மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'.
'இசை கொத்துற கல்லுல இருக்கும், கத்துற குழந்தை கிட்ட இருக்கும், குத்துற கொலைகாரன் கிட்ட இருக்கும், இதோ இவருகிட்ட இருக்கும், அவருகிட்ட இருக்கும், நம்ம நண்பர்கிட்ட இருக்கும், அவ்வளவு ஏன் உங்க கிட்ட கூட இசை இருக்கு' என்று வடிவேல் காமெடியில் வரும் காமெடியான வசனத்தில் ஒரு சீரியஸான ஆழமான உட்கருத்து உள்ளது. 'சர்வமும் தாள மயம்... இப்படியிருக்க இசை இவருக்குத்தான் வரும் அவருக்குத்தான் வரும் என்பது பொய்' என்று கர்நாடக சங்கீதத்தில் நெடுங்காலமாக நிலவி வரும் சாதி அடிப்படையிலான இறுக்கத்தை இடித்துப் பார்க்கும் இன்னொரு கல்லாக வந்துள்ளது 'சர்வம் தாள மயம்'. நிஜத்தில் டி.எம்.கிருஷ்ணா, பா.ரஞ்சித்தின் 'நீலம்' அமைப்பு உள்ளிட்ட பலரும் செய்து வரும் வேலையை திரையில் செய்ய முயன்றிருக்கிறார் ராஜீவ் மேனன். எல்லா ஏற்றத்தாழ்வுக்கும் இதுதான் காரணம் என யார் மீதும் பொதுவாக குற்றம் சாட்டாமல் பிரச்சனையின் அடுக்குகளை அணுக முயன்றிருக்கிறார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்கின்ற (ஜி.வி.பிரகாஷ்) ஒரு தீவிர விஜய் ரசிகராக வருகிறார். விஜய் படங்கள் வெளியாகும் நாட்களில் இருக்கின்ற முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தியேட்டர்களில் டிரம்ஸ் அடித்து அலப்பறை செய்கிறார். அப்போது ஒரு பிரச்சனையில் இவருக்கு தலையில் அடிபட்டு நர்சாக வரும் அபர்ணா பாலமுரளியிடம் சிகிச்சை எடுக்கிறார். அந்த சமயம் இவருக்கு அபர்ணா மீது காதல் வர வெட்டியாக சுற்றும் ஜி.வி.பிரகாஷின் காதலை ஏற்க மறுத்து ஒழுங்காக ஒரு வேலை செய்து உருப்பட சொல்கிறார் அபர்ணா முரளி. ஜி.வி.பிரகாஷின் தந்தை குமரவேல் மிருதங்கம் செய்யும் தொழிலாளி. இவர் செய்த மிருதங்கத்தை மாபெரும் மிருதங்க வித்வானாக வரும் நெடுமுடி வேணுவிடம் டெலிவரி செய்ய ஜி.வி.பிரகாஷ் அவரது கச்சேரி நடக்கும் சபாவிற்கு செல்கிறார். அங்கு நெடுமுடி வேணுவின் இசை கச்சேரி பார்க்கும் ஜி.வி.பிரகாஷுக்கு தானும் ஒரு மிருதங்க வித்வானாக ஆகவேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நெடுமுடி வேணுவிடம் சிஷ்யனாக சேர முயற்சி எடுக்கிறார். இவர் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, பெரிய மிருதங்க வித்வானாக உருவானரா, காதலில் ஜெயித்தாரா? பதில்தான் 'சர்வம் தாள மயம்'. இந்தக் கேள்விகளுக்கு விடை மட்டுமல்லாமல் மேலும் பல கேள்விகளையும் கொண்டிருக்கிறது படம்.
ஒரு நல்ல கதை, அந்தக் கதையை காட்சிப்படுத்திய விதமும் அருமை. குறிப்பாக படத்தின் இசை மற்றும் சப்தம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் மிக நுட்பமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன். பெரும்பாலும் கர்நாடக இசைக் கலைஞர்கள் எல்லோரும் முன்னேறிய சமூகத்திலிருந்து வந்தவர்களாகவே இருக்க, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து தனக்குக் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாத இசை துறையில் நுழைந்து அதில் இருக்கும் சவால்களை ஜி.வி.பிரகாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன்.
குறிப்பாக பத்ம பூஷன் விருது வாங்கிய மிகப்பெரும் மிருதங்க வித்வானாக நெடுமுடி வேணு மற்றும் அந்த மிருதங்கத்தை செய்யும் தொழிலாளியாக குமரவேல், இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அசத்தி படத்தை தாங்கிப் பிடித்துள்ளனர். இவர்களின் இயல்பான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அதுவும் நடிப்பில் நெடுமுடி வேணுவின் அனுபவமும் கைதேர்ந்த அணுகுமுறையும் அயர்ச்சி ஏற்படும் இடங்களை எல்லாம் சரி செய்து ரசிக்கவும் நெகிழவும் வைக்கிறது. 'செத்துப்போன மாட்டுக்கும், பட்டுப்போன மரத்திற்கும் உயிர் கொடுக்கிறது தனி கலை', 'நீ ஜெயிச்ச ஒரு வித்துவான பார்த்துட்டு பேசுற நான் தோத்த 100 தொழிலாளியை பார்த்துட்டு பேசுறேன்', 'எதுக்குடா ஓடற ஓடிப் போய் ரயிலையா பிடிக்கப் போற' போன்ற ராஜீவ் மேனனின் எளிமையானதும் அதே சமயம் அழுத்தமானதுமான வசனங்களை இவர்கள் இருவரும் பேசி, காட்சிகளுக்குப் புத்துயிரூட்டி உள்ளனர். அந்த அளவிற்கு படத்திற்கு வசனம் பெரும் பலமாக அமைந்துள்ளது.
துருதுரு நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷுக்கும் அபர்ணா முரளிக்கும் உண்டான காதல் காட்சிகளை இன்னும் கூட கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம். குறைவான காட்சிகளால் காதல் அழுத்தமில்லாமல் போகிறது. ஜி.வி.பிரகாஷ் எதார்த்த நாயகனாக நடித்துள்ளார். பல இடங்களில் எதார்த்தமாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். அதற்கு சில இடங்களில் கொஞ்சம் பலனும் கிடைத்துள்ளது. அபர்னா முரளிக்கு அதிக வாய்ப்பில்லையென்றாலும் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்துள்ள வினித், டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர். என்றாலும் இவர்கள் பாத்திரங்கள் மனதிலிருந்து தள்ளியே நிற்கின்றன.
என்னதான் படத்தில் இத்தனை விஷயங்கள் நன்றாக இருந்தாலும் படம் பார்ப்பவர்கள் மனதில் பேசப்படும் விஷயம் வீரியமாகப் பதியவில்லை. படத்தின் கதையில் இருந்த அழுத்தம் காட்சிப்படுத்துதலில் இல்லாதது படத்திற்கு மைனஸ். கர்நாடக இசை, மிருதங்கம், அதை பயிலும் ஆசை என சாமானிய ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத விஷயங்களை பேசும்போது இன்னும் நெருங்கி வந்து கதை சொல்லவேண்டும். பல காட்சிகள் செயற்கையாக இருப்பது போன்ற உணர்வு. இரண்டாம் பாதியில் ஜி.வி.பிரகாஷின் பயணம், இசையாக நமக்கு நல்ல அனுபவம், ஆனால் படமாக சற்றே நீளம்.
ராஜீவ் மேனன் - ஏ. ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதற்கு முன் வெளியான படங்களின் பாடல்கள் மற்றும் இசை நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதிலும் குறிப்பாக இந்தப் படம் இசை சம்பந்தப்பட்ட படம் வேறு. அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளார் இசைப்புயல். இசையும் ஒலியும் இந்தப் படத்தின் இன்னொரு நாயகன். படத்தில் பிரதானமாக வரும் மிருதங்கக் காட்சிகளும், வாத்தியங்களின் ஒலியும், இசையும், மெல்லிய ஒலிகளும் ஹாலிவுட் தரத்தில் பிரமிப்பூட்டுகின்றன. ஆனாலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வந்த பாடல்களை ஒப்பிட்டால் சற்று குறைவுதான். ரவி யாதவின் ஒளிப்பதிவில் சர்வமும் வண்ணமயம்.
சர்வம் தாள மயம் - சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் சொன்ன விதத்தில் இல்லை. மற்றபடி ஒரு நல்ல இசைப் படம்.