Skip to main content

ராட்சசின்னு நினைச்சு போனோம், ஆனா... ராட்சசி - விமர்சனம்

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

தமிழ் சினிமாவில் அதிகம் தாக்கப்படாத கேட்டகிரியான ஆசிரியர்களை விமர்சித்து வந்துள்ள படம். புதூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்ற வருகிறார் ஜோதிகா. ஒரு பள்ளி எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் உள்ளது அந்தப் பள்ளி. இதை கவனித்த ஜோதிகா அப்பள்ளியை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். நேர்மையற்ற ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்துகிறார். அடுத்ததாக ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறார். ஜோதிகாவின் இந்த அதிரடியான மாற்றங்களால் தன் பள்ளியில் அட்மிஷன் குறைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாத தனியார் பள்ளி முதல்வர் ஹரிஷ் பெரடி ஜோதிகாவை பழிவாங்க அவர் மேல் வழக்கு தொடர்கிறார். போலீசார் ஜோதிகாவை கைது செய்கின்றனர். இதன் பிறகு ஜோதிகாவிற்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட நிலைமை என்ன என்பதே ராட்சசி படத்தின் கதை.

 

jyothika ratsasi



அரசியல் படங்கள் அதிகம் வெளிவரும் காலகட்டமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு பள்ளி ஆசிரியர்களை மையப்படுத்தி வெளிவந்துள்ள படம். அரசு பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிரதையால் பாதிக்கப்படும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நிலையை சில கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிப்படுத்தியுள்ளது ராட்சசி. மருந்தில் கலக்கும் தேன் போல மக்களுக்கு அவசியமான ஒரு ராவான கதையில் சில மாஸ் எலிமெண்ட்களை சேர்த்து, கூடவே நம் பள்ளிக் காலத்தை ரிலேட் செய்துகொள்ளும்படி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கெளதம்ராஜ். இது சில இடங்களில் சற்று மிகையாகவும் தெரிகிறது. அதுவும் ஜோதிகாவின் உடைக்கும் நடவடிக்கைக்கும் காரணமாக சொல்லப்படும் பின்னனி புத்திசாலித்தனம், கொஞ்சம் அதிபுத்திசாலித்தனம். பாரதி தம்பியின் ஷார்ப்பான வசனங்கள் படத்தின் ஆணி வேராக இருக்கின்றன. ஆங்காங்கே அட்வைஸ் தொனி. மக்களுக்கு சொல்லவேண்டிய எல்லா நல்ல விஷயங்களையும் ஒரே படத்தில் சொல்ல முயன்றுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. நாயகியை எதிர்க்கும் ஆசிரியர்களும் சரி, வில்லனும் சரி பலமாகவோ புத்திசாலித்தனமாகவோ இல்லாமல் இருப்பது ஜோதிகாவுக்கு நல்லதாகவும் நமக்கு சலிப்பாகவும் இருக்கிறது.

 

 

government school



படம் முழுவதும் ஜோதிகாவே நிறைந்து காணப்படுகிறார். தன் நடை, உடை, பாவனை என பாத்திரமாகவே மாறி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பானதாகவும், அதே சமயம் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து ரசிக்கவைக்கும் அவர் இதிலும் அதை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக வரும் ஹரிஷ் பெரடி கொலைக்கும், பழிவாங்குதலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வில்லத்தனம் செய்துள்ளார். உதவி தலைமையாசிரியராக வரும் கவிதா பாரதி ஆரம்பத்தில் மிரட்டி பின்னர் பணிந்துள்ளார். அரசியல்வாதி அருள்தாஸ், பி.டி.மாஸ்டர் சத்யன், அகல்யா வெங்கடேசன், முத்துராமன் ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். குறிப்பாக குட்டிப்பையன் கதிர் கதாபாத்திரம் மனதை கவர்ந்துள்ளது. டீச்சராக வரும் பூர்ணிமா பாக்யராஜை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்துள்ளது, பாடல்கள் பெரிதாய் கவரவில்லை. கோகுல் பினோய் ஒளிப்பதிவு அரசு பள்ளியை அழகாகவும் மாணவர்கள் சூழலை பசுமையாகவும் காட்டியுள்ளது.

 

school staff



ஆங்காங்கே சாட்டை, அப்பா படங்களை நினைவுபடுத்தும் இப்படம் முழுக்க முழுக்க அரசு பள்ளி ஆசிரியர்களின் குறைகளை சில இடங்களில் மிகையாகவும், பல இடங்களில் சரியாகவும் சுட்டிக்காட்டியிருப்பதை மட்டும் தவிர்த்து அரசு பள்ளிகளில் இல்லாத அடிப்படை வசதிகள், தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரம், அங்கிருக்கும் கல்வி முறைகளின் அவலம், அரசு பள்ளிகளின் சத்துணவு தரம் மற்றும் கழிவறை பிரச்சனைகள், படிப்பை தவிர்த்து மாணவர்களின் இன்னல்கள் என இன்னும் கூட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் அதிக மதிப்பை பெறுவாள் இந்த ராட்சசி. சில நாடகத்தனங்கள் பரவாயில்லை, நல்ல கருத்துகள் வேண்டுமென்பவர்களுக்கு ஏற்ற படம் ராட்சசி.

ராட்சசி - தேவதை, கொஞ்சம் அதிகமாக அட்வைஸ் செய்யும் தேவதை. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்