
அஜித்தின் உல்லாசம், விசில் படங்களுக்குப் பிறகு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் தி லெஜண்ட். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்கள் மூலம் ஸ்கிரீனை தெறிக்கவிடும் லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் தி லெஜண்ட் படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா?
வெளிநாட்டில் மிகப் பெரிய விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன், தன் சொந்த ஊருக்கு பயன்படும் வகையில் தன் மக்களுக்காக உழைக்க தமிழ் நாட்டுக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் தன் பால்ய நண்பன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிகிறார். குறிப்பாக ரோபோ ஷங்கரின் குழந்தைகள் பிறப்பிலேயே சர்க்கரை நோயுடன் பிறந்து மிகவும் அவதிப்படுகின்றனர். இதையடுத்து ஒருநாள் ரோபோ ஷங்கர் திடீரென சர்க்கரை நோய் அதிகமாகி மரணமடைகிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த விஞ்ஞானி லெஜண்ட் சரவணன் சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாக மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவருக்கு எதிரிகளால் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. இந்த தடைகளை எல்லாம் உடைத்து சக்கரை நோய்க்கு அவர் மருந்து கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்கியிருக்கும் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் பார்ப்பதற்கு பிரம்மாண்டமான தரமான படமாக இப்படத்தை இயக்கி உள்ளனர். பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு நிகராக பிரம்மாண்டமாக இப்படத்தை நல்ல மேக்கிங்கில் உருவாக்கி உள்ளனர்.
அதேபோல் குறிப்பாக மெடிக்கல் மாபியா, ஜுவனெய்ல் டயபெட்டிக்ஸ் போன்ற சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான விழிப்புணர்வு கருத்தை கதைக் கருவாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்கள் அதை ரசிகர்களின் மனதின் வழியே சரியாக கடத்தும்படி இயக்கியுள்ளனர். இதையெல்லாம் சரியாக செய்த இயக்குநர்கள் ஏனோ திரைக்கதையில் சற்று கோட்டை விட்டுள்ளனர். ஆங்காங்கே தொய்வு ஏற்படும்படியான திரைக்கதை பார்ப்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே அயர்ச்சி ஏற்படுகிறது. இருந்தும் லெஜண்ட் சரவணனின் ஸ்கிரீன் பிரசன்ஸ் இவை அனைத்தையும் சரிக்கட்டும் முயற்சியில் பார்ப்பவர்களுக்கு கலர்ஃபுல் விருந்து படைத்துள்ளது.
முதலில் இந்த வயதிலும் சினிமா மேல் இவ்வளவு பேஷனேட்டாக இருப்பதற்கே லெஜண்ட் சரவணனுக்கு வாழ்த்துக்கள். கதைத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட லெஜண்ட் சரவணன் நடிப்பு, நடனம், ஆக்ஷன் காட்சிகள் என படம் முழுவதும் அதகளப்படுத்தி உள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும், பாடல் காட்சிகளும் தான் ஒரு முதல் பட நடிகர் என்பதை தாண்டி தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் முகபாவனைகள் மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வெளிக்காட்டி இருக்கலாம். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக முதல் பாதியில் நாயகி கீத்திகாவும், இரண்டாம் பாதியில் நாயகி ஊர்வசி ரெளடெளாவும் வழக்கமான நாயகிகள் என்ன செய்வார்களோ அதையே செய்துவிட்டு சென்றுள்ளனர். அதேபோல் பிரம்மாண்ட படம் என்ற விளம்பரங்களுக்கு ஏற்றவாறு படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதில் குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி படமாக இப்படம் அமைந்துள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக விளையாடி ஆங்காங்கே ரசிகர்களை சிரிப்பு மூட்டி உள்ளார். இவரைப் போலவே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ ஷங்கர் மற்ற நடிகர்களின் மத்தியில் தனித்து தெரிகிறார். இவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு நெகிழ்ச்சி கூட்டியுள்ளது. இவர்களுடன் இணைந்து மயில்சாமி, விஜயகுமார், லதா, சச்சு, முனீஸ்காந்த், யோகிபாபு, தம்பி ராமையா, ஹரிஷ் பெரோடி, நாசர், லிவிங்ஸ்டன், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அமுதவானன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துவிட்டு சென்றுள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மோசலே மோசலு பாடல் ஹிட் ரகம். பின்னணி இசை படத்திற்கு பிளஸ். அதேபோல் அவரது டிரேட் மார்க் இசை ஆங்காங்கே படம் முழுவதும் பரவி உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஒரு பிரம்மாண்ட படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார். படம் முழுவதும் கலர்ஃபுல்லாக அமைந்து பார்ப்பவர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம், நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேடி - ஜெர்ரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் போன்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம், ரசிகர்களை பலவகைகளில் குஷிப்படுத்துகிறது. படத்தின் நீளத்தையும், திரைக்கதை அமைப்பையும் இன்னும் கொஞ்சம் மாற்றியிருந்தால் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.
தி லெஜன்ட் - கண்களுக்கு பிரம்மாண்டம்!