அழகி, தென்றல், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன படம் மூலம் மீண்டும் கோதாவில் குதித்துள்ளார். எப்பொழுதும் சமரசம் இல்லாமல் தான் நினைத்ததை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த தங்கர் பச்சான் இந்தப் படத்தையும் அதேபோல் கொடுத்து வெற்றி கண்டாரா, இல்லையா?
இப்படத்தின் கதை என்று பார்த்தால், 75 வயதான நேர்மை தவறாத ரிட்டையர்ட் ஜட்ஜ் பாரதிராஜா தன் மகன் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்மையற்ற வக்கீலாக இருப்பதை நினைத்து வருத்தத்துடன் வாழ்கிறார். இவருக்கு தன் மகன்கள் ஒன்று கூடி அவருடைய 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட விழா எடுக்கும் சமயத்தில் பாரதிராஜாவுக்கு ஒரு கடிதம் வருகிறது அந்த கடிதத்தில் வரும் தகவலால் அதிர்ச்சி அடைகிற பாரதிராஜா யாரிடமும் சொல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தில் அவருக்கு கிடைத்தது என்ன?
மற்றொன்று ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக இருக்கும் யோகி பாபு ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து தன் வீட்டில் தங்க வைக்கிறார். கர்ப்பிணிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு சமயத்தில் அந்த குழந்தையையும் தாயையும் பிரிய நேர்கிறது. அவர்கள் சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை. இந்த இரண்டு கதையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இதன் பிறகு இந்த இரண்டு கதைகளும் ஒரு கதையாக மாறி அதன் பின் என்ன நடந்தது என்பதே கிளைமேக்ஸ்.
இது ஒரு வழக்கமான நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட படமாக இல்லாமல் எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்தி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையை நெகிழும்படியான திரைக் கதையுடன் கூறி பார்ப்பவர்களைக் கலங்கச் செய்து வெற்றி பெற்று கம்பேக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான். தனக்கே உரித்தான ஆழமான காட்சி அமைப்புகள், அழகான வசனங்கள், அழுத்தமான திரைக்கதை எனத் தனது ட்ரேட் மார்க் விஷயங்களை இந்த படத்திலும் கொடுத்து குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன காட்சிகளில் கூட உணர்ச்சிப்பூர்வமான கதையாடல்களை அமைத்து பார்ப்பவர்களை கலங்கச் செய்திருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.
இந்தத் தள்ளாத வயதிலும் மிகச் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் இமயம் நடிகர் பாரதிராஜா. பிள்ளைகள் மேல் கோபம் கொள்ளும் இடத்திலும், தான் செய்த தப்பை எண்ணி வருந்தி அதற்கான மன்னிப்பு கேட்கும் இடத்திலும், தப்பு எனத் தெரிந்ததும் அதை நேர்மையுடன் தட்டிக் கேட்கும் இடத்திலும் தனது வெர்சட்டைலான நடிப்பை கன கச்சிதமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கு போட்டியாக மிகச் சிறப்பான குணச்சித்திர நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. வழக்கமாக காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களை கலங்கச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குமான கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுக் கொடுத்துள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சின்ன சின்ன இடங்களில் கூட சிறப்பான முக பாவனைகளில் ஈர்த்திருக்கிறார். பாரதிராஜாவின் மகனாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இப்படத்தில் நிறைவாக செய்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வருடுகின்றன. பின்னணி இசை கலங்க வைத்துள்ளது. உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளை இவரது இசை இன்னும் மேம்படுத்தி உள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. தனக்கு என்ன வருமோ அதையே இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகும் மிகச் சிறப்பாக ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.
கருமேகங்கள் கலைகின்றன - உணர்ச்சிப் போராட்டம்!