Skip to main content

கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ... கீ - விமர்சனம்  

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனை அல்லது ஒவ்வொரு வகையான குற்றங்கள் அடிப்படையிலான கதைகள் அதிகமாக வருவது வழக்கம். ஒரு கட்டத்தில் சீரியல் கில்லர் கதைகள், ஒரு கட்டத்தில் மெடிக்கல் க்ரைம் கதைகள், உறுப்புத் திருட்டு கதைகள், விவசாயிகளின் பிரச்சனை என இவை காலம்தோறும் மாறி வரும். சமீப காலமாக ஹேக்கிங், சைபர் க்ரைம் சார்ந்த கதைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி, அனைகா உட்பட பலர் நடிக்க காளீஸ் இயக்கியுள்ள 'கீ' இந்த வகைப் படங்களில் லேட்டஸ்ட்.

 

jeeva rjbalaji



ஹாபியாக ஹேக்கிங் செய்பவர் ஜீவா. என்னவெல்லாம் செய்வார்? சுற்றியிருக்கும் பெண்களின் ஃபோன்களை எல்லாம் ஹேக் செய்து அதன் மூலமே அவர்களைக் கவர்ந்து நட்பு கொள்வார். கல்லூரி நண்பர்களுக்குத் தேர்வின் போது கம்ப்யூட்டரை ஹேக் செய்து உதவுவார். இப்படி பிறருக்குத் தீமையேற்படாத வகையில் ஹேக்கிங் செய்பவர் ஜீவா. இன்னொரு புறம் தொழில்முறையாக பணத்துக்காகவும் ஆத்மதிருப்திக்காகவும் (?) உயிர்பலி நேரும் அளவுக்கு ஒரு டீம் வைத்து ஹேக்கிங் செய்பவர் வில்லன் கோவிந்த் பத்மசூர்யா. இவர் பலவீனமான மனநிலை உள்ளவர்களின் ஃபோன்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அவர்களை தன் அடிமையாகப் பயன்படுத்தி பெரும் குற்றங்களைச் செய்பவர். டெக்னாலஜியில் வல்லவர்களான இந்த இருவருக்கும் நடக்கும் டெக் போர்தான் இந்த 'கீ'.

ஹேக்கிங் செய்து அவர்களை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கும்பல் நம்மையும் சற்றே மிரட்டுகிறது. எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிரும் பழக்கமுள்ளவர்களுக்குத் தேவையான எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது 'கீ'. நாயகன், வில்லன் இருவரும் சமமான திறனுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பது இருவருக்கிடையிலான போரை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. சின்னச் சின்ன ஐடியாக்கள் ரசிக்கவைக்கின்றன. தொழில்நுட்ப நிகழ்வுகளை ஹேக்கிங் காட்சிகளை படமாக்கிய விதமும் பெரிய உறுத்தலில்லாமல் இருக்கிறது. ஆனால், ஹேக்கிங் படங்களில் நம்மை சோதிப்பவை அதீதமான விஷயங்களை சாத்தியங்களாகக் கூறுவதுதான். போகிற போக்கில் வழியில் இருக்கும் எல்லாவற்றையும் ஹேக் செய்வதுதான் நமக்கு அயற்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். 'கீ' அதற்கு விதிவிலக்கல்ல. இதயத்துடிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் பேஸ் மேக்கரில் இருந்து ரோட்டில் செல்லும் கார் வரை அனைத்தையும் அசால்ட்டாக ஹேக் செய்கிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகளில் 'கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ' என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

 

nikki kalrani



அடிப்படை கதைக்களம் ஒரு மிக சுவாரசியமான பரபரப்பான டெக் த்ரில்லருக்குப் போதுமானது என்றாலும் திரைக்கதை மிக பலவீனமாக இருக்கிறது. திடீரென நாயகன் ஃப்ளர்ட் பண்ணும் காட்சிகள், திடீரென தந்தைப் பாசம், திடீரென காதல் உருக்கம் என தொடர்பில்லாத தேவையில்லாத பல விஷயங்கள் திரைக்கதையை திசைக்கொன்றாக இழுத்து படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. வில்லனின் பின்புலம் என்ன, பணத்துக்காக இல்லையென்றால் எதற்காக இதை செய்கிறார், வில்லன் டீமில் உள்ளவர்கள் யார், டீனேஜ் பசங்க போல இருக்கும் இருவரும் அந்த டீமிற்கு எதற்கு வந்தார்கள் என எந்தப் பின்புலமும் இல்லை, மேலும் வில்லனுக்குத் தேவையான முக்கியத்துவமும் குறைவாக இருப்பதால் வில்லன் டீம் செய்யும் குற்றங்களும் பாதிப்பை உண்டு செய்யாமல் போகின்றன. வசனங்கள் ஆங்காங்கே பாடம் எடுக்கின்றன.

 

govinth



ஜீவா, ஃப்ரெஷ்ஷாக ஒரு டெக்கி லுக்கில் சரியாகப் பொருந்துகிறார். கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஆர்ஜே.பாலாஜியின் டைமிங் கௌண்டர்கள் சரியாக வேலை செய்து சிரிக்க வைக்கின்றன. படத்தில் மிகப்பெரிய ஆறுதலாக ஆர்ஜே.பாலாஜியின் காமெடி இருக்கிறது. அவரது வசனங்களில் படம் எடுத்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது தெரிந்துவிடுகிறது. நிக்கி கல்ராணி அழகான குறும்புக்கார நாயகியாக வந்துசெல்கிறார். ஒரு இடத்தில் உருக்கமான வசனங்களெல்லாம் பேசுகிறார். அவரது நடிப்பு ஓரளவு நன்றாக இருந்தாலும் கதைக்கு அவரது பாத்திரம் பெரிய பலமெல்லாம் இல்லை. அனைகா சோட்டி படத்தின் தொடக்கத்தில் கிளாமர் பங்களிப்பைத் தந்து செல்கிறார். ஜீவாவின் பெற்றோராக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் - சுகாசினி இருவரும் அனுபவ நடிப்பை அளித்துள்ளனர். வில்லன் கோவிந்த் பத்மசூர்யா தோற்றமும் நடிப்பும் நல்ல வில்லனுக்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

அபிநந்தன் ராமானுஜனின் கேமரா சிறப்பாகப் பரபரப்பைக் கூட்ட முயன்றுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தொகுப்பு படத்தின் திரைக்கதையை அலைபாய அனுமதித்துள்ளது. புதுமையான கதைக்களம், சரியான கதை, வொர்க்-அவுட் ஆன காமெடி என இருந்தும் திரைக்கதையின் குறைபாட்டால் தடுமாறியிருக்கிறது கீ. 


                             

சார்ந்த செய்திகள்