாம் நெருங்கும் தருவாயில், அது குறித்த பயம் இல்லாமல், எப்படி ஒரு பிறப்பை நாம் வரவேற்கிறோமோ, அதேபோல் மரணத்தையும் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம் என்ற ஒரு கருத்தை கூறியிருக்கும் கிருத்திகா உதயநிதி அதை இன்னும்கூட வேகமான திரைக்கதை மூலம் கூறியிருக்கலாம். ஒவ்வொரு எபிசோடும் கொஞ்சம் பொறுமையாகவே நகர்கிறது என்றாலும் ஆங்காங்கே வரக்கூடிய காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஒவ்வொரு எபிசோடுக்குள்ளும் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை இன்னும் கூட அழுத்தமான காட்சிகளுடன் கூடிய வேகமான திரைக்கதையுடன் அமைந்திருந்தால் இன்னமும் கூட இந்த சீரியஸ் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி கதைக்கருவும் சொல்ல வந்த கருத்தும் பார்ப்பவர்களுக்கு சிக்கலின்றி சென்றடைவது இந்த வெப்சீரிஸின் பிளஸ்.
நாயகனாக வரும் காளிதாஸ் ஜெயராம் எதார்த்தமான நடிப்பை எளிமையாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். கதைத் தேர்வு ஆகட்டும், காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது ஆகட்டும், வசன உச்சரிப்பு ஆகட்டும், உடல் மொழியாகட்டும் அனைத்திலும் ஒரு தேர்ந்த நடிகரின் நடிப்பை அழகாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்தி படத்துக்கு உயிரூட்டி உள்ளார். நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளார். அதேபோல் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேணுகா, முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கருணாகரன், கௌரி கிஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஜி.எம் குமார், சின்னி ஜெயந்த், காளி வெங்கட் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கைத்தட்டல் பெற்றுள்ளனர். இதில் முக்கியமாக உடல் நிலை பாதிக்கபட்ட கேரக்டரில் நடித்திருக்கும் நிர்மல் பாலாஜி இவர்கள் அனைவருக்கும் மத்தியில் தனித்து தெரிகிறார். இவரின் வெகுளித்தனமான எதார்த்த நடிப்பும், நளினமான வசன உச்சரிப்பும் அழகாக அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
இது ஒரு டிராவல் படம் என்பதால் கதாப்பாத்திரங்கள் சுற்றுலா செல்லும் இடங்களை எல்லாம் மிக அழகாகவும், மண் மனம் மாறாதபடியும், மிக நேர்த்தியாக படம் பிடித்து அந்த ஊர்களுக்கே நம்மை கூட்டி சென்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன். இவரது காட்சி அமைப்புகள் பெரும் பலமாக அமைந்துள்ளது. சைமன் கே கிங் இசையில் சேரநாட்டு பாடல் மனதை வருடுகிறது. அதே போல் இவரது பின்னணி இசை பல்வேறு இடங்களில் பார்ப்பவர்களை பரவசப்படுத்தி உள்ளது. படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் தேவையான இடங்களிலெல்லாம் சரியான அளவில் கத்திரி போட்டு கவனம் பெற்றுள்ளார்.
ஓடிடிக்கு சென்சார் இல்லாத காரணத்தினால் தற்போது உள்ள சூழலில் அடல்ட் கண்டன்டுகளோடு வெளியாகும் சீரிஸ்களின் மத்தியில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படியான ஒரு வெப் சீரிஸாக இது உருவானதற்கே இதை கண்டிப்பாக கண்டுகளிக்கலாம்.
பேப்பர் ராக்கெட் - நெகிழ்ச்சியான பயணம்!