மிகச் சாதாரணமாக ஒருவர் படுத்துத் தூங்கி மறுநாள் விழித்தெழும் அந்த இரவு நேரம் வேறு சிலருக்கு எப்படியெல்லாம் இருக்க முடியும்?காவல்துறையினருக்கு, குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு, போதை மருந்து கடத்துபவர்களுக்கு, இன்னும் நமக்கு அதிகம் தெரியாத வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு, ஒரு இரவு எப்படியெல்லாம் இருக்க முடியும்? 'மாநகரம்' படத்தில் சென்னை நகரின் ஒரு இரவில் நடக்கும் கதையை விறு விறுவென சொல்லி ரசிகர்களை கவர்ந்து ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திருச்சியின் ஒரு அசாதாரண இரவில் நடக்கும் கதையை தனது 'கைதி'யில் சொல்லியிருக்கிறார். அதே விறுவிறுப்பு, அதே வெற்றி கிடைத்திருக்கிறதா?
சுமார் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதை மருந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றுகிறது ஸ்பெஷல் டாஸ்க் ஆஃபிசர் நரேன் தலைமையிலான போலீஸ் டீம். அதை இழந்த க்ரைம் கடத்தல் கும்பல் போதை மருந்தை மீட்கவும் கைப்பற்றிய போலீஸ்காரர்களை கொலை செய்யவும் வெறியுடன் கிளம்புகிறது. இன்னொரு பக்கம் நகரின் முக்கிய காவல் அதிகாரிகள் அனைவரும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்க, அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் ஆயுள் தண்டனை கைதியான கார்த்தி. கார்த்தி, வாழ்நாளில் அதுவரை பார்த்திராத தனது மகளை மறுநாள் பார்க்கச் செல்ல வேண்டும்... நரேன், அவ்வளவு மோசமான போதைப் பொருள் மீண்டும் கிரிமினல்களிடம் சிக்கி சமூகத்தை சீரழிப்பதைத் தடுக்க வேண்டும்... போலீஸ்காரர்கள் காப்பாற்றப்பட வேண்டும்... எதிரில் மிகப்பெரிய க்ரைம் கூட்டம். என்ன ஆனது அந்த இரவில் என்பதுதான் 'கைதி'.
கார்த்தி, கதை தேர்வில் தான் என்றும் வேற லெவல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நான் மகான் அல்ல, தீரன் வரிசையில் கைதி, ஒரு தரமான க்ரைம் த்ரில்லர் ஆக்ஷன் திரைப்படம். அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்கள் 'ட்ரீம் வாரியர்' தயாரிப்பு நிறுவனத்தார். தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு வகையில் திரைப்பட ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும் வகையில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கதைக்கான அத்தனை அடிப்படைகளையும் அமைத்து, முதல் நொடியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறார் இயக்குனர் லோகேஷ். ஒரு இரவு... இரண்டு தளங்களில் நடக்கும் காட்சிகள்... முற்றிலும் புதிதான கதை... விறு விறு பயணம் என தொடக்கத்தில் நம்மை முழுமையாக ஈர்க்கிறது படம். கார்த்தி நடித்திருப்பதால் அவருக்கென சில சண்டைக்காட்சிகளில் சற்று அதீதம் காட்டியிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து இது ஒரு ஹீரோ படமாக இல்லாமல் பிறருக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருப்பது பெரும் பலம்.
லாரி பயணத்தில் கார்த்தி அண்ட் கோ., எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் டெரர் சவால்கள். பார்ப்பவர்களுக்கும் அந்தப் பதற்றத்தை பற்ற வைத்திருக்கிறது இயக்குனர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இசையமைப்பாளர் சாம் கூட்டணி. சண்டைக் காட்சிகளில் தங்கள் முழு திறமையை காட்டியிருக்கிறார்கள் 'நேஷனல் அவார்டு' மாஸ்டர்ஸான அன்பறிவ். ஆனால், ஒரு கட்டத்தில் கல்லால் தாக்கப்பட்ட பிறகும் கத்தியால் குத்தப்பட்ட பிறகும் கார்த்தி தொடர்ந்து அடித்து நொறுக்கும்போது, 'ஒரு மண்டை ஓட்டால் எத்தனை கல்லடி தாங்க முடியும்?', 'ஒரு மனித உடலால் எத்தனை கத்திக் குத்தை ஏற்க முடியும்?' என்ற கேள்விகள் இயல்பாக மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், 'சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கடந்து போகும் அளவில் அது இருப்பதால் பிரச்னை இல்லை. நாயகனுக்கு உணர்வுப்பூர்வமான ஒரு கடமையை, அவசியத்தை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் அவனது நோக்கம், பயணத்துடன் படம் பார்ப்பவர்களை ஒருங்கிணைத்துள்ளார் இயக்குனர். இன்னொரு பக்கம் கமிஷனர் ஆஃபீஸில் மாட்டிக்கொள்ளும் ஜார்ஜ் மரியான் மற்றும் சில கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தும் அதை முறியடிக்கும் விதமும் சில இடங்களில் 'ஆஸம்' சொல்ல வைக்கிறது.
இப்படி பரபரவென தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் பயணத்துக்குத் தடையாக வரும் வில்லன் கூட்டம், அவர்களை அடித்து நொறுக்கும் கார்த்தி என தொடர்வது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. எத்தனை பேர் வந்தாலும் கார்த்தி அடித்து நொறுக்கிவிடுவார் என்ற நம்பிக்கை நமக்கு வந்த பின், படத்திலிருந்து நாம் மெல்ல விலகுகிறோம். இருந்தாலும் அந்த கிளைமாக்ஸ் சண்டை ஐடியா தீபாவளி மூடை நமக்குள் செட் செய்கிறது.
கார்த்தி, பார்வையிலும் அசைவிலும் நடிக்கிறார். தோற்றத்தில் பருத்தி வீரனை பார்த்த பரவசத்தை நமக்குத் தருகிறார். பிள்ளைப் பாசத்தில் நம்மை உருக வைக்கிறார். நரேன், பெர்ஃபெக்ட் போலீஸ் ஆஃபிசராக இருக்கிறார். கடமைக்கும் கார்த்தி மீதான கருணைக்கும் இடையில் குழம்பும் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பல சின்ன வேடங்களில் நம்மை கவர்ந்த ஜார்ஜ் மரியான், 'கைதி'யில் சர்ப்ரைஸ் தருகிறார். ஹரிஷ் உத்தமன், ரமணா, அர்ஜுன் தாஸ்... சமீப காலத்தில் அதிகம் பயமுறுத்திய வில்லன்கள் இவர்கள்தான். குரலும், உடலும் மிரட்டுகின்றன. இறுக்கமாக நகரும் படத்தில் நமக்கு நெருக்கமாகப் பேசி சிரிக்க வைக்கிறார் தீனா. கார்த்தியின் மகளாக நடித்துள்ள சிறுமி, தனது பேச்சாலும் ஏக்கம் நிறைந்த பார்வையாலும் நெஞ்சை கனக்க வைக்கிறார். கல்லூரி மாணவர்கள் டீமில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, முழு படமும் இரவில் நடக்கும்போது கூட சலிப்பு ஏற்படவிடாமல் ரசிக்கவைக்கிறது. சாம்.சி.எஸ். ஒரு பக்கம் பதற்றத்தைக் கூட்டும் இசையை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் கிடைத்த சின்ன வாய்ப்பையும் விட்டுவிடாமல் எமோஷனல் இசையில் நம்மை கரைக்கிறார். பரபரவென படத்தை நகர்த்தும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு நீளும் சண்டைக் காட்சிகளுக்கு சற்று ரிலாக்ஷேஷன் கொடுத்துவிட்டது.
இத்தனை பெரிய ஆபத்து இருக்கும்போதும் வேறு போலீஸ் அதிகாரிகளை அழைக்கக்கூடாதா, அழைக்காதது ஏன் போன்ற கேள்விகள் ரொம்ப யோசித்தால் எழலாம். யோசிக்காமல் விட்டுவிட்டு படத்தை ரசிக்கலாம். அத்தனை சுவாரசியம் நிறைந்தது அந்த இரவு.