நாம் எப்பொழுதும் குறிப்பிடுவது போல் எப்போதாவது சில சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை விட மிக சிறப்பாக அமைந்து நமக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ் சினிமாவில் அவ்வப்போது வழக்கம். அந்த வரிசையில் தற்போது மிகச் சிறிய படமாக உருவாகி மிகப்பெரிய விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் போன்று கையாண்டு பார்ப்பவர்களிடையே கைத்தட்டல் பெற்று கவனம் ஈர்த்திருக்கும் திரைப்படம் ஜமா. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக தென்படும் இந்த ஜமா பார்ப்பவர்களை எந்த அளவு ஈர்த்துள்ளது? என்பதை பார்ப்போம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் அம்பலவாணன் நாடக சபை என்ற ஜமாவில் திரௌபதி வேடமிட்டு ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தெருக்கூத்து கலைஞரான பாரி இளவழகன். எப்போதும் பெண் வேடமிட்டு தெருக்கூத்தில் ஆட்டம் போடுவதால் அவருக்கு பெண்களுடைய உடல் மொழி மற்ற நேரங்களிலும் அப்படியே வந்து விடுகிறது. அவரது நடை, உடை, பாவனை என அனைத்துமே பெண் போல் இருப்பதால் அவருக்கு பெண் தர மறுக்கின்றனர். இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளாகும் அவரது தாய் கே.வி.என் மணிமேகலை, பாரியை எப்படியாவது தெருக்கூத்து தொழிலில் இருந்தே நிறுத்தி விட வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால் பாரி இளவழகனுக்கோ தன் தந்தை விட்டுச் சென்ற அந்த ஜமாவை எப்படியாவது தன் கூத்து வாத்தியார் சேத்தனிடமிருந்து கைப்பற்றி தானும் அர்ஜுனர் வேடமிட்டு ஆட வேண்டும் என்ற வாழ்நாள் கனவுடன் போராடி வருகிறார். இதற்காக அவர் தன் குடும்பம், காதலி அம்மு அபிராமி, நண்பர்கள் ஆகியோர் அனைவரையும் எதிர்க்கிறார். இதனால் பாரிக்கும் சேத்தனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதையடுத்து பாரி இளவழகன் தன் தந்தை விட்டுச் சென்ற ஜமாவை மீட்டாரா, இல்லையா? இவருக்கும் அம்மு அபிராமிக்குமான காதல் என்னவானது? தன் கூத்து வாத்தியார் சேத்தனை எதிர்த்து வென்றாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் பாரி இளவழகன் இப்படத்தை இயக்கி தானும் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு பெண் வேடமிட்டு ஆடும் கூத்து கலைஞனின் வாழ்வில் நடக்கும் போராட்டங்கள், காதல், அவமானம், பாசம், ஏமாற்றம், வேதனை, லட்சியம், உளவியல் ரீதியான சவால்கள் என மிக மிக சீரியஸான விஷயங்களை கூட ஜனரஞ்சகமாகவும் அதேசமயம் நேர்த்தியான திரைக்கதை மூலம் அழுத்தமான காட்சிகளால் பார்ப்பவர்களை சிரிக்கவும், கலங்கவும் வைத்திருக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறிய பட்ஜெட் படம் மூலம் மண் மணம் மாறாத ஒரு தரமான கூத்துக் கலைஞரின் வாழ்க்கையை சிறப்பாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். படத்தின் இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன். மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு பழகும் கூத்து வாத்தியாருக்கும், பெண் வேடமிட்டு ஆடும் கூத்து கலைஞனுக்குமான உறவில் உள்ள சிக்கலையும், அதன் பின்னணியில் உள்ள அரசியலையும், பாரி எதிர்கொள்ளும் வன்மங்களையும், அதை எதிர்த்துப் போராடும் அவருடைய மனோதிடத்தையும், இதற்கு நடுவே வரும் குடும்பங்களின் நிலையையும் மிகச் சிறப்பாகவும், ஆழமாகவும் அதே சமயம் மனதிற்கு நெருக்கமான திரைக்கதை மூலம் கொடுத்து பார்ப்பவர்களுக்கு மனதில் பதியும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்து முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், நேர்த்தியாகவும் நகரும் இத்திரைப்படம் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் சம்பந்தப்பட்ட காட்சிகள், கூத்து சம்பந்தப்பட்ட காட்சிகள் என மிக நீண்டு ஆங்காங்கே சில அயற்சியைக் கொடுக்கிறது. இருப்பினும் கதையின் கருவும், கதை மாந்தர்களின் கதாபாத்திரமும், கதை கருவின் ஆழமும், கதை சொன்ன விதமும் எதார்த்தமாக அமைந்து இரண்டாம் பாதியையும் சற்றே காப்பாற்றி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. முதல் பாதியில் இருந்த திரைக்கதை வேகமும், சுவாரசியமும் இரண்டாம் பாதியிலும் நீண்டிருந்தால் இன்னமும் இப்படம் சிறப்பாக அமைந்திருக்கும். இரண்டாம் பாதியில் பின்புறம் வரும் காட்சிகளில் உள்ள குழப்பங்களை சற்றே நிவர்த்தி செய்யும் படியாக திரைக்கதை அமைத்திருக்கலாம். அதேபோல் பாரி கதாபாத்திரம் ஆரம்பித்த விதம் எப்படி இருந்ததோ அதன்படியே படம் முழுவதும் பயணித்து இருந்தால் இன்னமும் சுவாரசியமாக அமைந்திருக்கும். இருந்தும் இந்த சமூகத்திற்கு தற்பொழுது தேவையான ஒரு கருத்தை மிகத் தெளிவாகவும், அதேசமயம் சுவாரசியமாகவும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது இந்த ஜமா திரைப்படம்.
தெருக்கூத்து கலைஞராகவும், இயக்குநராகவும் இரட்டை வேலை செய்துள்ள பாரி இளவழகன் அந்த கதாபாத்திரமாகவே அப்படியே மாறி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். பெண்களுக்கே உண்டான நடை, உடை, பாவனை என அனைத்தையும் அப்படியே தன் உடல் மொழியின் மூலம் கொடுத்து பார்ப்பவர்களுக்கு சிரிப்பையும், அதேசமயம் அழுத்தமான நடிப்பையும் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் இவரது அர்ப்பணிப்பு மிக அழகாக தெரிகிறது. குறிப்பாக இவர் ஒரு சிங்கிள் ஷாட்டில் எடுத்த காட்சி மிகச் சிறப்பாக அமைந்து அதில் நடித்த நடிகர்களையும் மிகச் சிறப்பாக வேலை வாங்கி தானும் சிறப்பாக நடித்திருக்கிறார். கூத்து வாத்தியாராக வரும் சேத்தன் மிக சிறப்பாக நடித்து இனிவரும் படங்களில் மிகப்பெரும் வில்லன்கள் கதாபாத்திரத்தை பெறப்போகிறார். அதற்கு இந்த ஒரு கதாபாத்திரமே போதுமான அளவாக அமைந்திருக்கிறது. சின்ன சின்ன முக பாவனைகள், வசன உச்சரிப்பு போன்றவைகள் மூலமே சிறப்பான வில்லத்தனம் காட்டி பயமுறுத்தி இருக்கிறார்.
கூடவே இருந்து குழிப்பறிக்கும்படியான இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார். விடுதலைப் படத்திற்கு பிறகு மிகச் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி கவனம் பெற்று கைதட்டலும் பெற்று இருக்கிறார். தமிழ் சினிமாவின் புதிய வில்லன் சேத்தன். பாரியின் தாயாக வரும் கே.வி. என் மணிமேகலை வழக்கமான தாயாக வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு மனதில் பதிகிறார். அதேபோல் வழக்கமான நாயகியாக வரும் அம்மு அபிராமி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்று இருக்கிறார். இப்படத்தில் வரும் மற்ற நடிகர்கள் அனைவருமே புது முகங்களாக இருக்கின்றனர். குறிப்பாக பாரின் தந்தையாக வரும் நடிகர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைப் போன்று பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்றொரு நடிகரும் சிறப்பான பங்களிப்பை படத்திற்கு கொடுத்திருக்கிறார். இவர்களை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களில் வரும் அனைவருமே அவரவர் வேலையும் மிக சிறப்பாக செய்து இப்படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் சிங்கிள் ஷாட் காட்சி மிக மிக சிறப்பு. அதேபோல் இரவு நேர காட்சிகளையும், தெருக்கூத்து காட்சிகளையும் மிகச் சிறப்பாக கையாண்டு நேர்த்தியான படமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ராகதேவன் இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே மிக மிக சிறப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் கிராமிய இசையில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். ஒரு தெருக்கூத்து கலைஞன் சந்திக்கும் பிரச்சனைகளையும், சமூகம் அவனை நடத்தும் விதத்தையும், அதனால் அவன் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அவன் எப்படி கடந்து தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுகிறான் என்பதை மிகவும் ஜனரஞ்சகமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லி நாடகக் கலை மூலம் சுவாரசியமான திரைக்கதையுடன் கூடிய நல்ல படமாக இந்த ஜமா அமைந்து இருக்கிறது.
ஜமா - சிறப்பு!