கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்தி வெளியானதுமே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. அதற்கு ஏற்றவாறு இப்படத்தின் ட்ரெய்லரில் இந்தி எதிர்ப்பு குறித்து காட்சிகள் வெளியானது இன்னமும் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியது. இப்படத்தின் ட்ரெய்லரில் இருந்த அதே பரபரப்பு படத்திலும் இருந்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்..
1970களில் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வங்கியில் வேலை செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் அதே சமயம் இந்தியை எதிர்க்கும் பெண்ணாகவும் இருக்கிறார். முற்போக்குவாதியான இவர் பெண்ணுரிமை பேசுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு திருமணமும் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆணாதிக்கத்தை முற்றிலுமாக எதிர்க்கும் குணத்தை கொண்ட இவரின் தாத்தா எம்எஸ் பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் இறந்து விடுவார் என டாக்டர் தெரிவித்து விடுகிறார். இதனால் கீர்த்தி சுரேஷுக்கு தான் இறப்பதற்குள் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என கீர்த்தி சுரேஷ் வீட்டார் முடிவெடுக்கின்றனர். இதனால் வேறு வழி இன்றி கீர்த்தி சுரேஷ் தன் நண்பரும், முற்போக்குவாதி போல் தன்னை காட்டிக் கொள்ளும் ரவீந்திர விஜியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.
இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய நண்பர் ரவீந்திர விஜய் ஒரு பிற்போக்குவாதி என தெரிய வருகிறது. இதனால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் எனப் பல்வேறு தகடு திட்டங்களை வகுக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதற்காக அவர் தன்னுடைய கொள்கைகளில் சில பல மாற்றங்கள் செய்கிறார். இதனால் அவருக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை அவர் தடுத்து நிறுத்தினாரா, இல்லையா? எம்.எஸ். பாஸ்கரின் நிலை என்னவானது என்பதே ரகு தாத்தா படத்தின் மீதி கதை.
ட்ரெய்லர் பார்த்த பிறகு விறுவிறுப்பான தமிழ் பற்று மிகுந்த போராட்டங்கள் நிறைந்த படமாக இப்படம் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இது ஒரு காமெடி கலந்த குடும்ப டிராமா படமாகவே அமைந்திருக்கிறது. இந்தி திணிப்பு குறித்து பேசி இருக்கும் இயக்குநர் அதை ஏதோ ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு முக்கிய கதையாக முற்போக்கு பெண்மணி vs பிற்போக்கு ஆண் இருவருக்குமான மோதலையே பிரதானமாக காட்டி அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாகவும் இல்லாமல், இந்தி திணிப்பு குறித்த போராட்டங்கள் நிறைந்த சீரியஸ் படமாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் ஒரு மயில்டு காமெடி டிராமா படமாக அமைந்து எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்யாமல் கடந்து விடுகிறது.
முதல் பாதி சற்று வேகமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே பலவிதமான வேகத்தடைகள் இருந்து அயர்ச்சியை கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் படத்திற்கு பிளஸ் ஆக கீர்த்தி சுரேஷின் ஸ்கிரீன் பிரசன்ஸ், அவருடைய அழகான நடிப்பு, காமெடி சீன்ஸ் ஆகியவை படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக ஒரு டிராமா பார்ப்பது போல் இருந்தாலும் ஆங்காங்கே சின்ன சின்ன ஃபன் மொமென்ட்ஸ் மற்றும் இலகுவான காமெடி காட்சிகள் ஆகியவை சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. இந்தி திணிப்பை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு ஒரு குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப படமாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுமன் குமார்.
வழக்கம்போல் தனது அழகான நடிப்பு, நடை, உடை, பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார் நாயகி கீர்த்தி சுரேஷ். சின்ன சின்ன முக பாவனைகள், வசன உச்சரிப்பு, இலகுவான காமெடிகள் என தனக்கு கொடுத்த சீன்களில் எல்லாம் சிறப்பாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். நாயகனாக வரும் ரவீந்திர விஜய் கீர்த்தி சுரேஷுக்கு ஈக்குவலான நடிப்பை கொடுத்து மிகுந்த டஃப் கொடுத்திருக்கிறார். ஒருவருக்கொருவர் சளைக்காதவர் என்பது போல் நடித்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் உடன் பேங்கில் வேலை செய்யும் நண்பராக வரும் தேவதர்ஷினி எப்போதும் போல் கலகலப்பான நடிப்பை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். கீர்த்தியின் தாத்தாவாக வரும் எம் எஸ் பாஸ்கர் முற்போக்கு வாதியாக சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். அதேபோல் கீர்த்தியின் அப்பாவாக வரும் ஜெயக்குமார் அவ்வப்போது சிரிப்பு மூட்டி உள்ளார். மற்றபடி உடன் நடித்த நடிகர்கள் குறிப்பாக வங்கியில் வேலை செய்யும் மேனேஜர் உட்பட அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
சான் ரோல்டன் இசையில் ‘அருகே வா...’ பாடல் சிறப்பு. அதேபோல் ரெட்ரோ இசையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இப்படத்திற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக பின்னணியில் ரெட்ரோ இசையை சிறப்பாக பயன்படுத்தி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. யாமினியின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சின்ன சின்ன சிமிலி விளக்குகளின் வெளிச்சங்கள் மூலமாகவே பல காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் அவை சிறப்பாக அமைந்திருக்கின்றது. ஒரு நல்ல குடும்பங்கள் கொண்டாடும் படியான ஜனரஞ்சகமான கதையை எடுத்துக் கொண்டு அதை சீரியஸ் படமாகவும் இல்லாமல், சிரிப்பு படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஒரு படமாக கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஓரளவு திருப்தியை கொடுத்திருக்கிறார் இந்த ரகு தாத்தா. இந்தப் படத்தை ஒருவேளை தமிழில் உள்ள கமல் - கிரேசி மோகன் கூட்டணி அல்லது சுந்தர் சி, கே எஸ் ரவிக்குமார் கூட்டணி உருவாக்கியிருந்தால் பிளாக்பஸ்டர் பட்டியலில் நிச்சயமாக இணைந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
ரகு தாத்தா - இந்தி டீச்சர் இல்லை!