"அவன் அசாதாராமானவன்..."
"ராக்கி நெருப்பு, எதிரிங்க பெட்ரோல், எதிரிங்க அதிமாக ஆக, அவன் அதிகமா பத்தி எரிவான்..."
"கேங்கைக் கூப்பிட்டுட்டு வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்"
"வாழ்க்கைன்னா பயம் இருக்கணும், அது நெஞ்சுக்குள்ள மட்டும் இருக்கணும், அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்கக்கூடாது, நம்மளை எதிர்க்குறவனோடதா இருக்கணும்"
பாகுபலி, டங்கல் போன்று வசூல் சாதனை நிகழ்த்திய வேற்று மொழி படங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் முயற்சியில் வந்திருக்கிறது கோலார் தங்க வயலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கே.ஜி.எஃப் திரைப்படம்.
1978ஆம் ஆண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகிறது. அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைக்க, எண்ணெய், காபி, உலோகங்கள், பருத்தி ஆகியவற்றுடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ணைத் தொடுகின்றது. இதனால் 70களின் இறுதி காலகட்டத்தில் கே.ஜி.எஃப்ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடக்கிறது. அப்போது அரசியல் தலைவர்கள், பன்னாட்டு பெரும்புள்ளிகள், மாஃபியாக்கள், இடையே நடக்கும் போட்டியில், ஒரு மிகப் பெரும் புள்ளியை கொலை செய்வதற்காக எந்தப் பின்புலமின்றி தனி ஒரு சிறுவனாக இருந்து மும்பையை கலக்கும் டானாக உருவாகிய ராக்கி அழைக்கப்படுகிறான். பெரும் பணம், பவர், ஆயிரக்கணக்கான அடியாட்கள் இயங்கும் ரத்தப் புழுதியின் இடையே பல கட்ட தடைகளைத் தாண்டி கொடுக்கப்பட்ட அசைன்மென்டை ராக்கி என்கிற ராஜா எப்படி முடிக்கிறான் என்பதுதான் கே.ஜி.எஃப் அத்தியாயம் 1. இரண்டாம் பாகத்துக்குத் தேவையான கதையை மிச்சம் வைத்து எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்று சரியான லீடுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
1951இல் கோலாரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதே ஆண்டில் ராக்கியும் பிறக்கிறான். சிறுவனான அவனிடம் பணம் இல்லாத காரணத்தால் தாய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் தாயை இழக்கிறான். இறக்கும்போது, "நீ எப்படிவேண்ணா வாழு, ஆனா சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்" என்ற தாயின் சொல்லை மனதில் வைத்து, "உனக்கு என்னதான்டா வேணும்?" என்று யாராவது கேட்டால், "இந்த உலகம்" என்று சொல்லும் அளவுக்கு வெறியுடன் வளர்கிறான் ராக்கி. முரட்டுத் தனமாக அடித்தால் இடி, வெடித்தால் வெடி என வளரும் அவன் மும்பையின் இரண்டு பெரிய டான்களில் ஒருவரான ஷெட்டியிடம் வேலை செய்கிறான். ஷெட்டியை விட பெரிய ஆளான ஒருவரிடம் இருந்து அசைன்மென்ட் ஒன்று வருகிறது. மிகப்பெரிய யானை ஒன்றை கொல்ல வேண்டும் என்று சூசகமாக அழைக்கப்படுகிறான் ராக்கி. உண்மையில் யானைதான் அவர். ஒரு பெரும் தங்கச் சுரங்கத்தை, ஆயிரக்கணக்கான அப்பாவி அடிமைகளை நூற்றுக்கணக்கான அடியாட்களை வைத்து அடக்கி நடத்தும் பொறுப்பில் இருக்கும் பெரிய யானையான கருடனை அவனது போட்டியாளர்களுக்காகக் கொல்லச் செல்கிறான் ராக்கி.
கர்நாடகாவின் டாப் ஸ்டாராக இருக்கும் நடிகர் யஷ் தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம். ஒரு பிரம்மாண்ட பீரியட் படத்துக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு சரியான உடல்வாகு, கூரிய பார்வை, அதிரடி நடிப்பு, கலாட்டாவான பேச்சு (இது டப்பிங் உபயம்) என அமர்க்களப்படுத்தியுள்ளார் யஷ். காட்சிக்குக் காட்சி அவர் வரும் இடங்களிலெல்லாம் ஆக்ஷனில் தெறிக்க விட்டுள்ளார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாகுபலி பிரபாஸிற்குப் பிறகு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படத்தில் இருக்கும் ஒரே வேலை, "எங்க அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியாது" என்று கொஞ்ச நேரமும் "என் அழகனைப் பற்றி உனக்குத் தெரியாது" என்று கொஞ்ச நேரமும் பேசுவதுதான். படத்தில் இருக்கும் இத்தனை சிங்கம், புலி, யானைகளுக்கு மத்தியில் ஒரு மான் என்னதான் செய்ய முடியும்? ஒரு படத்தில் வில்லன் மிரட்டலாக இருக்கலாம், ஹீரோவும் கூட மிரட்டலாக இருக்கலாம். ஆனால், இங்கோ அடுத்தடுத்து வரும் ஒவ்வொருவரும் மிரட்டலாக இருந்தால் எப்படி? அச்யுத்குமார், அவினாஷ், ராமச்சந்திர ராஜு, அய்யப்பா உள்பட அனைத்து நடிகர்களும் தாடியும், தாட்டியமான உடலுமாய் வந்து ஹீரோவை மிரட்டவில்லை, நம்மைத்தான் மிரட்டுகிறார்கள். இவர்களையெல்லாம் எதிர்க்கிறானென்றால் ராக்கி கெத்துதான் என்று நம்மை நம்பவைக்கும் வில்லன்கள். இவர்கள் தவிர அனந்த் நாக், மாளவிகா, வஷிஷ்டா என்.சிம்ஹா உள்ளிட்ட பிறரும் தங்கள் பங்குக்கு மசாலா சேர்த்துள்ளனர். ரணகளமான இந்தப் படத்தில் கிளுகிளுப்பாக சர்ப்ரைஸ் ஸ்வீட் ஹார்ட் தமன்னாவின் ஐட்டம் டான்ஸ்.
ஒரு பிரம்மாண்டமான கேங்ஸ்டர் படத்தை சரித்திர பின்னணியில் (கற்பனைதான்) ஹாலிவுட் தரத்தில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். கே.ஜே.ஆர்.அசோக் உடன் இணைந்து இவர் எழுதியுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும் மாஸ் பில்ட்-அப். வசனங்கள் கொடுக்கும் பில்ட்-அப்பை ஈடு செய்துள்ளன இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள். தாய்ப்பாசம், கோலார் தங்க வயலின் பிரம்மாண்டம், அடிமைகளின் சோகம் என படம் சொல்ல வரும் அனைத்து உணர்வுகளையும் இவ்வளவு மசாலா நெடியையும் தாண்டி சரியாகக் கடத்தியது இயக்குனரின் பெரிய வெற்றி. படம் சற்று நீளம்தான் என்றாலும் அதெல்லாம் நினைவில் இல்லையென்பதே உண்மை.
ஒளிப்பதிவாளர் புவன் கௌடாவின் கேமராவில் படம் பிரம்மாண்டம். கதையின் இன்னொரு நாயகனாக வலம் வந்து இருக்கும் இவரின் உழைப்பு அளப்பரியது. இயற்கையான வெளிச்சத்தில் படமாக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகள் மிரட்டல். ரவி பஸ்ருரின் பின்னணி இசை மாஸுக்கு மாஸ் சேர்க்கிறது. சில இடங்களில் மௌனத்தை இசையாக்கி அசத்தியுள்ளார். ஷிவகுமாரின் கலை இயக்கத்தில் கோலார் தங்கச் சுரங்கமும், மும்பை தெருக்களும், பெங்களூர் க்ளப்புகளும் பீரியட் பிரம்மாண்டம். ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு, நான் - லீனியர் திரைக்கதையைக் கட்சிதமாகத் தொகுத்துள்ளது. கோலார் - மும்பை - பெங்களூரு - கோலார் என காட்சிகள் ’சக் சக்’ என வேகமாக நகர்கின்றன.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் வந்த வசனங்கள் சாம்பிள்தான். இப்படி ஏகப்பட்ட பில்ட்-அப் வசனங்கள் இருக்கின்றன. 'அதற்கெல்லாம் ராக்கி வொர்த் தானா, படம் வொர்த் தானா? இத்தனை வழக்கமான மசாலா காட்சிகளையும் 'மாஸ்'தனங்களையும் தாண்டி படத்தை ரசிக்கவைப்பது இறுக்கமான திரைக்கதையும், அசர வைக்கும் உருவாக்கமும்தான். பிரம்மாண்டம் என்னும் உணர்வை மீண்டும் ஒரு முறை உணர வைத்துள்ளது கே.ஜி.எஃப்.
கே.ஜி.எஃப் - கன்னட சினிமாவிலிருந்து ஒரு பாகுபலி.