Skip to main content

ஹலோ சொன்ன ஜோதிகா... வேற லெவல் சொன்ன சிம்பு! காற்றின் மொழி - விமர்சனம் 

Published on 17/11/2018 | Edited on 23/11/2018

"எங்க அக்கா கூட கேப்பாங்க, அதெப்படிடீ நீ சுடுற பூரி மட்டும் புஸ்ஸுன்னு வருதுன்னு. அதெப்படின்னுலாம் எனக்குத் தெரியாது, ஆனா நான் சுடுற பூரி புஸ்ஸுன்னுதான் வரும்" - இது காற்றின் மொழியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம். இந்த வசனம்தான் விஜயலட்சுமி (ஜோதிகாவின் பாத்திரம்).

 

katrin mozhi jo



எது செய்தாலும் அதை முழு மனதுடன் சிறப்பாக தன்னம்பிக்கையுடன் செய்யும்,  யார் என்ன சொன்னாலும் அது தன்னை பாதிக்காமல், தன் வழியில் நடக்கும், அதே நேரம் கணவன், மகன் மீது மிகுந்த பாசத்தோடு இருக்கும் ஒரு பெண். பனிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலான, பல திறமைகள் இருந்தும் எதிலும் ஊக்குவிக்கப்படாத, 'ஹவுஸ் வொய்ஃப்' என்ற பட்டதைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பெண் விஜயலட்சுமியாக ஜோதிகா. 'நேத்து ராத்திரி யம்மா' பாடும்போதும், சரோஜாதேவி  போல் நடிக்கும்போதும், முகம் தெரியாதவர்களின் பிரச்சனைகளுக்கு எஃப்.எம்.மில் தீர்வளிக்கும்போதும், இறுதியில் 'ஹலோ' சொல்லி கலங்கும்போதும்... உண்மையில் ஜோ, சூப்பர்! 'வாடீ ராசாத்தீ' என்று பாடியது இந்தப் படத்துக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். 'காற்றின் மொழி' படம் ஜோதிகா மீதுதான் பயணிக்கிறது.

தன் திறமைக்கேற்ற ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்ற ஆர்வமுள்ள ஜோதிகா, அவரை முடிந்த அளவு உற்சாகமூட்டும் கணவர் விதார்த், வீடியோ கேம் மோகத்தில் இருக்கும் மகன்... இவர்களுடன் ஜோதிகாவின் தந்தை, இரட்டை சகோதரி அக்காக்கள், ஊறுகாய் விற்கும் மாமி, அப்பார்ட்மெண்ட் சுற்றத்தினர் கொண்ட சிறிய உலகத்திலிருந்து, கிடைத்த வாய்ப்பின் மூலம்  ஒரு பெரிய வாய்ப்பை தேடிப் பெற்று எஃப்.எம். ஆர்ஜே என்னும் வேலையால் ஒரு பெரிய உலகத்துக்குச் செல்லும்போது, குடும்பத்தில், சுற்றத்தில் ஏற்படும் அதிர்வுகள், மாற்றங்கள், அதை ஜோதிகா எப்படி எதிர்கொள்கிறார், தன் விருப்பமான வேலையிலிருந்து பின்வாங்கினாரா இல்லையா என்பதை  அழகாக, மென்மையாகப் பேசியிருக்கிறது இந்த காற்றின் மொழி. விதார்த், ஜோதிகாவின் முன் சற்று டல்லாகத் தெரிகிறார், அவருடன் சற்றே தயக்கமாக நடிக்கிறார். ஆனால், தனியே வரும் காட்சிகளில் தேர்ந்த நடிகர் என்று நிரூபிக்கிறார். ஜோதிகா, திருமணத்துக்குப் பின் இத்தனை அன்னியோன்யமாக நடித்திருப்பது இந்தப் படத்தில்தான். நேரடியாக நெருக்கத்தைக் காட்டாமல், உரையாடலாகவும், பாடலாகவும் காட்டியிருப்பது நன்று. ஜோதிகாவின் தந்தையாக மோகன் ராம், மற்றும் அந்த இரட்டை சகோதரிகள் நமக்கே வெறுப்பு வரும் அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, உமா பத்மநாபன், மயில்சாமி, லக்ஷ்மி மஞ்சு, இளங்கோ குமரவேல் என ராதா மோகனின் பலமாக நடிகர்கள் அனைவரும் இருக்கின்றனர்.

 

vidharth jo



இந்தியில் வித்யாபாலன் நடித்த 'துமாரி சூலு' படத்தைத் தன் பாணியில் கொஞ்சம் மாற்றி தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ராதா மோகன். சிரிக்க வைக்கும் சின்னச் சின்ன வசனங்கள், நல்ல பாத்திரங்கள், மென்மையான நகைச்சுவை, வாழ்வின் இன்பங்கள் சொல்லும் காட்சிகள் என தன் பிராண்டிலேயே உருவாக்கியிருக்கிறார். 'மொழி' படத்தில் ஜோதிகாவின் திறமையை மிக அழகாக வெளிப்படுத்திய இவர் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது அர்த்தமுள்ளதாகியிருக்கிறது. இத்தனை ரகளையான, ரசனையான ஜோதிகாவை வேறு யாரும் வெளிக்கொண்டுவரவில்லையென்றே சொல்லலாம். படத்திற்குத் தேவையில்லாத சில நகைச்சுவைக் காட்சிகள், சில இடங்களில் ஜோதிகா பேசும் தமிழ், சில ராதாமோகன் க்ளீஷே காட்சிகள் என வெகு சில குறைகளுடன் ஒரு நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் ராதாமோகன். சிம்பு வரும் காட்சியும் யோகிபாபு வரும் காட்சியும் படத்திற்கு தேவையாக இல்லை. ஆனாலும், சிம்பு வரும் காட்சி ரசிக்க வைக்கிறது, யோகிபாபு வரும் காட்சி படத்திலிருந்து அந்நியமாகவே தெரிகிறது. அதுவும் சிம்பு தன்னைதானே லேட் விஷயத்தில் கிண்டல் செய்துகொள்வது ஜாலி.


 

str and co



பொன்.பார்த்திபனின் வசனங்களில் ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியாது. படத்திற்கு வசனங்கள் மிகப்பெரும் பலம். ஏ.ஹெச்.காசிப்பின் இசை தனியாக வெளியே தெரியாமல் படத்தின் அடி இழையாக இருக்கிறது. பின்னணி இசை படத்துடன் பிணைந்திருக்க பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் மனதோடு பெரிதாக ஒட்டவில்லை. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக, அழகாகக் காட்டியுள்ளது. படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் சற்று தாராள மனதோடு செயல்பட்டிருக்கிறார். சில தேவையில்லாத காட்சிகளிடம் கண்டிப்பாக இருந்திருக்கலாம். படத்தில் ஜோதிகாவைப் பார்த்து சிம்பு சொல்வார், 'உலகத்துல அதிகமா பயன்படுத்தப்படுற வார்த்தை 'ஹலோ' தாங்க, ஆனா நீங்க சொல்ற ஹலோ வேற லெவல்ங்க' என்று. உண்மைதான் இந்தக் காற்றின் மொழியில் ஜோதிகா சொல்லும் ஹலோவும் ஜோதிகாவும் வேற லெவல்.      

 

                                                      

சார்ந்த செய்திகள்