கே.ஜி.எஃப். படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு கன்னட சினிமாவிலிருந்து அதே போன்று ஒரு வெற்றிப் படம் கொடுக்கும் முனைப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கே.ஜி.எஃப். படம் தொட்ட உயரத்தை இதுவரை எந்த படமும் தொடவில்லை. அதனை ஈடுகட்டும் முயற்சியில் அவ்வப்போது படங்கள் வெளியாகி வரும் வரிசையில் தற்பொழுது அதே கன்னட சினிமாவிலிருந்து மற்றும் ஒரு திரைப்படமான மேக்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி உச்சம் தொடும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதில் வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதைப் பார்போம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் சஸ்பெண்டுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர புதிய ஸ்டேஷனுக்கு வரும் வழியில் இரண்டு முக்கிய புள்ளிகளின் மகன்கள் ஒரு பெண் போலீசை பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். இதனைக் கண்டு வெகுண்டு எழும் கிச்சாசுதீப் அவர்களை அடித்து உதைத்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் மிகப்பெரிய புள்ளியின் மகன்கள் என்பதால் எவரும் எஃப்.ஐ.ஆர். போட பயப்படுகின்றனர். இந்நிலையில் இரவோடு இரவாக பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் லாக்கப்பில் இறந்து கிடக்கின்றனர். இறந்தவர்களின் செல்போனில் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதால் அவர்களை எப்படியாவது இரவுக்குள் வெளியே எடுத்து விட வேண்டும் என முக்கிய புள்ளியின் அடியாட்கள் வரிசையாக ஸ்டேஷனை நோக்கி படையெடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து வருகின்றவர்களிடமிருந்து அந்த ஸ்டேஷனை கிச்சா சுதீப் காப்பாற்றினாரா, இல்லையா? லாக்கப்பில் இருந்தவர்கள் எப்படி இருந்தனர்? இந்த விஷயம் வில்லன் குரூப்புக்கு தெரிந்ததா, இல்லையா? இந்த மொத்த பிரச்சனையையும் ஓர் இரவுக்குள் கிச்சா சுதீப் தீர்த்து வைத்தாரா, இல்லையா? என்பதே அதிரடி சம்பவங்கள் நிறைந்த மேக்ஸ் திரைப்படத்தின் மீதி கதை.
படம் ஒரு இரவுக்குள் அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் நடப்பதால் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தை திரைப்படம் ஞாபகப்படுத்துகிறது. இருந்தும் அது வேறு இது வேறு என்பது போல் திரைக்கதை வேகம் நம்மை படத்தோடு ஜெட் வேகத்தில் பயணிக்கச் செய்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் படு வேகமாகச் சென்று அதே சமயம் பல இடங்களில் கூஸ்பம்ஸ் மொமெண்ட்ஸ்களோடு காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. ஒரு மாஸ் ஆக்சன் படத்துக்கே உரித்தான அத்தனை கமர்சியல் அம்சங்களும் இப்படத்தில் அமைந்து அதுவும் ஓர் இரவுக்குள் அனைத்துமே நடந்து முடிவது போல் படம் இருப்பது எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோவுக்கு என தனி மாஸ் பாடல், காதல் காட்சிகள், மாஸ் பஞ்ச் வசனங்கள் என்று எதையுமே போட்டுத் திணித்து அறுக்காமல் படத்திற்கு என்ன தேவையோ அந்த காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து படத்தையும் வெற்றிப் படமாக கொடுத்து கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா. படம் செல்ல செல்ல படபடப்பையும் பரபரப்பையும் எந்த ஒரு இடத்திலும் விடாமல் இழுத்துப் பிடித்து பார்ப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஆக்சன் திரைப்படம் பார்த்த உணர்வை இந்த மேக்ஸ் திரைப்படம் கொடுத்திருக்கிறது.
வழக்கம்போல் கிச்சா சுதீப் தனது அதிரடி ஆக்சன் காட்சிகளால் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாகக் கொடுத்து குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அகலப்படுத்தி படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் காட்சிக்குக் காட்சி மிரட்டி இருக்கிறார். ஸ்பை வேலை பார்க்கும் அதிகாரியாக வரும் இவர் எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் தேவையோ அதைச் சிறப்பாக கொடுத்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாக இளவரசு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் கலங்கடித்திருக்கிறார். கதையோட்டத்திற்கு இவரது கதாபாத்திரம் நன்றாக உதவி இருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், சுனில், சரத் லோகித் சவா உட்பட பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். சேகர் சந்திரா ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக படத்தை இரவு நேரக் காட்சிகள் என்பதால் தனது கேமரா மற்றும் லைட்டிங் மூலம் உலகத் தரத்தில் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. காந்தாரா புகழ் அஜ்நீஷ் லோகநாத் பின்னணி இசை படத்தை உலகத் தரத்தில் மாற்றி இருக்கிறது. ஓர் இரவுக்குள் நடக்கும் கதை என்பதால் அந்த இரவுக்குள் என்னவெல்லாம் சம்பவங்களை கொண்டு சென்று ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து ரசிக்க வைக்க முடியுமோ அதைச் சரிவரச் சிறப்பாக செய்து ஒரு தரமான ஆக்சன் திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த மேக்ஸ் கொடுத்திருக்கிறது.
மேக்ஸ் - 100% கேரன்டி!