குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது?
மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.
ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம்.
டியர் - பாவம்!