விடியும் முன் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கொலை. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தில் ஒரு கொலை, அதைச் செய்தது யார்? எப்படி? மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதைக் காட்டி இருக்கும் இத்திரைப்படம் அதை ரசிக்கும்படி காட்டி இருக்கிறதா?
மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி தன்னுடைய அப்பார்ட்மெண்டில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார். இந்தக் கொலையில் மீனாட்சியின் நண்பர்களும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்தக் கொலையை யார் செய்தது எனக் கண்டுபிடிக்க நன்கு தேர்ந்த போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கும், முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியும் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் அந்தக் கொலையின் பின்னணியில் இருப்பது யார்? கொலை செய்தது யார்? என்பதைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
ஒரு கொலை, அதைச் செய்தது யார்? என வழக்கமாக நாம் பல படங்களில் பார்த்துப் பழகிச் சலித்துப் போன ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையைத் தான் யுனிக்கான ஸ்டைலில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே குமார். படத்தின் மேக்கிங், வித்தியாசமான காட்சி அமைப்புகள், நேர்த்தியான கேமரா ஆங்கிள்கள், தரமான பின்னணி இசை என ஒரு விண்டேஜ் ஹாலிவுட் கிரைம் திரில்லர் பட பாணியில் கொலை படத்தை உருவாக்கிக் கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி கே குமார். இவரது உலகத் தரமான காட்சி அமைப்புகள் படத்துடன் நம்மை ஒன்றை வைத்து ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. படத்தின் கதை என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இவரது பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும், சொன்ன விதமும் பிரம்மாண்டமான ஹாலிவுட் தரத்தில் அமைந்து, அதே சமயம் மிக நேர்த்தியாகவும் அமைந்து படத்துடன் நம்மை ஒன்றை வைத்து ரசிக்க வைத்துள்ளது. இப்படியான ஒரு சாதாரண கதையை ஹாலிவுட் தரத்தில் கொடுத்து மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அமைப்புகள் மூலம் நம்மை மிரளச் செய்துள்ளார் இயக்குநர் பாலாஜி கே குமார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் இருந்து கிளைமாக்ஸில் யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியாத படி திரைக்கதை அமைத்து படத்தைக் கரை சேர்த்துள்ளார். படத்தின் முதல் பாதி சற்று வேகமாகவும், இரண்டாம் பாதி ஆங்காங்கே சில வேகத்தடைகளுடன் பயணித்து இறுதியில் சற்று நிறைவாக முடிந்திருக்கிறது. திரைக்கதையில் இன்னமும் வேகம் கூட்டி இருக்கலாம்.
விஜய் ஆண்டனி எப்போதும் போல் தன் வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் தனது ஹேர் ஸ்டைலில் மட்டும் வித்தியாசம் காட்டி இருக்கும் அவர், நடிப்பில் அதே நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார். போலீசாக வரும் ரித்திகா சிங் தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில பல இன்வேஸ்டிகேஷன் காட்சிகளில் நிறைவாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார் மாடலாக வரும் மீனாட்சி சவுத்ரி. தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மிகவும் அனுதாபமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், அதை நன்றாகக் கையாண்டு இருக்கிறார். இவரது உடல் மொழி அதற்கு நன்கு உதவி இருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் மீனாட்சியின் நண்பர் சங்கர் சித்தார்த்தா, போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜென்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் கிஷோர் குமார், ஏஜென்சி தலைமை அதிகாரி ராதிகா சரத்குமார் ஆகியோர் அவரவருக்கான ஸ்பேசில் அவரவர் வேலையை நிறைவாகச் செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். குறிப்பாக இதில் மேனேஜராக வரும் கிஷோர் குமார் தன் எதார்த்தமான நடிப்பால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார்.
சிவக்குமார் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். இவரது நேர்த்தியான கேமரா ஆங்கிள்களும் வித்தியாசமான ஒளி அமைப்புகளும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை பிரம்மாண்டம். இவரும் இப்படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் பின்னணி இசை கொடுத்து இருக்கிறார். இவர்கள் இருவரின் பங்களிப்பே இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து இப்படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது. ஆர். கே. செல்வாவின் படத்தொகுப்பும் இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் கொடுக்க உதவி புரிந்துள்ளது.
முழுக்க முழுக்கக் காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம், அதை மிகச் சிறப்பாகச் செய்து பார்ப்பவர் கண்களுக்கு விருந்து படைத்து அதன் மூலம் கைத்தட்டலும் பெற்று இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மர்டர் மிஸ்டரி கதையை இந்த மாதிரி டெக்னிகலான ஸ்டைலில் எந்த இயக்குநரும் கொடுத்தது இல்லை. அதை இப்படம் மிகச் சிறப்பாக கொடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது. படத்தின் வேகத்தை மட்டும் இன்னும் கூட கூட்டி இருக்கலாம்.
கொலை - புதிய அனுபவம்!