Skip to main content

சாதி சங்கங்களிடம் கோலிசோடா2 கேட்ட கேள்வி...!

Published on 16/06/2018 | Edited on 18/06/2018

தங்களுக்கென அடையாளமில்லாத மூன்று இளைஞர்கள், தங்கள் உழைப்பின் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், அதிகாரத்திலும் பணத்திலும் கொழுத்த வேறு மூவர் இவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறார்கள், தடுக்கிறார்கள். அழுத்த அழுத்த அழுத்தம் தாங்காமல் வெடித்துப் பொங்கும் 'கோலிசோடா' படத்தின் அடிப்படைக் கதைதான் கோலிசோடா 2வுக்கும். ஆனால், களமும் மனிதர்களும் பிரச்சனைகளும் வேறு.

 

gst 1



தாதா தொழிலதிபர் ஒருவரிடம் ஓட்டுநராக வேலை செய்யும் பரத் சீனி, ஸ்மார்ட் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் வினோத், புரோட்டா கடை பாஸ்கெட் பால் பிளேயர் எசக்கி பரத் மூவரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல முயலும்போது பணமும் அதிகாரமும் வாய்ந்த செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, வின்சென்ட் செல்வா மூவரும் தனித்தனியே இவர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றனர். சமுத்திரக்கனி எனும் புள்ளியில் நல்லவர்கள் ஒன்று சேர சாதி எனும் புள்ளியில் கெட்டவர்கள் ஒன்று சேர யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கோலிசோடா2.

 

 


படமெங்கும் எளிய மனிதர்களின் மகிழ்ச்சி, சவால், அன்பைக் காட்டியது, 'பேபி காலிங் பேபி' ரிங்டோன், 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்னு போடு உடனே ஷேர் பண்ணுவாங்க' என்ற கிண்டல் வசனம், 'இவங்க இருக்கும்போது சாமி படம் எதுக்குப்பா' என்று காந்தி, அம்பேத்கர், பெரியார் படங்களைக் காட்டுவது என 'விஜய் மில்டன் ஸ்பெஷல்'கள் படத்தில் நிறைய உண்டு. மூன்று இளைஞர்களின் கதையையும் சொல்லி அவர்களை ஒன்றாக்குவதற்குள் படத்தின் இடைவேளை வந்துவிடுகிறது. இந்த அவசரத்தில் மூவரும் பார்ப்பவர்கள் மனதில் பதியத் தவறுகிறார்கள். கோலிசோடா 1இல் அந்த நான்கு சிறுவர்களின் வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது இந்த வேலையை எளிமையாக்கியிருக்கும்.

 

 

samuthirakani



காதல், முன்னேறும் நோக்கம், சிக்கல்கள், சமுத்திரக்கனியின் அன்பு, வில்லன்கள் கொடுக்கும் பிரச்சனை என முதல் பாதி விறுவிறுவென செல்ல, பிரச்சனையை சந்திக்கும் இரண்டாம் பாதிதான் படத்திற்கு பிரச்சனை. சத்தமான வசனங்கள், பறந்து பறந்து போடும் சண்டையென படம் சற்றே கட்டுப்பாட்டை மீறிய வேகத்தில் செல்கிறது. அதுவும் நிறுத்தி நின்று தத்துவ வசனம் பேசிக்கொண்டே வில்லனை அடிப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம். அதுபோல தற்செயல்களும் அதிகம். தற்செயலாக இவர் அவரை சந்திப்பது, தற்செயலாக இவர் அங்கு இருப்பது என்று பல தற்செயல்கள். தற்செயலாக ரோகிணிக்கும் மகள் சுபிக்ஷாவுக்கும் ஒரே போன்ற காதல் கதை அமைவதெல்லாம் அதீத தற்செயல். படம் முழுவதும் வசனங்கள் நன்றாக இருக்க (தனித்தனியாகவாவது) அந்த வங்கி மேலாளர் பேசும் வசனம் சற்று ஓவர். வில்லத்தனம் செய்பவர்கள் யார் நேரடியாக இப்படிப் பேசுவார்கள்?

 

 


மூன்று இளைஞர்களில் பரத் சீனி, எசக்கி பரத் இருவரும் இயல்பாக நடித்து விட வினோத் மட்டும் சற்று தடுமாறுகிறார். சமுத்திரக்கனிக்கு இந்தப் பாத்திரம் நமது பிரதமருக்கு வெளிநாடு செல்வது போல. மிக எளிதாக, மகிழ்ச்சியாக செய்திருக்கிறார். மூன்று வில்லன்களும் சிறப்பு. நாயகிகள் மூவரும் எளிமையாகக் கவர்கின்றனர். ரோகிணி, ரேகா இருவருக்கும் அளவான பாத்திரங்கள். படத்தின் 'காஸ்டிங் சர்ப்ரைஸ்' கெளதம் மேனன், அதுவும் காவல்துறை அதிகாரி 'ராகவனா'க. ஆனால், சில காட்சிகள் மட்டுமே பெரிய தாக்கமில்லாமல் வந்து செல்கிறார்.

 

 

gst villains



'பொண்டாட்டி நீ' பாடல் பல மாதங்களாக யூ-ட்யூப் ஹிட். அச்சு ராஜாமணியின் இசையில் அந்தப் பாடல் மனதில் நிற்க மற்ற பாடல்கள் கதைக்கு வேகம் கொடுக்கின்றன. பின்னணி இசையும் விறுவிறுப்பைக் கூட்ட முயன்றிருக்கின்றது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் வழக்கம் போல கோணங்களும், உண்மைக்கு அருகிலிருப்பது போல் உணர வைக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. எடிட்டர் தீபக்குக்கு ஒரு 'ஹார்டின் ஸ்மைலீ' போடலாம். சாதாரண சினிமா ரசிகரையும் 'எடிட்டிங் என்ற ஒன்றால் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பான அனுபவமாக மாற்ற முடியும்' என்று உணர வைத்திருக்கிறார். ஆனாலும் அதீதங்கள் நிறைந்த காட்சிகளால் படம் சற்றே சறுக்குகிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகள் பறந்து, விழுந்து, தாவிக் குதித்து, மரத்தில் ஏறி என அவ்வப்போது கால்கள் தரையில் படாமல் நிகழ்வது சற்றே நெருடல்.

தமிழகத்தில் நடந்த பல சாதி ஆணவ, காதல் கொலை சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன சாதி சங்கக் காட்சிகள். 'உங்கள் சமுதாயத்தில் காதல் நடந்தால் தடுக்கும் நீங்கள், எத்தனை ஏழை இளைஞர்களுக்கு உதவியிருக்கிறீர்கள்?' என்று ஒரு காட்சியில்  கேட்கிறார் நாயகர்களில் ஒருவர். நல்ல கேள்விதான்.

கோலிசோடா - பொங்கியிருக்கிறது, ஆனால் சீற்றம் குறைவு.    




                         

    

சார்ந்த செய்திகள்