ஒரு கொலை, அதில் சம்பந்தப்படும் நாயகன். அவனை சந்தேகப்படும் ஒரு காவல்துறை அதிகாரி. இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். இந்த சுவாரசியமான களத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம் கொலைகாரன். 2008ஆம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களிடையே மகத்தான பாராட்டை பெற்ற ஜப்பானியத் திரைப்படம் 'சஸ்பெக்ட் எக்ஸ்'. அந்தப் படத்திற்கு அடிப்படையாக இருந்த ‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக் எக்ஸ்’ எனும் நாவலை அதிகாரப்பூர்வமாக தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் கொலைகாரன். (இதை அறிவிக்கும் ஸ்லைட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் இடம்பெறத் தவறி, அடுத்தடுத்த காட்சிகளில் சேர்க்கப்பட்டுள்ளது - இந்த நேர்மைக்கு பாராட்டுகள்)
ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார் பிரபாகரன். அவரது ஃப்ளாட்டிற்கு எதிர் ஃப்ளாட்டில் வசிக்கும் தாரிணியும் அவரது தாயும் ஒரு சிக்கலில் மாட்டப்போக, அவர்களுக்கு உதவ முன்வருகிறார் பிரபாகரன். அந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன் மூவரையும் சந்தேகிக்க, இவர்களுக்கு இடையேயான விறுவிறு ஆட்டத்தையும் அத்தனை முடிச்சுகளுக்கான பதிலையும் பல திருப்பங்களுடன் சொல்கிறது கொலைகாரன்.
பிரபாகரனாக விஜய் ஆன்டனி. தொடர் மசாலா படங்களுக்குப் பிறகு ஒரு தரமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். முந்தைய பல படங்களில் பார்த்த, பெரிய அளவில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இறுக்கமாகவே இருக்கும் கதாப்பாத்திரம். அதை செம்மையாக செய்திருக்கிறார். ஆனால் காதல், சிரிப்பு, அழுகை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களில் இன்னும் தடுமாறவே செய்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் அவருக்கு பழக்கப்பட்ட போலீஸ் கதாப்பாத்திரத்தை அதே மிடுக்கோடும் கத்திப் பார்வையோடும் செய்திருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களில் மனதில் நிற்பது நாசர் மட்டுமே.
படத்தின் பலம் நேர்த்தியான திரைக்கதையும் இயக்கமும். அடுத்தடுத்து வரும் சின்ன சின்ன திருப்பங்களும், அதை சுற்றி இறுக்கமாக பின்னப்படும் முடிச்சுகளும் சுவாரசியத்தை கூட்டுகின்றன. ஒரு சிறிய தடயம் அடுத்தடுத்த திருப்பங்களுக்கு இட்டுச் செல்வதும், அதை அடிப்படையாக வைத்து ஒரு புத்திசாலித்தனமான ஆட்டம் ஆடப்பட்டிருப்பதும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இந்த விறுவிறுப்பும் என்ன நடந்திருக்கும் எனும் எதிர்பார்ப்பும் தான் படத்தை இறுக்கப் பிடித்து நகர்த்திச் செல்கிறது.
ஆனால் படத்தின் பெரும் பலவீனம் இதேபோன்ற கதையை, திரைக்கதையை, சம்பவங்களை வெகு சமீபத்தில் எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு எழுவது. இதற்கு முக்கிய காரணம் கொலைகாரன் திரைப்படத்தில் நாம் பார்க்கும் சம்பவங்கள் அத்தனையும், முக்கியமான திருப்பங்கள் உட்பட, த்ரிஷ்யம்/பாபநாசம் படத்தில் நாம் பார்த்தவை.
இது அந்த திருப்பங்களை நம்மை எளிதாக யூகிக்கச் செய்வதோடு, அவை தரவேண்டிய ஆச்சர்யத்தையும் மட்டுப்படுத்துகின்றன. ஆனால் இதற்கு படக்குழுவை குறைசொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் கொலைகாரன், சஸ்பெக்ட் எக்ஸ் நாவலின் அதிகாரப்பூர்வ தழுவல். ஆனால் த்ரிஷ்யம்/பாபநாசம் அத்துமீறிய உருவல். தவறு செய்தது த்ரிஷ்யமாக இருந்தாலும் தண்டனை கொலைகாரனுக்குத் தான் கிடைத்திருக்கிறது. மேலும் சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற தடம் படத்தின் சாயலும் இதில் தென்படுகிறது. இதுவும் படத்தின் சுவாரசியத்தை கொஞ்சம் குறைக்கிறது.
இதையெல்லாம் விடுத்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு சுவாரசியமான த்ரில்லர்தான் கொலைகாரன். சஸ்பெக்ட் எக்ஸ் படத்தின் களத்தின் தளர்வான தழுவல் என்று சொல்லிக் கொண்டாலும், அதன் களமும் பெரும்பாலான காட்சிகளும் வெவ்வேறு விதங்களில் மாற்றி பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த மாற்றங்களில் செயற்கைத்தனம் மிகுந்திருப்பது அயர்ச்சியைத் தருகிறது. குறிப்பாக விஜய் ஆன்டனியின் கதாப்பாத்திரம் சார்ந்த திருப்பமும், குடும்பம் சார்ந்த திருப்பமும்.
சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில் அந்த நாயகனின் கதாப்பாத்திர பின்புலம் முழுக்க முழுக்க அந்த திரைக்கதைக்கு அவசியப்பட்டிருக்கும். பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் கொலைகாரனில் அதற்கான பலமான தேவையோ, பின்னணியோ நிறுவப்படவில்லை. மேலும் அது தமிழின் வழமையான ஒரு கதைசொல்லல் உத்தியுமானதால் பெரிதாக எடுபடவில்லை. விஜய் ஆன்டனியின் குடும்பம் சார்ந்த காட்சிகளும் அது க்ளைமேக்சில் பயன்படுத்தப்பட்ட விதமுமே கூட ஒரு உணர்வுப்பூர்வமான பின்னணியை உருவாக்க திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. நாயகியின் வீட்டில் நிகழும், படத்தின் மையமான அந்த சம்பவத்திற்கான பின்னணியிலும் இயல்புத்தன்மை இல்லை.
படத்தின் துவக்கத்தில் ஒலிக்கத் துவங்கும் சைமனின் டைட்டில் இசை, இறுதிவரை அந்த பரபரப்பை நமக்கு கடத்திக் கொண்டே இருக்கிறது. அதுவும் பல முக்கியமான காட்சிகளின் தீவிரத்தை கூட்ட இசை பெரிதும் உதவியிருக்கிறது. படத்தின் உணர்வை நிறங்களிலும் காட்சிகளிலும் கடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் முகேஷ், இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக படத்தை கூர்மையாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் படத்தொகுப்பாளர் முதல் பாதியில் வரும் அந்த இரண்டு பாடல்களையும் யோசிக்காமல் தூக்கியிருக்கலாம். அவை கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு நன்றாக சூடு பிடித்து நகரத் துவங்கும் படத்தை பின்னால் இழுத்துவிடுவதுமே இந்த இரண்டு பாடல்கள்தான்.
இருப்பினும் முதல் காட்சியிலே கதையை துவங்கியிருப்பது, சில திருப்பங்களை பார்வையாளர்களை யூகிக்கச் செய்து பின் அதைவிட பெரிய திருப்பத்தை அதில் புகுத்தியிருக்கும் உத்தி, கதையை விட்டு வேறெங்கும் விலகாத காட்சிகள், சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள், கடைசிவரை விறுவிறுப்பு குறையாத திரைக்கதை போன்ற பல விஷயங்கள், கொலைகாரனை ஒரு சுவாரசியமான த்ரில்லர் என்று சொல்லவைத்து விடுகின்றன.